சென்னை பெரியார் திடலில் சிவப்பு சூரியன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

சென்னை பெரியார் திடலில் சிவப்பு சூரியன்!

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்!

மதவாத - சனாதன சக்திகளை வீழ்த்திட பெருமுழக்கம்!

 தொகுப்பு: மின்சாரம்

சென்னை, டிச.28 இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவரும், கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தவரும், தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமைப் பெற்றவராக ஒளிவீசியவரும், ஜீவாவின் வழிவந்த தலைசிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கியவரும், தலைவர்களின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் வல்லமை மிக்கவர் என்று போற்றப்பட்டவரும், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியருமான தோழர் தா.பாண்டியன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (27.12.2021) மாலை 4 மணிமுதல் 7 மணிவரை வெகுசிறப்பாக நடைபெற்றது. அரங்கம் வழிந்து, அரங்கத்தின் வெளியில் அமர்ந்து காணொலி மூலமாக நிகழ்ச்சிகளைப் பார்த்தனர், கேட்டனர்.

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் மாநிலக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் இரா.முத்தரசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

தோழர் தா.பா.வின் வாழ்க்கைக் குறிப்பினைக் கூறிய தோழர் முத்தரசன் அவர்கள் குடும்பமே நல்ல அளவு கல்வி அறிவு பெற்ற ஒன்று என்றும், அவருடைய அண்ணன் செல்லப்பா காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்றும், தோழர் தா.பாண்டியனும் அதே பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக் கல்வி விரிவுரையாளராகப் பணியாற்றியவர் என்றும்  குறிப்பிட்டார்.

சிவப்புச் சூறாவளி என்று தோழர் தா.பா.வை அடையாளப்படுத்தினார்.

(1932 மே 18 இல் பிறந்த தோழர் தா.பா. 2021 பிப்ரவரி 26 ஆம் தேதியன்று காலமானார்).

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாலன் இல்லத்தில் நேற்று முற்பகல் நடந்த ஒரு நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

தமிழ் மாநில விவசாய சங்க செயலாளராகப் பணி யாற்றிய தோழர் துரை மாணிக்கம் அண்மையில் காலமா னார். அவரது இரு மகன்களும், ஒரு மருமகனும் என்னைச் சந்தித்து ஒரு பையை ஒப்படைத்தனர். அந்தப் பையில், ஓர் உறையில் ரூ.10 ஆயிரம்; இன்னொரு உறையில் ரூ.5 ஆயிரம்; மற்றொரு உறையில் ரூ.16 ஆயிரம் இருந்தது. மறைந்த துரைமாணிக்கம் அவர்கள் அந்தப் பண உறைகளை வைத்திருந்த பையோடு கட்சிக்கு ஒப்படைப்பதாகக் கூறிய செய்தியை தோழர் முத்தரசன் அவர்கள் சொன்னபோது, அவரும் தழுதழுத்தார் - அந்தத் தகவலைக் கேட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அப்படியே நெகிழ்ந்து போனார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தில் இருக்கக்கூடிய தோழர் கள், குடும்பத்தினர் எந்த உணர்வோடு இருக்கின்றனர் என்பதற்கு இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மற்றொரு முக்கிய தகவலையும் முதலமைச்சர் முன்னி லையில் கூறினார் தோழர் இரா.முத்தரசன்.

நேற்று (26.12.2021) அன்று பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மையார் சிலையைப்  புடவை போட்டு மூடியிருக்கின்றனர். நேற்றிரவு பொன்னேரியில் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் ஆங்காங்கே நடக்கும்போதெல் லாம் மனநலம் பாதிக்கப்பட்ட ஆசாமி இதனைச் செய்துவிட்டார் என்று கூறிப் பிரச்சினையை முடித்து விடுவது வாடிக்கையாகி விட்டது. அது என்ன மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரியார் சிலைதான் தெரியுமா என்ற வினாவை எழுப்பிய தோழர் முத்தரசன் அவர்கள், காவல்துறையைக் கைவசம் வைத்துள்ள முதலமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறோம் என்றார்.

தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு (வயது 97) அவர்கள் தோழர் தா.பாண்டியன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்தார். முதலமைச்சர் உள்பட மேடையில் இருந்த பல கட்சித் தலைவர்கள் அனைவரும் பூக்களைப் பொழிந்தனர்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தோழர்களும் தா.பா.வுக்குப் புகழாரம் சூட்டினர்.

தா.பா.வின் படத்தினைத் திறந்து வைத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள், தா.பா.வின் குடும்பம் வெள் ளையர் ஆட்சிக்காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம் என்றார்.

பேச்சு, எழுத்து ஆற்றல், ஆளுமையும் மிக்கவராக விளங்கியவர். தந்தை பெரியார்மீது அதிகப் பற்றுடன் இருந்தவர். ஜனநாயகம், சமதர்மம் தழைக்கப் பாடுபட்டவர். மதவாத சக்திகளை வீழ்த்தவேண்டும் என்பதில் தம் பங்களிப்பைப் பெரும் அளவில் தந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

புதுச்சேரி மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் .எம்.சலீம் தனது உரையில், சிம்மக்குரலோ னாகிய தோழர் தா.பா.அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியில் அவர் பங்கு முக்கியமானது என்றார்.

தனது தந்தையாரின் மறைவின்போதும், நினைவேந்தல் போதும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் வந்திருந் ததை நினைவுபடுத்தினார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்..,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா அவர்கள் தமது உரையில், தொலைக்காட்சி விவா தங்களில் தோழர் தா.பா.வின் கருத்துகள் ஆணித்தரமாக இருந்ததைச் சுட்டிக்காட்டி, அவரின் ஆங்கிலப் புலமையையும் வியந்தார்.

இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தோழர் தா.பாண்டியன் அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக் காரர் மட்டுமல்ல; சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகவும் இருந்தவர்.

'ஜனசக்தி' வெறும் காகிதம் அல்ல - ஆயுதம் என்ற தா.பாண்டியன் போன்ற பலரும் தோன்றவேண்டும் என்றுரைத்தார். சமூகநீதித் திசையிலும் அவர் மிகவும் ஆர்வம் காட்டினார் என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள், தோழர் தா.பா. ஜீவாவின் வாரிசு என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார்.

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால், வெறும் வர்க்கம் பற்றிதான் பேசுவார்கள் என்று கூறப்படுவதுண்டு.

இதனை மடை மாற்றம் செய்தவர் தோழர் ஜீவா. திராவிட இயக்கத்தின் மொழி உணர்வு, இலக்கியப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமை போன்ற பிரச்சினை களையும், பொதுவுடைமைவாதிகள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, அவ்வாறு செயல்பட்டவர்கள்தாம் தோழர் ஜீவாவும், தா.பா.வும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டியவர். ஜெனீவாவில் அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், ஈழத் தமிழர்களுக்காக தோழர் தா.பா. குரல் கொடுத்ததை முக்கியமாக எடுத்துக் கூறினார் எழுச்சித் தமிழர்.

சங் பர்வார்க் கூட்டம் முன்னெடுக்கும் மதவாத, சனா தனப் பிற்போக்குத்தனத்தினை வேரறுக்க அனைவரும் ஒன்றுபடுவோம் என்று சூளுரைத்தவர் தோழர் தா.பா. என்றார் தொல்.திருமாவளவன்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மதுரை மாநகரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாட்டில், சக்கர நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் அவர் கம்பீரமாக ஆற்றிய எழுச்சியுரை இன்னும் நம் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டுள்ளது என்றார்.

பாசிச சக்திகளைக் காலில் போட்டு மிதிக்கவேண்டும் என்று பாண்டியன் கர்ஜித்ததை நினைவுபடுத்தினார் தோழர் கே.பி.

டில்லியில் விவசாயிகள் 380 நாள்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் - மோடி ஆட்சியை மண்டியிடச் செய்ததை முக்கியமாகக் குறிப்பிடவும் செய்தார் சி.பி.எம். மாநில செயலாளர்.

.தி.மு.. பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள், தோழர் தா.பா. மதுரை - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மாநாட்டில் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் கர்ஜனை செய்ததை கச்சிதமாக நினைவூட்டிப் பேசினார்.

எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார் தோழர் தா.பா.

''இடுப்பு எலும்பும், கால் எலும்பும் பாதிக்கப்பட்டு விட்டது என்றாலும், மண்டை சரியாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனை யாராலும் அடக்க முடியாது - போரில் நாம் வெற்றி பெறுவோம்!'' என்று தோழர் தா.பாண்டியன் முழங்கியதை திராவிட இயக்கப் போர்வாள் அவருக்கே உரித்தான முறையில் எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தான் நேரில் கண்ட அனுபவத்தை எடுத்துக் கூறினார். 45 ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊரான கீரப்பாளையத்திற்குத் தோழர் தா.பாண்டியன் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வெள்ளைக்குதிரையின்மீது ஏறி வந்தார். அவர் பேச்சை முதன்முதலாகக் கேட்டேன். உடலில் உள்ள உரோமம் எல்லாம் எழுந்து நிற்கும் அளவுக்கு இருந்தது அவரின் உரைவீச்சு - வசீகரிக்கும் பேச்சு மட்டுமல்ல - கொள்கையும் கொலு வீற்றிருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணித் தேரை சிறப்பாக நடத்திச் செல்லுகிறார் - திமு.. தலைவரும், முதலமைச்சருமான தளபதி மு..ஸ்டாலின் அவர்கள். அதனுடைய விளைச்சலைத்தான் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம் என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில், முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

இங்கே திறக்கப்பட்டது வெறும் படமல்ல - அனைவருக்கும் நல்ல பாடமாகும். கொள்கை எதிரிகளை எச்சரிக்கும் பாடமும் ஆகும்.

ஈரோட்டில் திராவிடர் கழக நிகழ்ச்சியில் தோழர் தா.பா. ஆற்றிய உரையை ''சமுதாய விஞ்ஞானி பெரியார்'' என்ற நூலாக வெளியிட்டோம். இதுவரை எட்டுப் பதிப்புகள் வெளியாகியுள்ளன. அதற்குப் பிறகு, அந்நூலை மேலும் விரிவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டோம். அவ்வாறே சிறப்பாக மேலும் விரிவுபடுத்தி எழுதிக் கொடுத்தார். விரிவுபடுத்தப்பட்ட அந்த நூலையும் வெளியிட்டு வருகிறோம்.

தோழர் தா.பா.வைப்பற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஒருமுறை சொன்னார்; அதுவும் கலைஞர் வீட்டுத் திருமணத்தின்போதுதான்.

தோழர் தா.பாண்டியன் என்னைத் தாக்கியும் எழுதுவார்  - தாங்கியும் எழுதுவார் என்று கலைஞர் கூறியதில் ஆயிரம் அர்த்தம் உண்டு.

இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை என்ன?

எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை ஒதுக்கி வைத்து, எது நம்மை இணைக்கிறதோ அதனைப் பெரிதுபடுத்தி, படம் எடுக்கும் பாசிச விஷப் பாம்பை வீழ்த்தி ஜனநாயகத்தை, சமதர்மத்தைக் கட்டிக் காப்போம்.

நம்முடைய அணுகுமுறைகளால் தமிழ்நாட்டை வென்றது மட்டும் போதாது; இந்தியாவையும் வெல்ல வேண்டும். இந்த மேடை அதற்கொரு எடுத்துக்காட்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (முழு உரை 4 ஆம் பக்கம் காண்க).

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜா அவர்கள், ஒரு திருக்குறளோடு தன் உரையைத் தொடங்கினார்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

தோழர் தா.பா. விட்டுச் சென்றவைமூலம் அவருடைய தகுதியும், சிறப்பும் நிலைத்து நிற்கும்.

1968 இல் தோழர் தா.பா.வின் உரையை முதன்முதலாகக் கேட்டேன். அவரால் ஈர்க்கப்பட்டேன்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமல்ல; மதவாத எதிர்ப்பு, மனித உரிமை, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைப்பற்றி எல்லாம் அவர் ஆற்றிய உரைகள் நிலைத்து நிற்கக் கூடியவை.

இலண்டன் மாநாட்டில் நான், தா.பா., நமது மு..ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன் எல்லோரும் கலந்துகொண்டோம். மறக்க முடியாத நிகழ்ச்சி - நாட்கள் அவை.

ஆர்.எஸ்.எஸின் ரிமோட் கண்ட்ரோல் மோடி அரசு என்பார்கள். நான் சொல்லுகிறேன், டைரக்ட் கண்ட்ரோல் என்பதுதான் உண்மை.

ஒருமுறை மனுவாதி பாசிசம் என்று எழுதினேன். என் மகள் சொன்னார், பிராமணிக பாசிசம் என்று எழுதுங்கள் என்று சொன்னார். அதுதான் நாட்டில் நடக்கிறது என்றார் தோழர் டி.ராஜா.

தி.மு.. தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின்

தா.பா. என்றால், தலைதாழாத பாண்டியன் என்று பொருள். எந்த சூழலைக் கண்டும் அஞ்சாதவர்.

கம்யூனிஸ்டுக் கட்சியும், தி.மு..வும் ஒரே கொள்கைக் குடும்பம். இன்று நேற்றல்ல - இரு கட்சிகளும் தோன்றிய காலந்தொட்டே இந்த உறவு உண்டு.

இது படம் அல்ல; பாடம் என்று நமது ஆசிரியர் சொன்னார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பாடம் கற்பிக்கும் பாடம் தோழர் தா.பா.

மதுரை கம்யூனிஸ்டு மாநாட்டில் அவர் பேசவில்லை - கர்ஜித்தார். நாம் வெற்றி பெறுவோம் என்றார் அம்மாநாட்டில். ஆனால், நாம் பெற்றுள்ள வெற்றியை நேரில் பார்க்க அவர் நம்மிடம் இல்லை.

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதெல்லாம், அவர் நலம் விசாரிக்கச் செல்லும்போதுகூட, உடல்நலனைப் பற்றிப் பேசுவதில்லை -நாட்டு நடப்பைப்பற்றித்தான்  அவர் பேசுவார்.

மரணத் தருவாயில் இருந்தபோதுகூட, தம் தோளில் எப்பொழுதும் அணி செய்யும் அந்தச் சிவப்புத் துண்டு எங்கே என்று மருத்துவரிடம் கேட்டவர் அவர்.

தமிழ்நாட்டின் பேச்சாளர்கள் எனும் வரலாற்றில் தா.பா. அவர்களுக்கென்று முக்கிய இடம் உண்டு.

தா.பா. படத்திறப்பு பெரியார் திடலில் நடப்பது பொருத்தமானது. மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தன் பெயரை இனிஷியலாகத் தந்து வளர்த்து, கல்வியூட்டி, திருமணம்வரை செய்து வைத்தவர் தந்தை அல்லாமல் வேறு என்ன? அதனால்தான், தா.பா. அவர்கள், தந்தை பெரியார்மீது அளவற்ற பற்றும் மதிப்பும் வைத்திருந்தார்.

பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

சுயமரியாதை,

சமதர்மம்,

சமத்துவும்,

மனித உரிமை,

ஜனநாயகம்

இவற்றைப் பாதுகாக்க - உருவாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்! அதுதான் தா.பாண்டியன் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவேந்தல் என்று முத்தாய்ப்பாக முடித்தார் முதலமைச்சர். (முழு உரை 8ஆம் பார்க்க)

மாநாட்டுத் தலைமை உரையின் முடிவுரை என்ற முறையில், தோழர் இரா.முத்தரசன் அவர்களின் எச்சரிக்கை முக்கியமானது.

பொதுக் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், தனி நபர் தாக்குதலிலும் வரம்பு மீறிப் பேசும் போக்கு வளர்ந்து வருவது நல்லதல்ல. இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்குத் தொடருமேயானால், எதிர்விளைவு ஏற்படும் எச்சரிக்கை என்றார் தோழர் முத்தரசன்.

இது யாரை நோக்கி என்பது நாட்டு நடப்பை அறிந்தோர்க்கெல்லாம் மிக நன்றாகவே தெரியும் - புரியும்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், தோழர் தா.பா.வின் நினைவேந்தல் நிகழ்ச்சி முற்போக்குச் சக்திகளின் சண்டமாருதம். பிற்போக்குச் சக்திகளுக்கோ மரண சாசனம்!

வெல்லட்டும் புரட்சிவீழட்டும் சனாதன சக்தி!

(கூட்ட முடிவில், ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காக்கப்பட்டது).

No comments:

Post a Comment