நடப்பது அய்யாயிரம் ஆண்டுகாலத்துப் போர்! நம் காலத்தில் அதற்கொரு முடிவைக் காண்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

நடப்பது அய்யாயிரம் ஆண்டுகாலத்துப் போர்! நம் காலத்தில் அதற்கொரு முடிவைக் காண்போம்!

 பிறந்த நாள் - நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

சென்னை, டிச.4  நடப்பது அய்யாயிரம் ஆண்டுகாலத்துப் போர்! நம் காலத்தில் அதற்கொரு முடிவை காண்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பிறந்த நாள் கூட்டம்

நேற்றுமுன்தினம் (2.12.2021) சென்னை பெரியார் திடலில்   நடைபெற்ற  தமிழர் தலைவர் ஆசிரியரின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய இந்த விழா நிகழ்ச்சியில், சிறப்பாகக் கலந்துகொண்டு மிக அருமையான உரையை, நூல்கள் வெளியீட்டு விழா என்ற பெயராலே நிகழ்த்தியிருக்கின்ற உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு முனைவர் அருமைத் தோழர் .பொன்முடி அவர்களே,

ஓர் அன்புக் கட்டளையை விடுத்திருக்கிறீர்கள்!

இந்நிகழ்வில் ‘‘வாழ்வியல் சிந்தனைகள்'' தொகுதியை வெளியிட்டு ஓர் அன்புக் கட்டளையை என்மீது சுமத்தி, இங்கே அமர்ந்து, அதற்கு நான் பதிலளிக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அதற்குரிய வாய்ப்பையும் இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.

அந்த வகையில், எப்போதும் நம்மோடு இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர், கொள்கையாளர், லட்சிய வீரர் அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான அருமைச் சகோதரர் மானமிகு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

எந்நாளும் திடலுக்குரியவரான பேராசிரியர் சுப.வீ.

வழக்கமான வகையில் அரசியல் உரைகள், பல்வேறு தாக்குதல்கள், நெருக்குதல்கள் எல்லாம் இருக்கின்ற நேரத்தில், இந்நிகழ்வில், அவற்றில் இருந்து விடுபட்டு, சில நேரங்களில் கோடை வெப்பத்தைத் தாங்க முடி யாமல், குற்றாலத்திற்குப் போவோம், கொடைக்கானலுக் குப் போவதைப்போல, இன்றைக்கு ஒரு விசித்திரமான ஓர் உரையை ஆற்றினார் நம்முடைய சுப.வீ. அவர்கள். வாழ்வியல் சிந்தனைகளைப்பற்றி முழுக்க முழுக்க உரையாற்றிய அருமைச் சகோதரர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், எந்நாளும் திடலுக்குரியவரான பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கி, இரண்டு மணி யானாலும், பசி தெரியாத அளவிற்கு, கருத்துகளைப் பொழிந்து சிறப்பாக செயல்படுத்துவதற்குத் திட்டமிட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், அடுத்த திராவிடர் கழகத் தலைவருமான அன்பிற்கும்,, பாராட்டுதலுக்கும் உரிய அருமைச் சகோதரர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலர்

கடந்த ஒரு மாதமாக, தன்னுடைய இல்லத்திற்குக்கூட போகாமல், மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலரை தயாரித்து, அதில் சுயமரியாதைக் கருத்தை முன்னிலைப் படுத்தி, ஒரு நல்ல மலரை - பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆங்கிலக் கட்டுரைகளை  சிறப்பாக கொடுத்திருக்கின்ற இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய அருமைச் சகோதரர் மானமிகு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

அதேபோல, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாள ராகவும்,  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப் பின் பொதுச் செயலாளராகவும், செயலூக்கியாகவும் இருப்பதோடு, தமிழ்நாடு அரசு அமைத்திருக்கின்ற சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர்களில் ஒரு வருமாக இருக்கக்கூடிய அருமைத் தோழர் கோ.கருணா நிதி அவர்களே,

இறுதியில், நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பொறியாளர் .இன்பக்கனி அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

மாநிலத்தினுடைய பல்வேறு பகுதிகளிலிருந்து, மழை, வெள்ளம், புயல் என்றெல்லாம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இங்கே வந்து குழுமியிருக்கக்கூடிய கழகத்தினுடைய செயல்வீரர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களே,  பெருமக்களே,

என்னுடைய தலைதாழ்ந்த நன்றி

நேரிடையாக எங்களுக்கு வாழ்த்துச் சொல்லி, ஊக்கப்படுத்தி இருக்கின்ற நம்முடைய மாண்பமை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைவர்கள், தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய தலை தாழ்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கெல்லாம் தெரியும், பிறந்த நாள் விழா நடத்தவேண்டும் என்று தோழர்கள் கேட்டாலும், நான் அனுமதிப்பதில்லை.

அப்படியே அவர்கள் எனது பிறந்த நாள் விழாவை நடத்திக் கொள்ள விரும்பினாலும், நானும், என்னுடைய வாழ்விணையர் உள்பட குடும்பத்து உறுப்பினர்களும் ஊரிலேயே இருப்பதில்லை.

ஆனால், இந்த ஆண்டு நானே கழகத் தோழர்களிடம் சொன்னேன். ‘விடுதலை'க்கு சந்தாவை சேர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், கழகத் தோழர்களை, குடும்பம் குடும்பமாக அவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்பினேன்.

காரணம் என்னவென்றால், கரோனா தொற்று எனக்கு வந்த நேரத்தில், நம்முடைய தோழர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.

நான் மருத்துவமனையில் இருக்கும்பொழுது, நம்மு டைய எதிரிகள்கூட  திரும்பக்கூடாது என்று கவலைய டைந்தார்கள். அவர்கள் பிள்ளையாரை வேண்டிக் கொண்டார்கள்.

தொண்டனுக்கும் தொண்டன்

இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு முன்பு எந்தப் பிறந்த நாளிலும் கிட்டாத மகிழ்ச்சி, இந்தப் பிறந்த நாள் விழாவில் எனக்குப் பரிசாக அளிக்கப் பட்டு இருக்கிறது நான் உங்களுடைய தோழன் - உங் களுடைய தொண்டன் - இயக்கத்தினுடைய கடைசி வரிசையில் இருக்கக்கூடிய தொண்டனுக்கும் தொண்டன்.

நாம் ஒரு குடும்பம் - இயக்கம் மட்டுமல்ல - கொள் கைக் குடும்பம். கொள்கைக் குடும்பம் என்று சொல்லும் பொழுது, அதில் கம்யூனிஸ்டுகள் இருக்கலாம்; திராவிட முன்னேற்றக் கழகத்தார் இருப்பார்கள்; காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்; மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்; முஸ்லிம் லீக் கட்சியைச் சோர்ந்தவர்கள் இருப்பார்கள்; மனிதநேய அமைப்பினர் இருப்பார்கள்; ஆகவேதான், இது ஒரு கொள்கைக் குடும்பம் - லட்சியக் குடும்பம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மகிழ்ச்சியை நான் மட்டும் அனுபவிக்கக் கூடாது. மகிழ்ச்சியும் பொது வுடைமையாக்கப்பட வேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

வழமைக்கு மாறாக

இந்த ஆண்டு நான் விரும்பினேன்

எல்லோரும், இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் என்று சொல்லுகின்ற நேரத்தில், அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகத்தான், அனைவரையும் சந்திக்க வேண்டும்; பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று வழமைக்கு மாறாக இந்த ஆண்டு நான் விரும்பினேன்.

காரணம் என்ன?

ஒரு பெரிய மகிழ்ச்சி.

1974 ஆம் ஆண்டு பொதுக்குழு தீர்மானம்

என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து, இந்த இயக்கம், அதனுடைய எதிர்காலம் என்றெல்லாம் சொன்ன நேரத்தில், எனக்கு முன் உரை யாற்றிய பூ.சி.இளங்கோவன் சுட்டிக்காட்டியது போன்று, இயக்கத்தில் துரோகங்கள் தலைதூக்கிய நேரத்தில், அதைப்பற்றி கவலைப்படாமல், அன்னை மணியம்மை யார் அவர்கள், திருச்சியில், 1974 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் போட்டார்கள்.

அந்தத் தீர்மானத்தில் முக்கியமான வாசகங்களை நாங்கள் வரையறுத்தோம்.

அம்மா அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டது 1974. அய்யா அவர்கள் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மறைவுற்றார்; 25 ஆம் தேதி அடக்கம் செய்தோம்.

பிறகு இடைவெளி விட்டு, அய்யா அவர்கள் எந்த இடத்தில் சுற்றுப்பயணம் தொடங்கவேண்டும் என்று மருத்துவமனையில் இருக்கும்பொழுது சொன்னார்களே,

அதே திருவண்ணாமலையில் இருந்து அம்மா தலை வரான பிறகு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்கள்.

அம்மா தலைவரானதும் போட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும்.

‘‘தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதை யில், அவர் விட்டுச் சென்ற பணியை, எந்தவிதமான சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று உறுதியேற்கிறோம்.’’

இதுதான் அந்த மிக முக்கிய தீர்மானமாகும்.

அய்யாயிரம் ஆண்டுகாலத்துப் போர்

விட்டுச் சென்ற பணி என்பது இருக்கிறதே, அது ஒரு நீண்ட வரலாறு. ஏனென்றால், இது அய்யாயிரம் ஆண்டுகாலத்துப் போர். சாதாரணப் போரல்ல. ஏகலைவன் - துரோணாச்சாரியார் காலத்துப் போர். சம்பூகன் - இராமன் காலம் - அது கற்பனையா? காவியமா? என்பது முக்கியமல்ல - தத்துவங்கள் மிக முக்கியம். நம் காலத்தில் ஒரு முடிவைக் காண்போம்.

அந்தப் போரை அய்யா அவர்கள் நடத்தி, அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல,

Putting Centuries into a Capsules என்று சொன்னார். பல நூற்றாண்டு வேலையை, 50 ஆண்டுகளுக்குள் செய்து முடித்தார் தந்தை பெரியார்; வெற்றி பெற்றார், அது தொடர் வெற்றியாக அமையவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில்தான், அய்யா அவர்கள் மறைந்தார்கள்.

அந்த நேரத்தில் பெரும் சுமை.

ஏனென்றால், நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டி ருக்கின்ற கட்டளைகள் -

விட்டுச் சென்ற பணிகளை - போட்டுத் தந்த பாதை யில், அந்த பாதையை விட்டு மாறாமல், எவ்வித சபலங் களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று சொன்ன நேரத்தில், அதை முன்னெடுத்து செல்லுகின்ற பணியை, உங்களைப் போன்ற தோழர்கள், இன்றைக்கு நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்றெல்லாம் இங்கே சொன்னார்கள், என்னை உற்சாகப்படுத்துவதற்கு - அதன் தொடர்ச்சியே  இந்த நிலை என்றும் சொன்னார்கள்; உண்மைதான்.

நாம் மனமுவந்து ஏற்றுக்கொண்ட கொள்கை

ஆனால், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த நிலையில் இருந்து மாறுவதற்கு, வேறு வழியே கிடையாது. ஏனென்றால், நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை, பிறரால் திணிக்கப்பட்டதல்ல; நாம் மனமு வந்து ஏற்றுக்கொண்ட கொள்கை. எனவேதான், அது மூச்சுக்காற்று.

மூச்சுக்காற்றை மாற்றிவிட முடியாது. மூச்சுக் காற்று நின்றால், மரணம்தான். அது ஒன்றுதான் நம்மைப் பிரிக்க முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வுகள் நமக்கு இருந்த நேரத்தில்தான், தொடர்ந்து அந்தப் போராட்டங்கள் நடந்தன.

வாராமல் வந்த மாமணிபோல்,

ஒரு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி

அன்னையார் மறைவிற்குப் பின், இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இருந்தது, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மகளிர் இன்றைக்கு எல்லா தோழர் களுடைய ஆதரவு - இவ்வளவும் முக்கியமல்ல தோழர்களே - அதையும் தாண்டி, பெரிய அள விற்கு, வாராமல் வந்த மாமணிபோல், ஒரு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - இன்றைக்குக் கிடைத்து - இந்தியாவிலேயே இதுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெருமையைப் பெற்றிருக்கின்றோம்.

சில அறிவு சூனியங்கள் - வெற்றிடம் என்று சொன் னார்கள்; அந்த இடத்தில், சுலபமாக வந்து அமர்ந்து விடலாம் என்று கணக்குப் போட்டார்கள். நடிகர்களைத் தேடினார்கள்; மற்றவர்களைத் தேடினார்கள்.

ஒவ்வொரு நாளும் தலைநிமிர்ந்து நிற்கின்றோம்

ஆனால், இந்த இயக்கம், கட்டிக் காக்கப்பட்ட இயக்கம் - இங்கே வந்திருக்கின்ற தோழர்களின் கட்டுப் பாடு உள்ளிட்ட அத்தனையையும் இணைத்து நாம் அணிவகுத்து  - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்றைக்கு ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகராக உயர்ந்திருக்கக்கூடிய நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர் களுடைய ஆட்சியால், அது ஏற்பட்ட காரணத்தினால்,  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒவ்வொரு நாளும் தலைநிமிர்ந்து நிற்கின்றோம்.

சென்னைக்கு, மும்பையிலிருந்து நேற்று முன்தினம் வந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஜஸ்டிஸ் பாட்டீல் அவர்கள், மூன்று நாள்களாக தமிழ்நாட்டிலேயே இருந்து, இந்த பிறந்த நாள் விழா மேடைக்கு வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலரிலும் அவர் கட்டுரை எழுதியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றினால்தான் விடியல் உண்டு

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தத்துவம் - மாநில உரிமைகளானாலும், பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து நாம் வெளியே வருவதாக இருந்தாலும், அதற்குத் தேவை திராவிடத் தத்துவம், அதை இன்றைக்கு நிறைவேற்றுவது மு..ஸ்டாலின் ஆட்சிதான் என்று கணித்து, அதை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றி னால்தான் விடியல் உண்டு என்று சொல்கிறார்கள்.

எனவே, நாம் முதலில் பெற்றது தமிழ்நாட்டு விடியல். அடுத்த கட்டம் இந்தியாவிற்கு விடியல் என்றால், அது எங்கே இருந்து கிளம்பவேண்டும் என்றால், தமிழ் நாட்டிலிருந்துதான் கிளம்பவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை வந்துள்ளது.

அடக்க உணர்வோடு சொன்னார் நம்முடைய முதலமைச்சர். முதல் முதலமைச்சர் என்று எனக்குப் பெயர் வந்தால் மட்டும் போதாது; தமிழ்நாடு முதல் மாநிலமாக வரவேண்டும் என்று சொன்னார். இன்றைக்கு அதைப் பார்த்து அவரும் மகிழ்கிறார்; நாமும் மகிழ் கிறோம்.

எனவேதான், மகிழ்ச்சியோடு இந்தப் பிறந்த நாள் என்பது ஓர் அடையாளமே தவிர வேறொன்றுமில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment