பருவமழை பாதிப்பு, உள் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.6,230 கோடி தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

பருவமழை பாதிப்பு, உள் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.6,230 கோடி தேவை

பிரதமருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.30 பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும். உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் நிதி வழங்கிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சரிசெய்திடவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக்குக் கொண்டு வரவும் ஏதுவாக, ஒன்றிய அரசின் நிதியினை விரைவில் விடுவித்திட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டு, பிரதமர் மோடிக்கு நேற்று (29-12-2021) கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழுவினர் 21-11-2021 அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதைக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4.719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 16-11-2021, 25-11-2021 மற்றும் 15-12-2021 ஆகிய நாள்களில் சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யவும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு  மீண்டும் அதிகரிப்பு

சென்னை, டிச.30 தமிழ்நாட்டில்  தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரத்தை மருத்து வம் - மக்கள் நல்வாழ் வுத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று (29.12.2021)

739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின  பாதிப்பான 619 மற்றும் முந்தைய பாதிப்பு 605-அய் விட அதிகம் ஆகும்.  இதனால், தமிழ்நாட்டில் கரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 614 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 2 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தாக்குதலுக்கு நேற்று 8 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரி ழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி

சென்னை, டிச.30 சென்னையில் ரூ.4 கோடி செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி  அளித்துள்ளதால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் உருமாற் றத்தை கண்டறிய, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டெம், அய்தராபாத்தில் உள்ள சி.டி.அய்.டி மற்றும் புனேவில் உள்ள என்.அய்.வி ஆகிய மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு கரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.

இந்தநிலையில், முதலமைச்சரால் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டு ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில்,  நேற்று (29.12.2021) அதற்குரிய அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, கரோனா நோயின் தாக்கத்தை பெருமளவு தடுத்திட முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment