தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக்.6 தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று (5.10.2021) ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

493 குழந்தைகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கரோனா நோய் பரவலை தடுக்கும் பணியுடன், டெங்குவை ஒழிப்பதற்கும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளோடு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் மூலம் எந்த வகையான காய்ச்சல் என கண்டறியப்பட்டு வருகிறது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மிகச் சிறப்பான, மகத்தான மருத்துவ சேவையை டாக்டர்கள் செய்கின்றனர். இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு பாதிக்கப்பட்டு 493 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 449 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 41 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திரா, திருவண்ணாமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லீரல் சிகிச்சை: தங்களது குழந்தைகளுக்கு கல்லீரல் சிகிச்சை செய்ய உள்ள பெற்றோர்கள், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பெற்று பயனடைந்திட கேட்டுக்கொள்கிறோம். 1 ஆண்டாக குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசிகளை கடந்த கால அரசு நிறுத்தி வைத்திருந்தது. ரூ.12 ஆயிரம் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் போடவேண்டிய தடுப்பூசிகளை முதலமைச்சர் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு போட அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 288 பேருக்கு போடப்பட்டுள்ளது.

10ஆம் தேதி - 5ஆவது தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு கரோனா தடுப்பூசி போடும் பணியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 30 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. வரும் 9ஆம் தேதி மாலைக்குள் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 64 சதவீதம் பேரும், 2ஆவது தவணையை 22 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதத்தை அடைந்துவிடுவோம்.

4 ஆயிரத்து 800 செவிலியர்கள்

தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் இதுபோன்ற பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 4 ஆயிரத்து 800 செவிலியர்களை சேர்ப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியாளர்களை அதில் சேர்ப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவினை அமைத்திருக்கிறோம். மிக விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment