நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு
சென்னை. நவ. 5, பெரம்பூரில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையேற்று பேசினார். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
”இருளில் ஒரு ஒளி”, ”எப்போது விடுதலை?” எனும் இரு புத்தகங்கள் வெளியீடு, பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு மாளிகையில், 30-10-2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இப்புத்தகங்கள் பாசறை முரசு இதழில் வெளிவந்து தொகுக்கப்பட்டவை ஆகும்.
முனைவர் மோ.பாட்டழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பாசறை பாலனையும், அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்களையும் வாழ்த்திப் பேசினர்.
தலைமை ஏற்றுப் பேசிய திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, புத்தகங்களில் மய்யப்பொருளாக இருப்பவை பெரியாரியம், அம்பேத்கரியம் தான் என்பதையும், அந்த இருவரும் முதன்மையாக எதிர்த்தது ஜாதியைத்தான் என்பதையும் சுட்டிக்காட்டிவிட்டு, ஜாதிகளால் பெண்கள் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆணவப் படுகொலை சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி, ஜாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வதை எதிர்க்கும் ஜாதிச் சங்கங்கள், உண்மையாகவே தங்கள் ஜாதிப் பெண்கள் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால், எங்கள் வீட்டுப் பெண்களை குறைந்தபட்சம், ஆண்கள் அடிக்கக் கூடாதென்று தீர்மானம் போட்டு உள்ளார்களா? என்ற அர்த்த
முள்ள, ஆழமான கேள்வியை எழுப்பினார்.
அப்படிப்பட்ட ஜாதிச் சங்கங்கள்தான் மனித சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றன என்றும், அவைகளை எதிர்த்து போராடுகிற பாசறை பாலன் வாழ்த்துக்குரியவர் என்றும், அதற்கு இந்த இரண்டு புத்தகங்களும் பயன்படும் என்றும் பேசினார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ”இருளில் ஒரு ஒளி”, ”எப்போது விடுதலை?” ஆகிய இரண்டு புத்தகங்களையும் வெளியிட, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
600 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புத்தகங்களும் நிகழ்ச்சியில் தள்ளுபடி விலையில் ரூ.500 க்கு கொடுக்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர், வழக்குரைஞர் சு.குமாரதேவன் உள்ளிட்ட பலரும் மேடையில் புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.
புத்தகங்களை வெளியிட்டுப் பேசிய ஆ.இராசா, அண்ணல் அம்பேத்கரின் கருத்தைக் கூறி, 2ஜி வழக்கில் நீதிமன்றத்தில் வினோத்ராய் மன்னிப்புக் கேட்டதைக், கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து, அரங்கண்ணல் சொன்னதைச் சுட்டிக்காட்டி, புத்தகத்தில் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பேசி, பாசறை பாலன் எதிர்பார்ப்பது போல, செயல்பட முயற்சிப்போம் என்று உறுதிகூறி முடித்துக் கொண்டார்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் பாசறை மு.பாலன், ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு தனி இடஒதுக்கீடு தர ஆவன செய்து தர, மேடையில் உள்ளவர்களுக்கு வேண்டுகோளாக வைத்து விடைபெற்றார்.
சிறப்பாக இணைப்புரை வழங்கிய ஆசிரியர் டெய்சி மணியம்மை, திராவிடர் கழகத்தின் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்ச்சி சிறக்க எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தை கேட்பாளர்களுக்கு வாசித்துக் காட்டினார்.
இறுதியாக பா.அறிவழகன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
நிகழ்வுக்கு திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஆவடி மாவட்டத் தோழர்கள் உடுமலை வடிவேல், க.இளவரசன், கோ.முருகன், ஜானகிராமன், வடசென்னை தோழர் கி.இ.ராமலிங்கம் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் சார்ந்த தோழர்கள், உள்ளூர் பொதுமக்கள் என அரங்கு நிறைய வருகை தந்து, திராவிடர் இயக்கப் போராளிகளின் உரைகளைக் கேட்டும், புத்தகங்களை வாங்கியும் சென்றனர்.
No comments:
Post a Comment