வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம்

 சென்னை, நவ. 30- சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

அதில், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியற்றிற்கும் தற்போது வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 598 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் பெயர் சேர்ப்பிற்காக மட்டும் 9 லட்சத்து 44 ஆயிரத்து 26 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை-சிங்கப்பூர் இடையே

நேரடி விமான சேவை தொடங்கியது

சென்னை, நவ.30 20 மாதங்களுக்கு பிறகு சென்னை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை நேற்று (29.11.2021) முதல் தொடங்கியது.

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரணமாக பன்னாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் அனுமதியின்பேரில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.

ஆனால் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து நேரடியாக பயணிகள் விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் வந்து செல்ல மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கடந்த 25ஆம் தேதி கடிதம் எழுதினார்.

இதையடுத்து 20 மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னை, டெல்லி, மும்பைக்கு தினசரி நேரடி விமான சேவையை நேற்று முதல் தொடங்கியது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து இரவு 11.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

முன்னதாக மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை திரும்பி வந்தது. ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றது. அந்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.

சிங்கப்பூர் செல்லும் பயணிகள் 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இணைப்பு விமானமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி, நவ. 30- தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் சிறீவைகுண்டம் அணையை தாண்டி கடலில் சென்று வீணாகி வருகிறது

பாபநாசம், சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று (29.11.2021) பாபநாசம் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு மருதூர் அணைக்கட்டை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் சிறீவைகுண்டம் அணையை அடைந்தது. அங்கிருந்து அணையை கடந்து சுமார் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்குச் சென்றது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்துச் சென்றது.

இதைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வருவாய்த்துறை, காவல்துறையினர் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தண்ணீர் சில மணி நேரங்களில் கடலுக்குச் சென்று விடும். அதன்பிறகு ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment