முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது!

ஜாதி ஒழிப்பு - ஆட்சிக்கு அரணாக இருப்பது - ஆணவக் கொலைகளைத் தடுப்பது -'நீட்' தேர்வு ஒழிப்பு - இயக்கத்தை பலப்படுத்துவது

அய்ந்து பணிகளை முன்னிறுத்தியே என் எஞ்சிய வாழ்நாள் பணி!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, டிச.2   முதலமைச்சர் மு..ஸ்டாலின் வாழ்த்து தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது!  ஜாதி ஒழிப்பு - ஆட்சிக்கு அரணாக இருப்பது - ஆணவக் கொலைகளைத் தடுப்பது - நீட் தேர்வு ஒழிப்பு - இயக்கத்தை பலப்படுத்துவது ஆகிய அய்ந்து பணிகளை முன்னிறுத்தியே என் எஞ்சிய வாழ்நாள் பணிகள் அமையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (2.12.2021) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களை சந்தித்தார். அவ்விவரம் வருமாறு:


முதலமைச்சர்
உள்பட அமைச்சர்கள் வாழ்த்து

எனது 89ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்கள், அவர்களோடு மாண்புமிகு மூத்த அமைச்சர்கள் திருவாளர்கள் துரைமுருகன், ..வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் என்னுடைய இல்லத்திற்கு வந்து வாழ்த்து சொன்னார்கள்.

மிகுந்த உற்சாகமூட்டக்கூடிய அவர் களின் வாழ்த்துக்கு நன்றி செலுத்துகின்ற அதேநேரத்தில், தந்தை பெரியாருடைய வாழ்நாள் மாணவனாகிய நான், தந்தை பெரியார் அவர்களை சுமார் 80 ஆண்டுகளாக மாணவப் பருவந்தொட்டு, இளமைப் பருவந்தொட்டு பின்பற்றியதினுடைய விளைவாக, தந்தை பெரியாருடைய லட்சியங்களை, அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவேண்டும் என்பதிலே, அதே பணியாக இருப்பவன். அதைத் தவிர வேறு பணி எனக்குக் கிடையாது.

எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது

அந்த வகையில், தந்தை பெரியார் அவர்களின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கின்ற அவருடைய விழைவை,  இன்றைய ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி செயல்படுத்தி இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், இவ்வாட்சி மக்களுடைய நலன் சார்ந்த ஆட்சியாக இருப்பதும், திராவிட மாடல் என்றால், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய முதல் இடத்தைப் பெறக்கூடிய ஆட்சியாக - சிறப்பான ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதும் - எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் முதுமையைக் குறைத்து, இளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.

அய்ந்து பணிகளை முன்னிறுத்தியே எஞ்சிய வாழ்நாள் பணி!

அந்த வகையில், மிக முக்கியமான வாய்ப்பாக இதைக் கருதி, எஞ்சிய என்னுடைய வாழ்நாளை, நிச்சயமாக மக்கள் தொண்டாற்றுவதில், ஜாதி ஒழிப்புப் பணிக்கே முன்னுரிமை கொடுத்து - தந்தை பெரியார் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஜாதி ஒழிக்கப்பட்டது என்ற சட்டத் திருத்தம் வரவேண்டும் என்று சொன்னார்கள். அதை நோக்கி, அதற்கான களங்களை அமைத்து செயல்படுவோம் என்பது முதல் பணி.

இரண்டாவதாக, இந்த ஆட்சியைப் பாதுகாப்பது. தேவையற்ற விமர்சனத்தை, சரக்கில்லாதவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது தாய்க்கழகமாகிய திராவிடர் கழகத்தினுடைய பணியாகும்.

மூன்றாவதாக, ஆணவக் கொலைகள் என்ற பெயரால், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்பவர்களை, பெற்றோரே, கூலிப்படைகளை ஏவி கொல்லக் கூடியதை எதிர்த்து, கடந்த 26 ஆம் தேதி ஓர் அருமையான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

அத்தீர்ப்பில், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் சிறப்பான பணிகளை செய்யவேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். கலப்புத் திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம் ஒன்றுதான், ஜாதியை ஒழிக்க வழி என்று உச்சநீதிமன்றம் சொல்லியும், இதுவரை ஒன்றிய அரசும், பல மாநில அரசுகளும் பின்பற்றாமல் இருக்கின்றன என்று சில நாள்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்காட்டி, அந்தப் பணியை வற்புறுத்தும் வேலையை, இந்த ஆண்டு வேலையாக நாங்கள் எடுத்துக்கொள்ளுகிறோம் என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

'நீட்' தேர்வு ஒழிப்பு என்பதற்கு, பொது மக்கள் மத்தியில், விழிப்புணர்ச்சியை உருவாக்குவது நான்காவது பணி.

அய்ந்தாவது, இயக்கத்தினுடைய பலத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை மேற்கொள்வது.

மேற்கண்ட அய்ந்து பணிகளை முன்னிறுத்தி, எஞ்சிய வாழ்நாளில் அவைகளைத்  தெளிவாகச் செய்து,

திராவிட மாடல் ஆட்சியைக் காப்பாற்றுவதில், அதற்கு ஏற்படுகின்ற விமர்சனங்களை எதிர் கொள்வதில் தாய்க்கழகம், திராவிடர் கழகம் வாளாக இருக்கவேண்டிய நேரத்தில் வாள் வீச்சாகவும், பாதுகாக்கவேண்டிய நேரத்தில் பாதுகாப்புக் கேடயமாகவும் இருக்கும்.

மீண்டும் அதே தவறை செய்தால், இருக்கின்ற இடத்தைக்கூட தக்க வைத்துக் கொள்ள முடியாது

செய்தியாளர்:   தமிழ்ப் புத்தாண்டைப் பொருத்தவரையில், தை ஒன்றாம் தேதிதான் கொண்டாடவேண்டும் என்கின்ற கோரிக்கை இருக்கிறது; அதேநேரத்தில், சித்திரை ஒன்றாம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடவேண்டும்; தை ஒன்றாம் தேதியை கொண்டாடக் கூடாது என்று ...தி.மு..வின் ஒருங்கிணைப்பாளர் .பி.எஸ். அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: திராவிட இயக்கக் கொள்கைக்கும், அண்ணாவிற்கும் சம்பந்தமில்லாமல் கட்சிக்குப் பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு அதுதான் அடையாளம்.

அண்ணாவினுடைய கருத்து என்ன?

திராவிட இயக்கத்தினுடை கொள்கை என்ன?

அவருடைய கட்சிக்குப் பெயர் என்ன?

என்பதையெல்லாம் மறந்துவிட்டு, ஏற்கெனவே செய்த தவறை அவர்கள் மீண்டும் அவர்கள் செய்வது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.

தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லும்பொழுது, 60 ஆண்டுகளில், ஓராண்டிற்காவது தமிழ்ப் பெயர் இருக்கிறதா?

தைத் திருநாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று 1932 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில், தமிழறிஞர்கள் எல்லாம் கூடி முடிவெடுத்தார்கள். அதுமட்டுமல்ல, எல்லா தமிழறிஞர்களும் தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்றாம் தேதிதான் என்று அறுதியிட்டுக் கூறினர்.

ஆகவேதான், நிச்சயமாக தமிழ்நாட்டில், தமிழ் திராவிட ஆட்சியில், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்ததை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபொழுது, வீம்புக்காகவும், அவருடைய கொள்கைக்காகவும், சனா தனத்தைக் காப்பாற்றுவதற்காகவும் அதனை மாற்றினார்.

ஜெயலலிதா செய்த அதே தவறை, திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைக்கு விரோதமான அதே தவறை, இன்றைய ...தி.மு..வினர் செய்தால், அவர்கள் இப்பொழுது இருக்கின்ற இடங்களைகூட தக்க வைத்துக் கொள்ள முடியாது.

கலைஞர் ஆட்சியிலேயே ஆணையாகப்

போடப்பட்டு இருக்கிறது!

செய்தியாளர்: தை ஒன்றாம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டமாக இயற்றவேண்டும் என்று பா... நிறுவனர் இராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: பல பேர் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கருத்து ஏற்கெனவே வந்திருக்கிறது. ஆணையாகப் போட்டாலே, அது செயல்படும்.

ஏற்கெனவே கலைஞர் ஆட்சியில் ஆணை போடப்பட்டு இருக்கிறது.- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment