'விடுதலை' நாளிதழில் வெளியான கழகத் துணைத்தலைவர் கவிஞர் அவர்களின் "'தின மலருக்குப் பதிலடி', ஆச்சாரியார் கொண்டு
வந்தது குலக் கல்வியா? - தொழிற் கல்வியா?" - கட்டுரை வாசித்தேன். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக்கொடுக்காதே என்ற மனுதர்மத்தை உயர்த்தி பிடிக்கவே ஆச்சாரியார் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். சூத்திரன் 'நா' குளறி பேசினால் அது உறுதி யாகப்பேசியது என்று ஆகிவிடும், ஆனால் ஆச்சாரியார் போன்ற பார்ப்பனர்கள் (தெரிந்தே) பேசியதை 'நா' குளறியதால் எனக்கூறி ஆண்டுகள் பல கடந்தும் பார்ப்பனப் பாசத்தால் மறைக்க முயல்கிறார்கள்.
இப்படி 'நா' குளறிப் பேசும் பார்ப்பனர்கள் மந்திரம் மட்டும் சரியாக சொல்வார்களா, அல்லது அதிலும் 'நா' குளறியா என தெரியவில்லை.
சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் என ஊருக்கொன்று "தினமலரை" விற்றுப் பணத்தை சேமிக்க 'தினமலர்'வகையறாக்களுக்கு வாரிசுகள் தேவை. திராவிட இயக்கம் என்பது 'தினமலர்' போல வணிக நிறுவனம்அல்ல, இயக்கத்தின் கொள் கைக்காக, கொள்கைகளை விளக்கத்தான் வாரிசுகளே தவிர. பணத்தை சேமிக்க அல்ல
அன்புராஜ் வீரமணி, உதயநிதி ஸ்டாலின், துரைவைகோ ஆகியோர் வாரிசுகள் அல்ல, திராவிட இயக்கத்தின் கொள்கைப் பரிசுகள் அவர்கள்.
திராவிட இயக்கத்தின் எழுச்சியால் மக்கள் வளர்ச்சி பெற்று வருவதை பார்ப்பனர்களால் தாங்க முடியவில்லை.குறை சொல்வதற்கு ஒன்று மில்லாத நிலையில் வாரிசு அரசியல் என்பதை கையில் எடுத்துள்ளனர்.
நாட்டில் அனைவரும் சமூகநீதி பெற்று, பகுத்தறிவு வளர நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என தொடர்ந்து போராடிவருவது போல், திராவிட இயக்கத்தின் வாரிசுகள் வாழையடி வாழையாக வரத்தான் செய்வார்கள்.
அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியோர் மறைந்தும், இன்னும் திராவிட இயக்கத்தைக் கண்டு பார்ப்பனர்களுக்கு அச்சம். அந்த அச்சம் உள்ள வரை திராவிட இயக்கத்தில் வாரிசுகள் பயணம் தொடரத்தான்செய்யும்.
தந்தை பெரியார் அவர்கள் ஏற்றிய சுடரொளி என்றும் கனலாகத்தான் இருக்கும். அதை அணையாமல் காப்பதே எங்கள் பணி!
மு.சு. அன்புமணி,
மதுரை -625020
No comments:
Post a Comment