"பெண்களுக்கு தங்கள் புருஷன் பிடிக்கவில் லையானால் சகித்துக்கொண்டு, தலைவிதி என்பதாக சொல்லி உறுதியுடன் இருக்க வேண்டியதை தவிர, வேறு ஒரு காரியம் இல்லை! குரூர குணம் உள்ள புருசன், குடிகாரப் புருஷன், குஷ்டரோகியான புருஷன் முதலிய எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடைய கொடுமைகளை சகித்துக் கொண்டு அவனுடன் கூட வாழ வேண்டியதாக இருக்கின்றது. இது ஜீவகாருண்யமா என்று கேட்கிறேன்.
சமூக வாழ்க்கையில் முக்கியமாக ஆண், பெண் தன்மையில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் எவ் வளவு இருக்கின்றது என்று பாருங்கள். இவைகளைப் பற்றி எந்த தலைவர்களாவது, மகாத்மாக்களாவது, எந்த சர்க்காராவது கவனிக்கிறதா? பெண்களுக்கு சொத்துரிமை இல்லை, கல்வி வசதியும் இல்லை, இதுவும் மிக கொடுமையான காரியமே ஆகும்.
பெண்கள் சொத்துரிமை விஷயத்தில் இந்துமதக் கொள்கை மிகவும் அக்கிரமமானதாகும்.பெண்கள் எப்போதும் சொத்தை சர்வ சுதந்திரமாய் அனுபவிக்க மார்க்கமில்லை. விபச்சாரியாய்ப் போன பெண், தேவடியாள் தொழில் செய்யும் பெண், ஆகியவர் களுக்கு இந்து சமூகத்தில் சொத்துரிமை இருக்கிறது என்றால் இந்து சமூகத்தின் ஈன தன்மைக்கு மடத் தன்மைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
ஒரு விதவை விபச்சாரியாய் போய்விட்டால் தான் புருஷன் சொத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த விதவை மறுமணம் செய்து கொண்டால் புருஷன் சொத்துக்களில் ஒரு சிறு தம்படி கூட அனுபவிக்க உரிமை இல்லை. புருஷனுடைய வாரிசுகள் அவர்கள் எப்படிப்பட்ட வர்களாக இருந்தாலும் அனுபவிக்கலாம் என்பதாக இந்து சட்டம் கூறுகிறது.
கல்வி விஷயத்தில் பெண்கள் கல்வியைப்பற்றி யாரும் கவலை எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ பெயருக்கு மாத்திரம் தான் பெண்கல்வி விஷயம் நடைபெறுகின்றன.
நூற்றுக்கு ஒரு பெண்கூட படித்த பெண் இல் லாமல் இருக்கின்றது இந்து சமூகம்."
(இது தந்தை பெரியார் 1935இல் சமூகத்தில் 50 சதவிகிதமாக இருக்கின்ற பெண்ணினத்தின் மேல் கவலை கொண்டு ஆற்றிய உரை யாகும்.உலகில் எந்த தலைவரும் பெண்ணினத்தை பற்றி சிந்திக்காத நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்தார். அவரது பிரச்சாரம், விழிப்புணர்வு நடவடிக்கைகள், போராட்டம் காரணமாகத்தான் பெண்களுக்கான சொத்துரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, நிர்வாகஉரிமைகளை இன்று ஒரு மாவட்டம் முழுவதும் பெண் ஆளுமையே பெற்றுள்ளது என் பதில் அய்யமே இல்லை).
"பெண்களுக்கு ஹைஸ்கூல், மிடில் ஸ்கூல், முதலியவை ஒரு ஜில்லாவுக்கு ஒன்று அல்லது இரண்டு காணப்படுவதுகூட அதிசயமாய் இருக் கின்றது. பெண்களுக்கு மேல் படிப்புக்கு கட்டணம் இல்லாமல் சொல்லி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் பெண்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். சுதந்திரக்காரனுக்குப் பெண்களை தக்கவர்களாக இருக்கும் படியான தொழில் கல்வி ஆகியவைகள் தேடி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை ஆகும். இந்த மாதிரியான காரியங்கள் பெண்கள் விஷயத்திலும் முக்கியமாய் கவனிக்க வேண்டியிருக்கிறது" என்று தந்தை பெரியார் அதிரடியாக ஆணித்தரமாக பேசுகிறார்.
பெண் விடுதலை வேண்டும் தந்தைபெரியார் 16.6.1935இல் ஆற்றிய உரை (பெரியார் களஞ்சியம்-5)
தந்தை பெரியார் அவர்களும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட தலைவர்களும், தொடர்ந்து தமிழ்நாட்டில் உழைத்த உழைப்பின் பயனாக இன்று எல்லோரும் பெருமைப்படும் அள வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பதவி களில் பெண்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு அவர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளராக நிஷா பார்த்திபன் அவர்களும், கோட் டாட்சியராக அபிநயா அவர்களும், துணைக் கண்காணிப்பாளராக லில்லி கிரேஸ் ஆகியோரும் தற்போது பொறுப்பு ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள்.
மேலும் காவிரி குண்டாறு இணைப்பு திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யா தேவி அவர்களும், காவல் கூடுதல் துணை கண்காணிப் பாளராக பி.கீதா அவர்களும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மு.பூவதி அவர்களும், சிறைக் காவல் கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி அவர்களும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விஜயலட்சுமி அவர்களும், மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா அவர்களும், மாவட்ட தீய ணைப்பு அலுவலராக பானுப்பிரியா அவர்களும், டாஸ் மாக் மாவட்ட மேலாளராக வசுந்தராதேவி அவர்களும், மாவட்ட சுகாதார துணை இயக்குநராக கலைவாணி அவர்களும் மாவட்ட தொழில் மய்ய மேலாளராக திரிபுரசுந்தரி போன்ற பெண்களே பணியில் உள் ளார்கள்.
மேலும் கூட்டுறவு இணைப் பதிவாளராக உமா மகேஸ்வரி அவர்களும், மகளிர் திட்ட இயக்குநராக பிஜே.ரேவதி அவர்களும், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநராக டி.கே. செண்பகவல்லி அவர் களும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக உம்மள் கதீஜா அவர்களும், நபார்டு உதவி மேலாளராக ஜெயசிறீ அவர்களும், அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வராக புவனேஸ்வரி, ஆகியோரும் பணி புரிகின்றார்கள்.
பெண் விடுதலைப் போராளியும் திராவிட சிந் தனையாளரும் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் பெண் ஆளுமைகள் முக்கிய பதவி வகிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரியார் வென்றார்!
திராவிடம் வெல்லும்!
திராவிடம் வென்றே தீரும்!
தகவல் : குடந்தை குருசாமி
No comments:
Post a Comment