போற்றிப் பரவிட வார்த்தை ஏது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

போற்றிப் பரவிட வார்த்தை ஏது?

-மறைமலை இலக்குவனார்

பேதைமை மீதுறப் பூதலம் மீதிலே

சூதுறச் சூழ்ச்சியால் ஆரியர் ஓதிய

ஜாதியும் வருணமும் சாத்திரப் பொய்மையும்

மூடச் சடங்கும் மோதி மிதித்து

அடிமைத்  தளையே அருள்பிர சாதமாய்

சூத்திர இழிவே சொர்க்க வாயிலாய்

மதமெனும் தளையே கங்கணக் காப்பென

மயங்கிக் கிடந்த  மக்களை எழுப்பிப்

பகுத்தறிவென்னும் சுடரொளி காட்டி

விடிவும் வாழ்வும் மலரச்செய்த

புரட்சி ஞாயிறு பெரியார் அவர்களின்

இயக்கப் பொறுப்பைத் திறம்படத் தாங்கித்

திக்குகளெல்லாம் பெரியார் நெறியை

மிக்க சிறப்புடன் பரப்பிடும் பணியை

நாளும் நாளும் துடிப்புடன் ஆற்றி

நாடும் இனமும் நலம்பெற உழைக்கும்

ஆசிரியர் அய்யா! அன்பின் வடிவே!

தோழமை என்பதே தலைமை நெறியாய்

அனைவரும் இணைந்தே ஆற்றுவோம் பணியெனச்

செயலால் உழைப்பால் இலக்கணம் வகுக்கும்

தலைமைப் பண்பின் இலக்கண அடைவே!

எமையெலாம் நட்புடன் கனிவுறப் பிணைத்திடும்

ஈடும் இணையும் யாண்டும் இல்லாப்

பாசமும் நேசமும்  பண்பும் அன்பும்

போற்றிப் பரவிட வார்த்தை ஏது?

தாய்க் குலத்தைத் தாங்கிடும் தந்தையே!

தொண்டர்  நலனைக் காப்பதில்  தாயே!

அறிஞர் அனைவரும் வியந்திடும் அறிவே!

அரசியல் நோய்க்கு மருத்துவம் பார்த்து

அல்லல் தீர்த்திடும் மருத்துவர் திலகமே!

சனாதனப் பேயால் மதவெறித் தீயால்

நாட்டில் இன்னல் ஏற்படா வண்ணம்

பெரியார் நெறியில் அயராதுழைக்கும்

ஒப்பிலாத் தலைவரே! உயர்குணச் செம்மலே!

ஒருநொடிப் பொழுதும் ஓய்வைக் கருதிடா

உங்கள்  உழைப்பு எமக்கெலாம் வியப்பு!

இப்படி உழைத்திட எம்மாலாகாது!

வெட்கம் எனினும் சொல்லி விடுகிறேன்:

நூற்றிலொரு பங்கும் சாத்தியமில்லை!

எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்!

அன்னை மோகனா அன்புப்பேணலில்

அவ்வப்போது ஓய்வு கொள்க!

செயலில் துடிப்பும் கொள்கைப் பிடிப்பும்

அன்பின் கனிவும் அறிவுத்தேடலும்

எங்ஙனம் அமைந்திட வேண்டுமென்பதைச்

சொல்லால் கூறாது செயலால் காட்டிடும்

ஆசிரியர் அய்யா! வணங்கி மகிழ்கிறோம்!

மாண்புறு முதல்வர் தளபதி அவர்களின்

மாசறு ஆட்சிக்கு அரணாய் அமைந்து

இன்னும் நூறாண்டு இணையிலாத் திராவிடம்

மின்னும் புகழுடன் ஆட்சி செலுத்திட

மேலும் நூறாண்டு நலமுடன் வாழ்க!

மனைவி, மக்கள், நட்பு, சுற்றம்,

கழகத் தொண்டர், அன்புப் பிணைப்பில்

இன்னுமோர் இருநூறாண்டு வாழ்கவே!

ஜாதிச் சதியால் அடித்தளம் அழுந்தி

இன்னல் சூழ்ந்து இடர்ப்படும் மாந்தர்

தொல்லை நீங்கி உயர்வுகள் வாய்ந்து

உவகை பொங்க உம்மை வாழ்த்தவே

முன்னூறாண்டு மகிழ்வுடன் வாழ்கவே!

உங்கள் தலைமையில் சிறப்புடன் இயங்கிடும்

பெரியார்பல்கலைக் கழகம் உட்பட

அறிவை வளர்க்கும் நிறுவனம் பலவும்

மருத்துவ மனையும் காப்பகம் பள்ளி

என்றே பற்பல தொண்டற நிலையமும்

சமுதாயத் தொண்டில் சாதனை படைத்துப்

பார்க்கெலாம் புதுநெறி காட்டிடும் காட்சியைக்

கண்ணாரக் கண்டு களிமீக் கூர்ந்திட

அய்ந்நூறாண்டு அகமகிழ வாழ்கவே!

நாட்டில் வாழும் அனைத்து மக்களும்

மானமிகு மனிதர் என்னும் சொல்லால்

மட்டுமே அறியப்படுவர்;எனும்நிலை வாய்ந்து

ஜாதியும் பேதமும்  தொலைந்தே போனது;

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும்

சிறப்புடைக் குறள்நெறி சாசனம் ஆனது;

பொற்காலம் மலர்ந்தது;பொங்குக சமநிலை;

என்றுநம் நாடு இயங்கிடக் கண்டே

ஆயிரம் ஆண்டு வாழ்க!வாழ்கவே!

No comments:

Post a Comment