இராஜபாளையத்தில் தமிழர் தலைவர் உரை வீச்சு
இராஜபாளையம். நவ. 2- 8, 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் தேர்வு! தேர்வு!! இவற்றுக்குப் பின்பு ‘நீட்’ தேர்வாம், பிள்ளைகளின் கதி என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? - கருத்தரங்கம்
கடந்த 18.10.2021 அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்ற ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?” தலைப்பில் கருத்தரங்கம், ‘கற்போம் பெரியாரியம்‘, ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ ஆகிய நூல்கள் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாகக் கொண்டாடவேண்டும்
இன்றைக்கு எப்படி தந்தை பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாகக் கொண்டாட வேண்டும் - உறுதி மொழி ஏற்கவேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார் களோ - அதுபோல.
அதுதானே இன்றைக்கு அவாள்களுக்கெல்லாம் வேகுகிறது!
பெரியார் கேட்பார் - கலைஞர் செய்வார்.
அதேபோன்றுதானே இன்றைக்கும் - திராவிடர் கழகம் கேட்கிறது - முதலமைச்சர் கேட்கிறாரே என்று அவாள்களுக்கு எரிச்சல்!
திராவிடர் கழகம் என்ன சொல்லுகிறது? எல் லோருக்கும் சேர்த்துத்தானே கேட்கிறது.
சமூகநீதி என்றால் என்ன?
அனைவருக்கும் அனைத்தும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்று வருவதில், பெரியாருடைய வாசகம் - அனை வருக்கும் அனைத்தும் - சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது அதைத்தான் சொன்னார்.
சமூகநீதி என்றால் என்ன?
திருக்குறளில்கூட இரண்டு வரிகள் இருக்கும் - ஆனால், இதில் இரண்டே சொல்தான் - “அனைவருக்கும் அனைத்தும்“.
அனைவருக்கும் அனைத்தும் என்றால், பார்ப்பனர் களுக்கும் சேர்த்துதான்.
மூன்று சதவிகிதம் நீங்கள் இருந்தால், மூன்று சதவிகித பங்குகளை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள்.
97 சதவிகிதம் நாங்கள் இருந்தால், எங்களுக்கு அந்த 97 சதவிகித பங்குகளை நாங்கள் அனுபவித்துக் கொள்கிறோம்.
அவரவர் பங்குகள் அவரவர்களுக்கு!
அவரவர் பங்குகள் அவரவர்களுக்கு. இதுதான், அனைவருக்கும் அனைத்தும் என்பது.
நீங்களே டாக்டராக வந்திருக்கிறீர்கள், நீங்களே என்ஜினியர் ஆகியிருக்கிறீர்களே என்று கேட்டார்கள் முதலமைச்சர் காமராசரிடம்,
“நான் தாழ்த்தப்பட்டவனை டாக்டராக்கினேன், அவர் ஊசி போட்டு எவன் செத்துப் போனான் சொல்?
நான் தாழ்த்தப்பட்டவனை என்ஜினியராக்கினேன்! அவர் பாலம் கட்டி, எந்தப் பாலம் இடிந்து போயிருக்கிறது? சொல்” என்று காமராசர் அவர்களிடம் திருப்பிக் கேட்டார்.
தகுதி - திறமை என்று சொல்லி, காலங்காலமாக மோசடி செய்கிறார்கள்!
எனவே, தகுதி - திறமை என்று சொல்லி, காலங் காலமாக நம்மை மோசடி செய்து கொண்டிருந்தார்கள்.
இன்னொன்றை உங்களுக்கு மிகச் சுருக்கமாக சொல்கிறேன்.
கல்வி உரிமை நமக்கும் உண்டு என்று சொல்லும் பொழுது, யாரையாவது மாநிலத்தில் கலந்துகொண்டு பேசினார்களா?
நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுகின்ற பொழுது, நாடாளுமன்ற நிலைக்குழுவில், எந்த மாநிலம் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோருகிறதோ, அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுக்கவேண்டும் என்று விதி இருக்கிறது.
எந்த சட்டமாக இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு
நாம் விலக்கு கேட்டோம்; விலக்கு கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு சொல்கிறது.
எந்த சட்டமாக இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. காரணம், எங்கள் நிலைமை வேறு; உங்கள் நிலைமை வேறு.
ஆகவே, எங்கள் உரிமையை நீ கேட்கும்பொழுது, நாங்கள் பார்த்துத்தான் கொடுக்கவேண்டும்; அப்படியில்லாமல், நீயே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டால் என்ன அர்த்தம்? ஆகவே, இது பகற்கொள்ளை அல்லவா? அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமல்லவா?
நிதி ஒதுக்கீட்டில், நூறு சதவிகிதம் நிதி ஒதுக்கீடு என்றால், மாநிலங்கள் எவ்வளவு செலவழிக்கவேண்டும்? 85 சதவிகிதம் மாநிலங்கள்தான் செலவழிக்கவேண்டும்; ஒன்றிய அரசு வெறும் 15 சதவிகிதமே செலவழிக்கும்.
15 சதவிகிதம் கொடுக்கின்றவன், 85 சதவிகிதம் கொடுக்கின்ற நமக்கு உத்தரவு போடுகிறான்.
18 பிள்ளைகளை நாம் நீட் தேர்விற்குப் பலி கொடுத்திருக்கிறோம்
இது என்ன அநியாயம்?
இது யாருடைய பணம்! நம்முடைய பணம்.
எனவே நண்பர்களே, 18 பிள்ளைகளை நாம் நீட் தேர்விற்குப் பலி கொடுத்திருக்கிறோம்.
இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்காகத்தான், தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லிற்று - நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்போம் என்று.
அதேபோன்று, அவர்கள் ஆட்சிக்கு வந்து 150 நாள்களுக்குள் ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினார்கள். சட்டம் என்பது முழுமையாக கையெழுத்துப் போட்ட பிறகுதான். அதற்கு முன்பு அதற்குப் பெயர் மசோதா (பில்).
அப்படி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பினார்கள். அதை ஆளுநரே வைத்துக் கொண்டிருக்கிறார்.
எதற்காக ஆளுநர் வைத்திருக்கவேண்டும்?
பை ஆர்டர் ஆஃப் தி கவர்னர் என்று சொன்னால், பெயர்தான் அவருடைய பெயரில் இருக்கும் - மாநில அரசுதான் அதற்கு ஒப்புதல் கொடுக்கும்.
நான்கு நாள்களுக்கு முன்புகூட முதலமைச்சர் ஆளுரை சந்தித்துவிட்டு வந்தார்.
செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும்!
கடந்த ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள், நாங்களும்தான் எங்களுடைய ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து இரண்டு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றினோம். அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதேபோன்றுதானே, தி.மு.க.வும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
யானையைப் பார்த்த அந்த 5 பேர்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை மிகத் தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்
தலைமையில் குழு!
இதுதான், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட கல்வியாளர்களின் குழுவினுடைய 165 பக்கங்கள் கொண்ட, புள்ளிவிவரங்களோடு உள்ள ஆய்வறிக்கை.
செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் மேற்கண்ட ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
அந்தக் குழுவில் டாக்டர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எல்லாம் ஆய்வு செய்து, நீட் தேர்வால் என்ன ஆபத்து இருக்கின்றது என்பதை தெளிவாக விளக்கி அறிக்கை கொடுத்தார்கள்.
நீட் தேர்வு என்பது -
நவீன குலக்கல்வித் திட்டம்!
கிராமப்புற பிள்ளைகள் படிக்க முடியாது
ஏழை பிள்ளைகள் படிக்க முடியாது
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் படிக்க முடியாது
இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் என்று சொல்லி, அதற்கு அத்தனைக்கும் ஆதாரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
நீட் தேர்வு ஒழிப்பிற்காக - மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்.
எப்பொழுதும் தமிழ்நாடுதான் முதன் முதலில் இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்து சொல்லும். காரணம், இது பெரியார் மண் - சமூகநீதி மண் - இங்கேதான் அந்த சரியான பார்வை இருக்கும்.
பெரியார் மண்தான் காரணம் - திராவிடர் இயக்கம்தான் காரணம்
அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திற்கு பெரியார் மண்தான் காரணம் - திராவிடர் இயக்கம்தான் காரணம் - பெரியார்தான் காரணம்.
ஆகவே, அந்த அடிப்படையில்தான் நாங்கள் இதனைச் சொல்கிறோம்.
எனவே, நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய பிள்ளைகள், கிராமத்துப் பிள்ளைகள் 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியுமா?
வழக்கின்போது நீதிபதிகள் கேட்டார்கள், இதுவரை யில் நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றவர்கள், தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் முதன் முறையாக தேர்வு எழுதியவர்கள் அல்ல. கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று, மூன்றாவது முறை, நான்காவது முறை தேர்வு எழுதியவர்கள்தான் என்றார்கள்.
ஊழலை ஒழிப்பதற்காகத்தான் நீட் தேர்வு என்றார்களே, ஒழித்துவிட்டார்களா?
ஊழலை ஒழிக்கவேண்டும் என்றுதானே நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். ஊழலை ஒழித்து விட்டார்களா?
கேள்விகளிலே கோளாறு - ஆங்கிலத்தில் ஒரு கேள்வி இருக்கிறது - தமிழில் வேறொரு கேள்வி இருக்கிறது.
பாடத் திட்டத்தில் இல்லாத விஷயத்தைக் கேட் கிறார்கள்.
இதை அத்தனையையும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அதைவிட இன்னொன்று,
ஆள் மாறாட்டம் - ஒருவருக்குப் பதில் இன்னொருவர் நீட் தேர்வு எழுதி மாட்டிக் கொண்டார்கள். கேள்வித் தாள்கள்கூட ரூ.35 லட்சத்திற்கு விற்கப்பட்டு இருக்கிறது.
நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்ட விரோதமே!
ஆகவே, நண்பர்களே! நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.
ஏழைகளுக்கு விரோதமானது.
கிராமப்புற மக்களுக்கு விரோதமானது.
தமிழ்வழியில் கல்வி படிக்கிறார்களே, நம்முடைய பிள்ளைகள் அவர்கள் யாரும் டாக்டர்களாக வர முடியாது.
இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமானால், எதிர்காலத்தில், நம்முடைய பிள்ளைகள் யாரும் டாக்டர் களாக வர முடியாது - எளிய மக்கள் வர முடியாது.
எனவே, 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் கொடுப்பவர்களால்தான் டாக்டர்களாக வர முடியும்.
எனவே, அதனுடைய நோக்கம் நிறைவேறியதா?
ஊழலுக்காக என்று சொன்னீர்களே, அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா?
ஆள் மாறாட்டத்தைத் தடுக்க முடிகிறதா? உங்களால்.
எனவே நண்பர்களே, இதை எதிர்ப்பதற்காகத்தான் இதுபோன்ற பிரச்சாரக் கூட்டங்கள்.
அகில இந்திய அளவில் இந்த ஆபத்துத் தெரியவேண்டும்
நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் பேசும் பொழுது சொன்னார், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து அறிக்கையை வாங்கினார் - சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். அகில இந்திய அளவில் இந்த ஆபத்துத் தெரியவேண்டும்.
ஏனென்றால், மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்பதற்கு - எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை முதலமைச்சர்களையும், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேரே சென்று, ஒடிசா முதலமைச்சர், கேரள முதலமைச்சர், ஆந்திர முதலமைச்சர், தெலங்கானா முதலமைச்சர் என்று 12 முதலமைச்சர்களை சந்தித்து நம்முடைய முதலமைச்சரின் கடிதத்தோடு, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல - மற்ற மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது!
நீட் தேர்விற்கு, பஞ்சாபில் எதிர்ப்பு இருக்கிறது- மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பு இருக்கிறது; அதேபோன்று மற்ற மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறதா? என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் செய்ய வேண்டும்.
பட்டப் படிப்பு, மேல்பட்டப் படிப்பு, அதற்குமேல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு -
இன்றைக்குக் காலையில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது- நீட் தேர்வுக்கு காலர்ஷிப் (உதவித் தொகை) கொடுத்தார்கள் என்று.
அதை வாங்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கும்கூட தேர்வு வைக்கவேண்டும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கும் தேர்வு வைக்கவேண்டும் என்கிறார்கள்.
8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு
புதிய கல்விக் கொள்கையில்,
9 ஆம் வகுப்பில் தேர்வு,
10 ஆம் வகுப்பில் தேர்வு
11 ஆம் வகுப்பில் தேர்வு
12 ஆம் வகுப்பில் தேர்வு
பிறகு உள்ளே நுழைய முடியாத அளவிற்கு நீட் தேர்வு.
தேர்வு, தேர்வு என்றால், நம்முடைய பிள்ளைகள் என்னாவார்கள்?
எனவே, இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டத் தினுடைய மறுபதிப்பு என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் என்னாவது? இந்தக் கவலைதான் எங்களுக்கு.
ஏனென்றால், கல்வியை, உத்தியோகத்தைப் பொறுத்துத்தான் திராவிட இயக்கமே பிறந்தது.
‘எல்லாருக்கும் எல்லாமும்'
‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் பிறந்தது.
உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக...
எனவே, நண்பர்களே, பெற்றோர்களே, எங்களுக்காக அல்ல இது - எம்.எல்.ஏ, பிள்ளை படிக்கவேண்டும் - நகர செயலாளர் பிள்ளை படிக்கவேண்டும் - எங்கள் பேரப் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காக அல்ல!
உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக - உங்கள் எதிர்காலத்திற்காக இந்தப் பணியை நாங்கள் எடுத்துக்கொண்டு செய்கிறோம்.
இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இது கரோனா காலகட்டம் என்பதால், பொதுக்கூட்டம் நடத்த முடியாது என்றாலும், நிச்சயம் மாறுதல் வரும் - மிகப்பெரிய அளவிற்கு வரும்.
இந்தியாவில், இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கு வழிகாட்டக் கூடிய ஒரே முதலமைச்சராக நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் இருக்கிறார்.
திராவிடம் வெல்லும் -
நாளைய வரலாறு இதைச் சொல்லும்!
தேர்தலுக்கு முன்பே - அன்றைக்கே நாங்கள் சொன்னோம் - திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்! என்று சொன்னோம்.
இன்றைக்கு வென்று காட்டியிருக்கிறது!
2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 40-க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றார்கள். ஒரே ஒரு இடம் தேனியைத் தவிர மீதி அத்தனை இடங்களிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார்கள்.
அங்கே சென்று தமிழ் வாழ்க என்று சொன்னார்கள்-
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஹிந்தியில் ராம் ராம் என்றார்கள்.
உடனே இவர்கள், பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என்று சொன்னார்கள்.
ஆகவே, அவருடைய தலைமையில் நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி - சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி - இப்பொழுது நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி!
இவ்வளவு மகிழ்ச்சியாக நாமெல்லாம் அமர்ந்திருக் கின்றோமே, அதுதானே காரணம்!
உள்ளாட்சியை நல்லாட்சியாக்க வேண்டும் என்றார்
அழகாகச் சொன்னார் முதலமைச்சர், உள்ளாட்சியை நல்லாட்சியாக்க வேண்டும் என்றார்.
ஆகவேதான், இந்த ஆட்சி என்பது, இது காட்சிக்காக அல்ல- நம் இனத்தின் மீட்சிக்காக - இழந்த நம்முடைய உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காக!
எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் இதனை விளக்கி 10 பேரிடம் சொல்லவேண்டும்.
நீட் தேர்வு வேண்டாம் என்று ஏன் சொல்கிறோம்?
இது வெறும் தேர்வு வேண்டாம் என்று சொல்வதல்ல - இது மாநில உரிமை - மனித உரிமை. அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத்தான் இந்த இயக்கம்.
இந்த இயக்கத்தைவிட்டால், உங்களுக்கு நாதி கிடையாது - பேசுவதற்கு.
இதை நன்றாகப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்று கேட்டு,
சிறப்பாக வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!
அடுத்து எங்கே புத்தகம் வெளியிட்டாலும் நம் முடைய சட்டமன்ற உறுப்பினர் வரவேண்டும்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment