திருச்சி - சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் சுற்றி வர அனுமதிக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது (1.11.2021)
அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பேருந்து நிலையத்தில் சந்தித்து, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனே நீதிபதிகள் ‘கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம்‘ என்றனர்.
இந்தப் பிரச்சினைத் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர் நீதிபதிகள். அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயில் என்பது ஒரு சுரண்டல் கருவி என்று சொன்னால் சிலருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. வியாபாரத்திற்கு கருவறையில் அடித்து வைக்கப்பட்ட சாமி சிலைதான் மூலதனம் - மக்களின் பக்தியை மனதில் கொண்டு விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பெயர் ராசி என்றால் அதற்கொரு ரேட்; கல்யாணம் ஆகி புது மணமக்கள் தரிசிக்க வந்தால், அதற்கொரு ரேட் - அர்ச்சனைத் தட்டில் விழும் பணத்துக்கு ஏற்ப பிரசாதம் வழங்குவதிலும் பாகுபாடுகள்.
10 ரூபாய் தட்டில் போட்டால் பொட்டலமாக திருநீறு; போடவில்லை என்றால் வேண்டா வெறுப்பாக திருநீற்றைத் தூக்கிப்போடுதல்; 20 ரூபாய் போட்டால் இரு கண்ணி பூச்சரம்; அதுவே 100 ரூபாய் போட்டால் சாமிக்கு சாத்திய மாலையைக் கையில் கொடுப்பது; ரூபாய் 200 தட்டில் போட்டால் சாமிக்குச் சாத்திய மாலையைப் பக்தர்கள் கழுத்தில் போடுதல்.
கோயிலும், பக்தியும் வியாபாரமாகிவிட்டது என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?
பிரதோஷ காலத்தில் வாரப் பலன்கள்:
அபிஷேகப்பொருட்கள் அதன் பலன்கள்
ந.எண்ணெய் - பக்தி, சுகம், நலம் தரும்
திரவியப்பொடி - கசடுகள் நீங்கி நறுமணம் உண்டாகும்
(கதம்ப பொடி)
தண்ணீர் (கங்கா) - மனத்தூய்மை
ப.அரிசி, மாவு பொடி- கடன் தீரும், குபேர சம்பத்து கிடைக்கும்
தேன் - குரலினிமை
கற்கண்டு - ஒற்றுமை
கரும்புச் சாறு - தோஷம், பிணி நீங்கும்
சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர்
பழ வகைகள் - வியாபார முன்னேற்றம்
பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்,
உடல் பலம், வெற்றி
நெய் - முக்தி, சுகவாழ்வு
பால் - ஆயுள் விருத்தி
தயிர் - குழந்தைப் பாக்கியம்,
உடல் வலு
இளநீர் - ராஜயோகம், நன்மக்கட்பேறு
எலுமிச்சை , நா.பழம்
ஜாதிக்காய் - மரண பயம் நீங்கும்
விபூதி - சகல ஞானமும் கைகூடும்
சந்தனம் - குளிர்ச்சி உண்டாகும்
பன்னீர் - சரும நோய்கள் அகலும்
ஸ்வர்ணபிஷேகம் - ஆபரணம், அணிகலன் & லட்சுமி கடாட்சம் உண்டாகும்,
- தினத்தந்தி குடும்பமலர்: 2.5.2004
மளிகைக்கடை பட்டியல் போல் இல்லையா இது?
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தோடு இவற்றை எல்லாம் இணைத்துப் பாருங்கள் - விவரம்
புரியும்.
கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பது உண்மையானால், இது வேண்டும் அது வேண்டும் என்று பக்தர்கள் கோயிலுக்குச் சென்று கோரிக்கைகள் வைப்பதும், அவற்றைக் கடவுள் அருள் பாலித்தால் காணிக்கை அளிப்பதாகக் கூறுவது எல்லாம் பச்சையான கொடுக்கல் - வாங்கல் ‘பிசினஸ்’
தானே.
இது பற்றி ‘கல்கி’ இதழில் (6.11.2011) கேள்வி - பதில் பகுதியில் வெளி வந்த தகவல் இதோ!.
கடவுளை வியாபாரியாக்காதே!
கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம் , “எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு!” என்று கேட்பது சரியா... தவறா...?
வி.மனோகரி, குமாரபாளையம்
பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரியாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். “எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன்.” என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படி கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.
ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக்
கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில் களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி.
அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். ‘எல்லாம் நீயே!’ என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலேன்று துளிர்விடும்.(‘
- கல்கி’: 6.11.2011, (பக்கம் 72)
எழுதி இருப்பது ‘விடுதலை’ ஏடு அல்ல. ‘கல்கி’ என்பதை மறந்து விடக்கூடாது.
கோயில்கள் உண்டாக்கப்பட்டதே பொது மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவே என்று கூறுவது சாணக்கியன் தான், அர்த்த சாஸ்திரத்தில் விலாவாரியாக எழுதித் தள்ளியுள்ளான்.
1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 16ஆம் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது.
“கடவுள் என்பதின் பேரால் கோயில்களி லாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது, ஒரு பைசா பெறும் படியான ‘சாமானாவது’ கொடுக்கக் கூடாது என்றும், வணங்குபவனுக்கும் வணங்கப் படுபவனுக்கும் மத்தியில் தரகனாவது, வட பாஷையாவது இருக்கக்கூடாது என்றும் இம்மாநாடு கருதுகிறது” என்பதுதான் அந்தத் தீர்மானம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2021இல் கூறும் தீர்ப்பினை - தொலைநோக்கோடு இன்றைக்கு 92 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாடு தீர்மானமாகவே நிறைவேற்றியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
அர்ச்சர்களே பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையே தரகர்களாக இருப்பதோடு அந்த அர்ச்சகருக்குப் பக்தர்களைக் கோயிலுக்கு கொண்டு வந்து பணத்தைக் கறக்க ‘புரோக்கர்களை’யும் வைத்துள்ளனர் என்றால் பக்தியின் யோக்கியதையை, கோயில்களின் யோக்கியதையை அர்ச்சகர்களின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
No comments:
Post a Comment