சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆணை வெளியிடப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆணை வெளியிடப்பட்டது

 சென்னை, டிச.28   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க கீழ்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, “சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினை அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

1. பேராசிரியர்  சுப.வீரபாண்டியன் - தலைவர்

2. முனைவர் கே.தனவேல், ...(ஓய்வு) - உறுப்பினர்

3. பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் - உறுப்பினர்

4. கவிஞர்  மனுஷ்யபுத்திரன் - உறுப்பினர்

5.  .ஜெய்சன் - உறுப்பினர்

6. பேராசிரியர் முனைவர் ஆர். இராஜேந்திரன் - உறுப்பினர்

7.  கோ.கருணாநிதி - உறுப்பினர்

8. மருத்துவர் சாந்தி ரவீந்திர நாத் - உறுப்பினர்.

இக்குழுவில் சமூக சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளர் அவர்கள் உறுப்பினர் - செயலராக அங்கம் வகிப்பார்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் நெறிமுறைகளும், வரையறைகளும் பின்வருமாறு:-

i. அரசு ஆணைகள் மற்றும் விதிகளின்படி கல்வி, வேலைவாய்ப்பு நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, எந்தவொரு துறையிலும் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், குழு தனது பரிந்துரைகளை அளிக்கும்.

ii. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யும் போது முதல் தலைமுறை மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் இது போன்ற பிற பிரிவுகளுக்கான முன்னுரிமை, இடஒதுக்கீடு ஆகியவை நடைமுறையில் உள்ள விதிகளின்படி முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதைக் குழு சரிபார்க்கும். தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் அரசு ஆணைகளின்படி முன்னுரிமைப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் போதுமான பிரதி நிதித்துவத்தை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குழு பரிந்துரைக்கும்.

iii. ஜாதி அல்லது பாலினத்தின் அடிப்படையில் எந்தவொரு தனிநபருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை என்பதை இக்குழு உறுதி செய்யும். இந்தக் குழு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்து, சமூக சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் தங்கள் இலக்குகளை எய்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் சரியான திருத்தங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.

iv. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை கண்டிப்பாக ஒழிப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளைக் குழு மதிப்பீடு செய்யும்.

v. சமூக நீதியின் முக்கியத்துவம் மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான மாநிலத்தின் முன்னோடி முயற்சிகள் குறித்து இளைஞர்களுக்கு குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு உணர்த்துவதற்கான  நடவடிக்கைகளைக் குழு பரிந்துரைக்கும்.

vi. சமூக நல்லிணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் குழு பரிந்துரைக்கும். மேலும் அச்சு, காட்சி, மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சமூகநீதி மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வழிவகைகளையும் குழு பரிந்துரைக்கும்.

vii. சமூக நீதியின் அடிப்படையிலான முற்போக்கான சிந்தனையை வளர்த்தெடுக்கவும், தந்தை பெரியார் கண்ட சீரிய சமூகம் அமைய வழிவகுக்கவும் குழு பாடுபடும்.

viii. குழுவானது தங்கள் நோக்கத்திற்காக பொருத்தமானதாகக் கருதப்படும் தகவல்களை அத்தகைய வடிவத்தில் அதிகாரிகள், அமைப்புகள் அல்லது அவசியமாகக் கருதப்படும் தனிநபர்களிடமிருந்து பெறலாம்.

ix. குழுவானது அதன் உறுப்பினர்களில் இருந்து துணைக் குழுக்களை உருவாக்கலாம் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அவசியமாகக் கருதப்படும் இடங்களில் அமர்வுகளை நடத்தலாம்.

x. குழு ஆய்வு நோக்கத்திற்காக பயணம் செய்யலாம். மேலும் கள ஆய்வையும் மேற்கொள்ளலாம்.

xi. குழுவானது, அத்தகைய ஆய்வு அல்லது கணக்கெடுப்பைத் தாமே மேற்கொள்ளலாம் அல்லது தேவைப்படின் ஏதேனும் தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள ஆணையிடலாம்.

xii. இக்குழு, இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகள் செயல்படும்.

xiii. இக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணமாக ஒரு அமர்விற்கு ரூ.2000/- வழங்கப்படும்.

xiv. இக்குழு, முதல் நிலைக்குழுவாக கருதப்படும். எனவே, முதல் நிலைக்குழுவிற்கு வழங்கப்படும் பயணச்செலவுகள் போல் இக்குழுவிற்கும் வழங்கப்படும்.

xv. இவ்வாணை நிதித்துறையின் .சா.கு.எண்.58001/ நிதித் (.) துறை நாள் 23.12.2021-இல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment