மத்திய ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளியிலிருந்து மனித இனம் உலகெங்கும் இடம் பெயரும் போது அவர்களின் அடிப்படைத் தேவையான நீருக்கான தேடலை அவர்கள் எளிமையாக்கிக் கொள்ள கிணறுகளைத் தோண்ட ஆரம்பித்தனர்.
ஆறு பெரிய ஏரி போன்ற நீர் நிலையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்த்துவைக்க பெரிய பள்ளங்களைத் தோண்டியவர்கள் பின்னர் கிணறுகளைத் தோண்டியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களுக்கு முன்பே யானைகள் மண்ணில் நீர் இருக்கும் பகுதிகளை அறிந்துகொண்டு அப்பகுதியில் குழி தோண்டி நீரைக் குடிக்க பயன்படுத்தியது இன்றும் தொடர்கிறது,
அதனைத் தொடர்ந்து தற்போது குதிரைகளும் - கழுதைகளும் கூட தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது.
பன்னாட்டு அறிவியல் ஆய்வு இதழ் ஒன்றில் பாலைவனத்தில் வாழும் குதிரைகளும் கழுதைகளும் குடிநீர்த் தேவைக்காகக் குழிகளைத் தோண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.
கிணற்றில் ஊறும் நீரினை கரடிகள், ஆந்தைகள், பறவைகள் மற்றும் பல காட்டுயிர்களும் அருந்துகின்றன.
பல நூற்றாண்டுகளாகக் குதிரைகளும் கழுதைகளும் காடுகளில் வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அதிலொரு பெருங்கூட்டம் அதிக அளவில் உள்ளன.
“குதிரைகள் தோண்டும் கிணறுகள் விலங்குகளின் மற்ற செயல்பாடுகளுக்கான இடங்களாகவும் மாறி விடுகின்றன” என்கிறார் டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆய்வாளரான எரிக் லுன்ட்கிரன்.
மேற்கு அரிசோனாவில் சோனாரான் பாலைவனத்தில் நான்கு இடங்களில் தொடர்ந்து மூன்று கோடைக் காலங்களில் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதேபோல கலிபோர்னியாவில் மோஜாவே பாலைவனத்தின் ஆற்றுப் படுகைகளிலும் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது 4 இடங்களில் குதிரைகளும் கழுதைகளும் தனித்தனியாகக் கிணறுகள் தோண்டியதை ஆய்வாளர்கள் அறிந்துகொண்டனர். முன்னங்கால்களால் குழிகளைத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்தியுள்ளன.
பாலைவனத்தில் காணப்பட்ட கிணறுகளில் காடுகளில் வாழும் 57 வகையான விலங்கினங்கள் நீர் அருந்தியதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
அதாவது பலவகையான பறவைகள், பாலூட்டிகள், மான்கள், கரடிகள், காட்டு ஆடுகள் உள்படப் பல விலங்குகள் தாகம் தணித்திருக்கின்றன.
முக்கியமான சில பகுதிகளில் கேமராக்களை வைத்து ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இந்தக் கிணறுகளின் அருகில் காணப்பட்ட விலங்கினங்கள் மற்றவற்றைவிட 64 சதவீதம் அளவுக்கு வளமாக இருந்துள்ளன.
குதிரைகள் தோண்டிய கிணறுகளுக்கு அருகில் இந்த திறந்தவெளி நீர்நிலைகளையும் ஆய்வாளர்கள் வரைபடமாக்கினர். அந்தக் கிணறுகளுக்கு அருகில் சில சிறு தாவரங்கள் வளர்ந்திருந்தன. பாலைவனத்தில் அருகிவரும் அரிய மரங்களுக்கான நாற்றங்காலாக அவை செயல்படுகின்றன.
“பாலைவனத்தில் குதிரைகள் மற்றும் கழுதைகள் தோண்டிய கிணற்றில் எவ்வளவு தண்ணீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபடாத சுற்றுச்சூழலியல் பேராசிரியர் மைக்கேல் போகன். இந்தக் கிணறுகளால் திடீரென ஏற்படும் காட்டுத்தீ தவிர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லேண்ட், தெற்கு ஆஸ்திரேலியா, கனடாவின் சாபெல் தீவு ஆகியவற்றில் வாழும் குதிரைகள், கழுதைகளிடம் கிணறு தோண்டும் பண்பு இருக்கிறது என்று தெரியவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment