ஜெய் பீம்
ஜெய்பீம் என்றால் ஒளி...
ஜெய்பீம் என்றால் அன்பு...
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்...
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர்த்துளி!
-மராத்திய கவிதை
சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் படத்தை பார்த்தேன், ஜெய்பீமை ஒரு திரைப்படமாக கருதாமல் ஆவணப்படமாக கருதுவது நல்லது என நினைக்கிறேன். 1995இல் இருளர் ஜாதி மக்களின் மேல் போடப்பட்ட பொய்வழக்கினையும் அதில் நீதிபதி சந்துருவின் போராட்டத்தையும் மிகவும் அருமையாக ஆவணப்படுத்தி உள்ளனர். ‘அருமையாக’ என இங்கே குறிப்பிடுவது அழகாக என்பதற்கான அர்த்தம் கிடையாது, இருளர் மக்களின் வலியையும் வேதனையையும் மிகவும் கனத்த கேமராவுடன் படம் பிடித்திருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். சமூகத்தில் நடந்தும், யாருக்கும் தெரியாமல் இருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்ச தனது கதாநாயகன் பிம்பங்களை உடைத்தெறிந்து தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிற சூர்யாவின் பணி வரவேற்க்கத்தக்கது.
அரசியல் ரீதியாக ஜெய்பீம் ஒரு வலுவான படம். அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் ஜெய்பீமையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டுமே காட்சிப்படுத்தாமல் அதற்கான காரணங்களைத் தேடி சமூகநீதியை கையில் எடுக்கின்றனர். ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு பின் பெண் அடிமைத்தனமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற ஒரு தெளிவான கருத்து படத்தின் கடைசிக்காட்சியில் ஒரு செய்தித்தாளாக முடிவது கூடுதல் சிறப்பு. காவல்துறையினரின் வன்முறையையும், அத்துமீறலையும் பிசிறில்லாமல் கேமராவிற்கு இன்னும் கொஞ்சம் எடையை கூட்டி கண்கலங்க வைக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் தொய்வு, வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள், தேவையற்ற பாடல்கள் போன்றவை இப்படத்திற்கு மிகப்பெரிய தடுப்புச் சுவராக இருக்கின்றன, அவற்றையெல்லாம் வசனம் எழுதுவதற்காக அர்ப்பணித்து விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவைதான் இப்படத்திற்கு ஒரு பெரிய பலம்கூட. ஆண்டப்பரம்பரை என சொல்லிக்கொண்டு திரியும் சில ஜாதிகளை மிகவும் கவனமாக வசனங்களின் மூலம் கேலி செய்தி ருப்பது, வசனங்களில் கொள்கையினை வலிய திணிக்காமல் போகும் போக்கில் வைத்திருப்பது போன்றவை மிகவும் துணிச்சலான ஒரு செயல். ராஜாகண்ணு மற்றும் அவரின் மனைவி பாத்திரத்தில் நடித்திருப்பவர்களுக்கு தாராளமாக தேசிய விருது தரலாம்! ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்ற ஒரு பண்பினை பிரமாதமாக நடித்துக் காட்டியுள்ளனர் இருவரும். சிலகாட்சிகளில் மட்டும் வரும் சூர்யா மிகவும் எளிமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தை 2021இல் பார்க்கும் பொழுது ஜாதிய வன்முறைகள் போன்றவையெல்லாம் அழிந்துவிட்டது, இப்போதெலாம் யாரு ஜாதி பாக்குறாங்க என தெளிவில்லாமல், தவறான அரசியல் பேசும் ‘மய்ய’ அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரிய சாட்டையடியாக இருக்கிறது இப்படம்.
ஜாதிய வன்முறைகள் என்பது உண்மையிலேயே நடந்து மறைக்கப் படுவது, கர்ணன், ஜெய்பீம் போன்ற படங்கள் மட்டும்தான் மக்களிற்கு விழிப்புணர்வு தருகின்றன. அதே சமயத்தில் நேரெதிராக ருத்ரதாண்டவம் போன்ற படங்களும் வருவது இயற்கையே. அவர்கள் பரப்பும் நஞ்சினை மூளைக்குள் நுழையவிடாமல் தடுக்க ஜெய்பீம் போன்ற படங் களும் அதிகம் வரவேண்டும்!
-இன்சொல்
No comments:
Post a Comment