கனமழை - மீனவர்களுக்கு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

கனமழை - மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை,நவ.4- தஞ்சை, திருவாரூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் நேற்று (3.11.2021) கூறியதாவது: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. தென் தமிழகத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக 4ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அரபிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 5ஆம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும், 6, 7ஆம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், வடக்கு கேரளா மற்றும் கருநாடக கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வனவிலங்கு மோதலினால் உயிரிழப்போர் குடும்பத்திற்கான இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

சென்னை, நவ.4 வனவிலங்கு மோதலினால் உயிரிழப்போர் குடும்பத்திற்கான இழப்பீட்டை ரூ.5 லட்சமாக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே எழக்கூடிய மோதல்களை குறைப்பதற்கு நன்றாக திட்டமிட்டு ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற மனித, விலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

அந்த வகையான மோதலுக்கு உள்ளாகி யாரும் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தரமாக செயலிழப்பிற்கு ஆளானாலோ ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அரசு உத்தரவிட்டது. அதன்படி அதற்காக ரூ.6.42 கோடி தொகையையும் அரசு வழங்கியுள்ளது.  இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் செப்டம்பர் 3ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தும் வண்ணம், அதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது. மற்ற சம்பவங்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment