பாராட்டு விழா - வேந்தர் கி.வீரமணி பங்கேற்று உரை
தஞ்சை, அக்.6 கடந்த 4.10.2021 அன்று பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில், பணித் தோழர்கள் கூட்டத்தில், இணை துணைவேந்தர் தேவதாஸ் பணி நிறைவு பாராட்டு விழாவில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மிகச் சிறந்த நாணயமும், ஒழுக்கமும்,
ஆற்றலும் உள்ளவர்
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஆஃப் டெக்னாலஜி என்ற சிறப்புமிகுந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆற்றல்மிகு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் வேலுசாமி அய்யா அவர்களே,
இந்தப் பல்கலைக் கழகத்திலே பல ஆண்டுகள் தன்னுடைய அயராத உழைப்பைத் தந்து, இதனுடைய வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து, ஏன் இன்றைக்கு அவர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்தாலும்கூட, என்றைக்கும் நமக்குத் தோன்றாத் துணையாக இருக்கக்கூடிய ஒரு பெரியார் கொள்கைவயப்பட்டவர்- மிகச் சிறந்த நாணயமும், ஒழுக்கமும், ஆற்றலும் உள்ள ஒருவர் என்ற பெருமைக்குரிய இணை துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் தேவதாசு அவர்களே,
இந்நிகழ்ச்சியில் நம்மை அனைவரையும் வரவேற்ற, பதிவாளர் பொறுப்பை ஏற்கக்கூடிய டாக்டர் பி.கே.சிறீப்பிரியா அவர்களே,
சிறப்பான வகையில், டீன் ரிசர்ச் என்ற பொறுப்பிலே இருந்துகொண்டு, அருமையான பணியை நாள்தோறும் செய்து கொண்டிருக்கக்கூடிய பேராசிரியர் டாக்டர் எஸ்.குமரன் அவர்களே,
இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பேராசிரியர் டாக்டர் வி.கே.சண்முகவேலு அவர்களே,
இங்கே சிறப்பாகக் குழுமியுள்ள அருமை சக பணித் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய பல்கலைக் கழகப் பேராசிரியப் பெருமக்கள், கூட்டுப் பணித் தோழர்கள்!
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், இன்றைக்கு. உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய டைகிறேன். இது ஒரு நல்ல சிறப்பான தருணம். பல் கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்றது என்று சொன்னாலும்கூட,
அப்போதுகூட கிட்டாது - நம்முடைய பணித் தோழர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியப் பெருமக்கள், கூட்டுப் பணியாளர்களாக எங்களோடு இருக்கக்கூடிய உங்களைப் போன்ற கல்விக் குடும்பம் - நம்முடைய கல்விக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத் திருக்கிறது. அனைவருக்கும் அன்பான வணக்கம்.
உங்களையெல்லாம் நலத்தோடு இங்கே சந்திப்பதில், இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு சிலர்கூட பாதிக்கப் பட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன், மிகுந்த வேத னையும், வருத்தமும் அடைந்தோம்.
நேரிடையாக உங்களைச் சந்தித்துக் கொண்டி ருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு நாளும், யார், யார் என்னென்ன பணி செய்து கொண்டிருக்கிறார்கள்? யார், யாருடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும், நாம் துறையின்மூலமாகவும், மற்ற மற்ற தகவல்கள் குறிப்புகள் மூலமாகவும் நான் அறிந்துகொண்டேதான் இருப்பேன். கவலையோடு இருப்போம். காரணம், இது நம்முடைய கல்விக் குடும்பம்.
பெரியாருடைய கல்வி நிறுவனங்கள் என்று சொன்னாலே, இந்தப் பல்கலைக்கழகம் உள்பட - எல்லோருமே நாம் கூட்டுப் பணித் தோழர்கள்.
இதில் வேந்தர், துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர் என்றெல்லாம் இருப்பது பொறுப்பு கள் - அவ்வளவுதான்.
நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொருவருக்குப் பதில் சொல்லவேண்டும் என்பதற்கு, கடமையாற்றவேண்டும் என்பதற்காக வைத்திருக்கக்கூடிய பொறுப்புகள்தான் அவை.
நாம் எல்லோரும் ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடி யவர்கள் எப்படி அன்போடு, வாஞ்சையோடு, பாசத் தோடு, கடமை உணர்வோடு, நேர்மையோடு நடந்து கொள்வார்களோ, அதேபோல, நடந்துகொள்ளக்கூடிய ஓர் அற்புதமான அமைப்பாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறது.
இங்கு வராத தலைவர்களே கிடையாது!
மற்ற பல்கலைக் கழகங்கள், உலகத்தின் பார்வை யோடு இல்லை. ஆனால், நம்முடைய பல்கலைக் கழகத்தை, பல பேரும் உலக அளவிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அளவில், இங்கு வராத தலைவர்களே கிடையாது - பிரதமர் உள்பட - குடியரசுத் தலைவரிலிருந்து எல்லோரும் வந்திருக்கிறார்கள்.
இந்தப் பெருமை இந்தப் பல்கலைக் கழகத்தைச் சாரும்.
பல்கலைக் கழகத்தைச் சாரும் என்று சொன்னால், அதற்கு என்ன பொருள் என்று சொன்னால், அதற்காக உழைக்கின்ற உங்களையே சாரும் என்பதுதான் மிக முக்கியமானது. அதை நாம் எல்லோரும் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.
எனவே, இது ஒரு கூட்டு முயற்சி. இந்தப் பல்கலைக் கழகம் உருவானதே அந்த அடிப்படையில்தான்.
எனவேதான், உங்களையெல்லாம் ஓர் இடை வெளிக்குப் பின்பு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன்.
ஆனால், இந்த மகிழ்ச்சியைவிட, வாழ்க்கை என்பது வெறும் மகிழ்ச்சி, வெறும் இன்பம் இவற்றை மட்டுமே கலந்த ஒன்றல்ல. அப்படியே இருந்தாலும், சுவைக்காது.
அதிலே கொஞ்சம் இடையில் வருத்தமும், கொஞ்சம் துன்பமும், சோதனைகளும் கலந்திருந்தால்தான், சாத னைகளுடைய பெருமை விளங்கும்.
நம்மை அறியாமல், நாம் வருத்தத்திலே, துன்பத்திலே இருக்கிறோம்
அப்படி வரக்கூடிய வகையில், இன்றைக்கு நம்முடைய டாக்டர் தேவதாசு அவர்கள், நம்மோடு இருந்த அவர்கள், இன்றைக்கு அவருக்கு விடை கொடுத்து அனுப்பக்கூடிய ஒரு பிரிவு உபசார நிகழ்ச் சியாக நடத்துகின்றோம் என்று நினைக்கின்றபொழுது, நம்மை அறியாமல், நாம் வருத்தத்திலே, துன்பத்திலே இருக்கிறோம்.
ஆனால், ஒரே ஒரு ஆறுதல் என்னைப் பொறுத்த வரையில். டாக்டர் தேவதாசு அவர்களுடைய பெருமை களைப்பற்றியும், அவருடைய அனுபவங்கள், இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய வளர்ச்சிக்கு சிறப்பாகத் துணை நின்றன என்பதை நம்முடைய பதிவாளர், பேராசிரியர் குமரன், அய்யா துணைவேந்தர் ஆகியோர் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள்; நீங்களும் அதை அறிவீர்கள்.
குறிப்பாக அவருடைய தொடர்பு என்பது எங்களைப் பொறுத்தவரையில், வேந்தர், இணை துணை வேந்தர் என்ற அடிப்படையில், அந்த உறவு மட்டும் எங்களிடையே கிடையாது. அவர் மாணவப் பருவத்தில் இருந்த காலந்தொட்டே, பகுத்தறிவாளராக இருந்து, அறிமுகமாகி, நாங்கள் ஒரு கொள்கைக் குடும்ப உறவோடு இருக்கக் கூடியவர்கள். அது என்றைக்கும் நீடிக்கும்.
இது கல்விக் குடும்பம் - அதேநேரத்தில், அவர்கள் கொள்கைக் குடும்பத்தையும் சார்ந்தவர். கொள்கை உறவு என்பது ரத்த உறவுகளைவிட பலமானது என்று நான் அடிக்கடி சொல்வேன்.
அந்த உணர்வோடு, அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பொறுப்பிலும் இருந்த காலத்தில், பெரியார் திடலோடு அவர்கள் தொடர்பில் இருப்பார்கள். எங்களோடு தொடர்பில் இருப்பார்கள்.
அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற எந்த நிகழ்ச்சியானாலும், அவருடைய வாழ்விணையரா னாலும், அவருடைய பிள்ளைகளானாலும் ஒரு குடும் பத்தில் இருக்கக்கூடிய உறவுகள்போலத்தான் பழகு வார்கள்; நாளைக்கும் அப்படித்தான் இருப்பார்கள், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
அப்படிப்பட்ட நிலையில், இந்தப் பொறுப்புக்கு அவரை நாங்கள் அழைத்தபொழுது, மகிழ்ச்சியோடு வந்து தன்னுடைய தொண்டை கொடுத்தார்.
இதை ஒரு தொழிலுக்கு வருகிறோம் என்று அவர் கருதவில்லை. அவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொண்டு செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் அந்தப் பொறுப்பை கருதினார்.
இப்பொழுதும்கூட அவர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதன்மூலம், அவர் ஒன்றும், வீட்டில் முடங்கிவிடப் போவதில்லை. இன்னும் அதிகமான அளவிற்குப் பயன்படக்கூடிய அளவிற்குத் தொண்டு செய்யக்கூடிய வாய்ப்புகள், அவருடைய ஆற்றலுக்கும், திறமைக்கும் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறப்பாக வரக்கூடியதை நாம் எதிர்பார்க்கிறோம். அந்த வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.
நம் மனங்களையெல்லாம் பரவசப்படுத்தியவர்
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு அவரை வாழ்த்தி வழியனுப்புவது என்பது, நாம் மிகுந்த நன்றியுணர்ச்சியோடு வழியனுப்புகிறோம், அவர் உழைத்து, அவர் பக்குவப்படுத்தி, இந்த இடங்களை யெல்லாம் செம்மைப் படுத்தி, நம் மனங்களையெல்லாம் பரவசப்படுத்தி, மிகப்பெரிய அளவிற்குச் செய்திருக்கிறார் என்பது பாராட்டத்தகுந்த ஒன்று.
அவரைப் பாராட்ட வார்த்தை இல்லை - அந்த அளவிற்கு நீங்கள் எங்கே இருந்தாலும், உங்கள் உள்ளத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் (நிகர்நிலை) இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.
சிறந்த பகுத்தறிவாளர் - பெரியார் தொண்டுக்காக இங்கே வந்தீர்கள்!
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், நம் உறவுகள் அறுபடாத உறவுகள் - பிரிக்கப்பட முடியாத பாசத்தோடு இருக்கக்கூடியவை என்பதை இந்த நேரத்தில் சிறப்பாக எடுத்துச் சொல்லி,
நீங்கள் வருவாய்க்காக இங்கே வரவில்லை -
நீங்கள் பெருமைக்காக இங்கே வரவில்லை -
நீங்கள் பெரியார் தொண்டுக்காக இங்கே வந்தீர்கள்-
சிறந்த பகுத்தறிவாளர் -
சிறந்த சமூகநீதிப் போராளியாக மனதிற்குள்ளே என்றைக்கும் இருக்கக் கூடியவர்.
தாம் பெற்ற உரிமைகளும், இன்பமும் இவ்வையகம் பெறவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்ற சமூகநீதியை தன்னுடைய வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைக்கக் கூடியவர்.
எனவே, அப்படிப்பட்டவரை, நாம் வாழ்த்தி, வழி யனுப்புகின்ற இந்த நிகழ்ச்சியில், கனத்த இதயத்தோடு நாம் அவர்களை அனுப்பினாலும்கூட, நிச்சயமாக என்றைக்கும் அவர் நம்மோடுதான் இருக்கிறார் என்று சொல்லும்பொழுது, அந்த நட்டம் - இதிலே ஈடு செய்யப்படுகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆறுதல்.
அவருடைய தொண்டுக்கு நாம் பாராட்டு!
எனவே, அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி, நாம் அவருக்கு சிறப்பு செய்வோம்.
அவருடைய தொண்டுக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்கின்றோம்.
இந்தப் பெருமைதான் அடிப்படையானது. எத்த னையோ தொழில்கள் இருக்கின்றன. இதைவிட வரு மானம் ஏராளம் வரக்கூடிய பல துறைகள் இருக்கின்றன.
மருத்துவத் துறை, தணிக்கைத் துறை, நீதித்துறை போன்றவையெல்லாம் வருமானத்தையே குறிக் கோளாகக் கொண்டவைதான். ஆனால், கல்வித் துறை என்பது இருக்கிறதே, உங்களைப் போன்றவர்கள் பணியாற்றக்கூடிய அந்தக் கல்வித் துறைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
நம்முடைய பேராசிரியப் பெருமக்களுக்கு தனி சிறப்பு உண்டு
கல்வியைப் போதிக்கக்கூடிய நம்முடைய பேராசிரியப் பெருமக்களுக்கு தனி சிறப்பு உண்டு. அதற்காக நீங்கள் எல்லாம் பெருமைப்படவேண்டும். நாம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நாம் எத்தனைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதெல்லாம் சாதாரணம்.
ஆனால், எது மிக முக்கியமானது என்று சொன்னால்,
அருமை நண்பர்களே,
சிறந்த நம்முடைய கல்விக் குடும்ப உறவுகளே,
உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன் -
நாம் நடந்து போய்க்கொண்டிருக்கும்பொழுதோ - தொடர் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதோ அல்லது விமான நிலையத்தில் இருக்கும் பொழுதோ - திடீரென்று ஒருவர் ஓடிவந்து, ‘‘அய்யா, என்று கும்பிட்டுவிட்டு, என்னை அடையாளம் தெரிகிறதா அய்யா? நான் உங்கள் மாணவனாக இருந்தேனே, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்'' என்று சொல்லும்பொழுது, அதற்கு ஈடு எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும், கிடைக்காத பெருமைதான் அது. அந்தப் பெருமைதான் சிறப்பானது.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியதைப் போன்ற மகிழ்ச்சி
எனக்கேகூட பல நாடுகளுக்குச் சென்றபொழுது, இந்த அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கிறது. "அய்யா, நான் உங்கள் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவன், மாணவி" என்று சொல்வதைக் கேட்கும்பொழுது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியதைப் போன்ற மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன்.
ஆகவே, ஒவ்வொருவரும் பெருமைப்படக் கூடிய பணியாகும் இது. நீங்கள் செய்வது வெறும் தொழில் என்று நான் கருதவில்லை.
பல கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் எல்லாம் அண்மைக்காலங்களில் மூடக்கூடிய அளவிற்கு முடக்கப்பட்டன, கரோனா காலகட்டம் என்பதால். இது எதார்த்தமான சூழ்நிலை.
எங்கள் பணித் தோழர்கள் நிலைமையைப் புரிந்தவர்கள்
என்னிடத்தில் சில துணைவேந்தர்கள், கல்வி அறிஞர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, கேட்டார் கள்; ‘‘என்ன அய்யா, நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள். நாங்கள் மூன்று மாதங்களாக ஊதியமே கொடுக்க முடியவில்லை'' என்றார்கள். நான் அவர்களுடைய பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
எங்கள் பணித் தோழர்கள் நிலைமையைப் புரிந்த வர்கள். அவர்கள் வெறும் ஊதியத்திற்காக பணி செய்யவில்லை - அறிவை விருத்தி செய்யவேண்டும் என்பதற்காக- எவ்வளவு ஒத்துழைக்க முடியுமோ அந்த எதார்த்தத்தோடு, ஒரு குடும்பத்தில், மேலும், கீழும் சூழ்நிலைகள் வருகின்ற நேரத்தில், அந்தக் குடும்பத்தில் இருக்கின்ற உறுப்பினர்கள் எல்லாம் எப்படி தங்களை அதற்கேற்ப சரி செய்துகொள்வார்களோ, அதுபோன்ற ஒத்துழைப்பு அவர்களிடமிருந்து கிடைக்கிறது.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment