வாசிங்டன், நவ.6 ‘அமெரிக்கா - இந்தியா இடையே நட்புறவை வலுவடையவிடாமல் சீர்குலைக்க, சீனா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன’ என, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது.இது பற்றி பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு ஆண்டுக்கு முன், அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட, சீனா தனது அணுசக்தியை அதிகரித்து வருகிறது. சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, ஆறு ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம். 2030க்குள் 1,000 ஆக உயரும் அபாயம் உள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு கொள்கை, எல்லைகளில் அத்துமீறல் ஆகியவை, அதன் அண்டை நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.இந்தியாவுடனான எல்லையை ஆக்கிரமிக்க, சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எல்லையில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்காவுடனான இந்தியாவின் நட்பு வலுவடைவதை தடுக்க, சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன.
கடந்த ஆண்டு, லடாக் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவை அச்சுறுத்தி, தன் பக்கம் இழுக்கலாம் என, சீனா நினைத்தது. ஆனால், இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு, சீனாவுக்கு பதிலடி கொடுத்துவிட்டது.இந்தோ - பசிபிக் பகுதியை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள, ‘குவாட்’ அமைப்பு, இதைத் தடுத்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment