ஆப்கானிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை - உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

ஆப்கானிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை - உயிரிழப்பு

உலக உணவுத் திட்ட அமைப்பு - எச்சரிக்கை

வாசிங்டன், அக்.28 உரிய நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் லட்சக்கணக்கான ஆப்கானியர்களும், குழந்தைகளும் உயிரிழக்கக் கூடும் என்று உலக உணவு திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைமை இயக்குநர் பிஸ்லே கூறும்போது, ஆப்கான் மக்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பசியால் குழந்தைகள் இறக்கப் போகிறார்கள். நிலைமை மோசமாகப் போகிறது. நிதி வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆப்கான் மக்களும், குழந்தைகளும் இறப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் 2 மாதங்களில் கடும் பட்டினிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், உலக நாடுகள் இதனை உணரவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, ரஷ்யா தலைமையில் இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் கடந்த வாரம் நடந்தது. இதில் மனிதாபிமான உதவிகள் ஆப்கானிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பெய்ஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைப்பு

பெய்ஜிங், அக்.28 பெய்ஜிங் மாரத்தான் வருகிற 31-ஆம்தேதி நடைபெற இருந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் 11 மாகாணங்களில் 133 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு கூறியுள்ளது.அவர்கள் அனைவருமே டெல்டா வகை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட நான்ஜிங் கரோனா பரவலுக்கு பிறகு இது தான் மிக பெரிய பரவலாக கருதப்படுகிறது. மேலும் வரக்கூடிய நாட்களில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் கரோனா தொற்று அதிகரிப்பதால், பெய்ஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த 1981ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பெய்ஜிங் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

 


No comments:

Post a Comment