நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சரிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சரிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மனு

சென்னை, நவ.29 ஜி.எஸ்.டி.யை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும், நூல் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு..ஸ்டாலினிடம் ஜவுளி உற்பத்தியா ளர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 7 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பு பெறு கின்றன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக தற்போது கிலோவிற்கு ரூ.50 ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த வருடத்தின் இதே கால கட்டத்தில் நூல் விலையை ஒப்பிடும் பொழுது தற்போது 40 சதவீதம் நூல் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் உள்நாட்டு ஜவுளி வியாபாரம் அதிகளவில் பாதிப்பதோடு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எங் களிடம் வாங்குவதை விட்டு வியட்நாம், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் சீனா போன்ற போட்டி நாடுகளை நாடிச்செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

இந்தநிலையில், உலக முக்கியத்துவம் வாய்ந்த வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி ஜெர்மன் நாட்டில் பிராங் பர்ட் நகரில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த வருடம் சீனாவின் பொருளாதார மந்தமான சூழ்நிலை காரணமாக கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் கடுமையான நூல் விலையேற்றத்தால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் புதிய விலையை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் ஒப்பந்தங்கள் நம் நாட்டிற்கு வராமல் போகக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

ஜி.எஸ்.டி. ஏற்றம்

இதேபோல் ஜவுளி துணிகளுக்கும், ஜவுளி துணிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான டையிங், பிரிண்டிங் மற்றும் பல ஜவுளித்துறை சார்ந்த தொழில்களுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 12 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது.

இதனால் உள்நாட்டில் ஜவுளி பொருட்களை விற்பனை செய்யும் உற்பத் தியாளர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஏற்கனவே நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த புதிய ஜி.எஸ்.டி. அறிவிப்பின் மூலம் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் முக்கியமாக கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விலையை குறைக்க வேண்டும்

எனவே, ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து நூல் விலையை குறைந்தது கிலோவிற்கு ரூ.25 வரை குறைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள நூல் மில்களுக்கு நூல் விலையை குறைக்கவும், நிர்ணயிக்கும் நூல் விலையை குறைந்தது 3 மாதங்களுக்கு மாற்றாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இதேபோல் ஜவுளி பொருட் களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. என வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பை திரும்ப பெறும்படி ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment