சென்னை, டிச.2 இருட்டை விரட்டுவோம் - ஜாதியை அழிப்போம் - சமூகநீதியை நிலைநாட்டுவோம் - சமத்துவக் கொடியைப் பறக்கவிடுவோம்; சுயமரியாதை மனிதனுக்கு மூச்சுக்காற்று என்பதை நிலைநாட்டுவோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
26.11.2021 அன்று காணொலிமூலம் நடைபெற்ற ‘‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சென்னையில் குடிசைமாற்று பகுதிகளில் கட்டிய வீடுகளில் சில பகுதிகள் பெயர்ந்து வந்துள்ளன; தொலைக் காட்சிகளிலும் அதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த வீடுகளை சரியாகக் கட்டியிருக்கிறார்களா என்பதற் காக, சில பகுதிகளை இடித்துப் பார்த்து ஆய்வு செய்தார்கள்; அப்படி ஆய்வு செய்தபொழுது, அந்த வீடுகள் சரியாகக் கட்டப்படவில்லை. என்றைக்கு இருந்தாலும், அது அங்கே வசிக்கின்ற மக்களுக்கு ஆபத்து என்று சொல்லி, அதற்கு மாற்று என்ன செய்யவேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தார்கள்.
அதையும், பெரியார் நடத்திய இதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள்.
மனுதர்ம அம்சங்கள் மனுதர்மவாதிகளால் உள்ளே புகுத்தப்பட்டது
எனவே, இந்த அரசமைப்புச் சட்டத்தில், எங்கெங் கெல்லாம் மனுதர்ம அம்சங்கள் மனுதர்மவாதிகளால் உள்ளே புகுத்தப்பட்டதோ, பெரும்பான்மையான அவர் களால் இங்கே உருவாக்கப்பட்டதோ, அந்த வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இதனை செய்தார்கள்.
ஆகவே, அதேபோன்றுதான், ஒரு கட்டடம் பாது காப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, அதனுடைய பெருமை எங்கே இருக்கிறது?
ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் - சமூக இழிவு ஒழிப்பு மாநாடு
பெரியார் வெறும் எதிர்மறையாக செய்யவில்லை. அதற்குப் பிறகுகூட அவருடைய நல்ல சிந்தனை - 1957 இல் இதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு, 64 ஆண்டு களாகத் தொடர்ந்து அந்தப் பயணத்தை நடத்திக் கொண் டிருக்கின்றபொழுது, ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் - சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது சென்னை பெரியார் திடலில் 8, 9 ஆகிய தேதிகளில் 1973 இல்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஜாதி, ஆர்டிகல் 17 இல்,
“Untouchability” is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of “Untouchability” shall be an offence punishable in accordance with law.''
தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.
அந்த இடத்தில், தந்தை பெரியார் சொன்னார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது
ஜாதி ஒழிப்புப் பெரிய விஷயமல்ல - 103 முறை அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறீர்களே,
உங்களுக்கு மனம் இருந்தால்,
உங்களுக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இருந்தால்,
முகப்புரையில் சமத்துவம் என்று இருக்கிறதே - முகப்புரையும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஆகவே, அதிலே தெளிவிருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?
பெரியார் வழிகாட்டினார் - அரசமைப்புச் சட்டத்தை அவர் எரித்ததோடு நிறுத்தவில்லை. என்ன செய்தால், அந்தக் கட்டடம் சிறப்பாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினார்.
அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற 17 ஆவது விதியில்,
“Untouchability” is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of “Untouchability” shall be an offence punishable in accordance with law’’ என்று இருப்பதை “Untouchability” என்கிற இடத்தில், Caste என்ற வார்த்தையைப் போடுங் கள்; ஒரே ஒரு சொல்லை மாற்றுங்கள் என்று சொன்னார்.
Caste is abolished என்று மாற்றுவதில் என்ன பிரச்சினை?
இப்பொழுதுகூட ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, ஜாதியால் உரிமை மறுக்கப்பட்டது - ஜாதி இன்னமும் இருக்கிறது - ஆகவே, அந்த அடிப்படையில் பள்ளத்தை நிரப்பவேண்டும் என்றால், மேட்டை அழிக்க வேண்டும்; அதிலேயிருந்துதான் மண்ணை போட்டு சமதளத்தை உருவாக்கவேண்டும் என்று கேட்கிறோம்.
ஜாதி இல்லை என்று சொல்லுங்கள்; நாங்கள் இட ஒதுக்கீட்டைக் கூட கைவிடத் தயாராக இருக்கிறோம்.
எனவே, Caste is abolished என்று மாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?
அங்கேதான் பிரச்சினையே இருக்கிறது - ஏனென்றால், அவர்கள் வெளியிலே அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாச மாக இருப்பதைப்போல காட்டிக் கொள்கிறவர்கள். உள்ளே அவர்களுக்கு மனுதர்ம சிந்தனை அவர்களுடைய இத யத்தில் இருக்கிறது.
உள்ளே அவர்களுடைய அஜெண்டா என்பது இருக்கிறதே, அது வருணாசிரம தர்ம அஜெண்டா. அதைப் பாதுகாப்பது எப்படி? என்பதிலேதான் அவர்களின் கவனம் அனைத்தும்.
அங்கே உள்ளே விவேகானந்தர் தெரிகிறார்; கோல் வால்கர் இருக்கிறார்; அங்கே வருணாசிரம தர்மம், சனாதன தர்மம் இருக்கிறது.
எனவேதான், ஜாதி ஒழிப்பு என்பதை அவ்வளவு சுலபமாக இவர்களுடைய காலத்தில் எதிர்பார்க்க முடியாது.
இன்னமும் சுடுகாட்டிலே பேதம் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
எனவே, தந்தை பெரியார் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தினார் என்பது ஒரு போராட்ட முறை. அந்தப் போராட்டத்தை செய்வதற்குமுன் நிபந்தனை வைத்தார்.
சட்டத்தை அதிகமாக மதிக்கின்ற தலைவர் தந்தை பெரியார்
அப்படி அந்தப் போராட்ட முறைக்குப் பதிலாக - அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் கேட்டதுபோன்று, அவருக்குப் பதில் சொல்லியிருக்கவேண்டும். அவருடைய நோக்கம் அரசமைப்புச் சட்ட தாளை எரிப்பதா? சட்டத்தை மறுப்பதா? சட்டத்தை அதிகமாக மதிக்கின்ற தலைவர் தந்தை பெரியார். மற்றவர்களும் மதிக்கவேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், சட்டத்தின் மூலம் மிரட்டியவுடன், ஓர் அறிக்கையை கொடுக்கிறார் ‘விடுதலை'யில்.
அது பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 6 இல் தெளிவாக அந்தத் தீர்மானம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கற்கோட்டையால் அமைந்த கொள்கைக் கோட்டை இந்த இயக்கம்
எப்படிப்பட்ட கற்கோட்டையால் அமைந்த கொள்கைக் கோட்டை இந்த இயக்கம். அந்த அடித்தளம் எப்படிப்பட்ட தியாகங்களால் கட்டப்பட்டு இருக்கிறது?
எத்தனை தோழர்களை நாம் இழந்திருக்கிறோம்; எத்தனை உயிர்களை நாம் பறிகொடுத்திருக்கிறோம்?
இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டுவிட்டு மட்டும் போகக் கூடாது நண்பர்களே - நாளைக்கு இதனை செய்வதற்கு நம்முடைய பங்களிப்பு என்ன? இளைஞர்களே, உங்களை நம்புகிறோம் - முதியவர்களே இனிமேல் உங்கள் காலம் என்ன இருக்கிறது? களத்திற்கு வாருங்கள்!
பெரியார் பேசிவிட்டுப் போனவர் அல்ல-
பெரியார் எழுதிவிட்டுப் போனவர் அல்ல -
சில பேர்மாதிரி பாடிவிட்டுப் போனவர் அல்ல -
பெரியார் களத்திலே நின்று போராடியவர் - இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு போராடியவர் அவர்.
அப்படிப்பட்ட தலைவர் அவர். வேறு யாராவது இருந் திருந்தால், இப்படி மிரட்டல் வந்தவுடன், அஞ்சியிருப் பார்கள்; வியாக்கியானம் சொல்லியிருப்பார்கள்; பின்வாங் குவார்கள். ஆனால், பெரியாரோ, இன்னும் கொஞ்சம் வேகமாக செயல்படுவார்.
தந்தை பெரியாரின் அறிக்கை
‘‘நான் மூன்று ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங் கிரஸ் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம்மீதும், கழகத் தின்மீதும், பிரயோகித்தாலும்கூட அவைகளுக்குப் பயப் பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவது இல்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே!
நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்கு பயந்துவிட வேண்டியதில்லை; பயந்துவிட மாட்டீர்கள்.
சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங் காதீர்கள்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்துக்குப் பெயர் கொடுங்கள்.’’
- ஈ.வெ.ரா.
(‘விடுதலை’ 11.11.1957)
ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயம்!
அந்த நிலையில்தான், இந்த வாய்ப்புகள் வந்திருக் கின்றன. ஆகவே, பெரியாருடைய ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே, அது மனிதநேயம்.
ஏன் மனித சமுதாயத்தில் பேதம் இருக்கவேண்டும்?
ஏன் ஒருவன் உயர்ந்த ஜாதி - இன்னொருவன் தாழ்ந்த ஜாதி?
இந்தக் கேள்விக்கு இதுவரை விடை கிடைத்திருக்கிறதா?
உங்களால் நியாயப்படுத்த முடியுமா?
அதனுடைய கட்டுமானம் குலைந்துவிட்டது - தகர்க்கக் கூடிய அளவிற்கு வந்தாகிவிட்டது.
அதனுடைய அடித்தளம் இருக்கிறதே, அது பிடிப்போடு இருக்கின்ற நேரத்தில், அதனைத் தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கவேண்டும்.
பெரியார் என்கின்ற புல்டோசர் அதனை சிறப்பாகச் செய்தது. நமக்கு அந்த ஆயுதத்தைப் பெரியார் கொடுத்தி ருக்கிறார், அதனை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உழைப்பவன் கீழ்ஜாதி - உழைக்காதவன் மேல்ஜாதியா?
இன்னமும் மயானத்திற்குப் போகின்ற பாதை களுக்காகப் போராட்டம்; மழைக்காலத்தில், வயல் வெளியில், வெள் ளத்தில், இறந்த என்னுடைய தோழனை, உழைப்பாளியாக இருக்கின்ற என்னு டைய தோழனை, உழைப்புத் தியாகிகள் அவர்கள் எல்லாம் - உழைப்புப் பங்காளிகள் - யார் இந்த நாட் டில் அதிகமாக உழைக்கிறார்களோ, அவன் மிகுந்த கீழ்ஜாதி.
யார் உழைக்காமல், சோம்பேறிப் பயல்களாக இருக் கிறார்களோ, அவர்கள் மிகுந்த உயர்ஜாதி.
சலுகைக்குரியவன், கல்விக்குரியவன், உத்தி யோகத்திற்கு உரியவன்.
இது என்ன கொடுமை?
இதற்கெல்லாம் அடித்தளம் வருணாசிரம தர்மம் அல்லவா! மனுதர்மம் அல்லவா! மனுதர்மத்திற்கு இன்னமும் நீரோட்டம் இருக்கலாமா?
மனிதநேய வளர்ப்பு- மனிதநேய காப்பு
எனவேதான், ஜாதி ஒழிப்பு என்பதற்கு மறுபக்கத்திலே, மனிதநேய வளர்ப்பு- மனிதநேய காப்பு என்று அதற்குப் பெயர்.
ஜாதி ஒழிப்பு என்பதற்கு சமத்துவத்திற்காகப் போராடு கின்ற ஒரு பெரிய நேர்மை என்று அதற்குப் பெயர்.
அந்த யுத்தக் களத்தில், பல்வேறு ஆயுதங்களை எடுத்து அந்தப் போராட்டக் களங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்து தூய்மைப்படுத்தி இருக்கிறார்.
அதைத்தான் மிகத் தெளிவாக, அம்பேத்கர் அவர்கள் மனதிலே கொண்டு, முன்பே சொன்னார்கள். மனம் புழுங்கியிருந்தார்கள்.
இதுபோன்ற ஒரு பெரிய வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைக்கவில்லை.
ஆகவேதான் அவர் சொன்னார், ‘அரசமைப்புச் சட்டத் தைக் கொளுத்துவதில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்’ என்று மனந்திறந்து சொல்லவேண்டிய அவசி யம் அவருக்கு என்ன வந்தது?
பழைய மனுதர்ம சட்டங்கள், இந்து லா என்று சொல் லக்கூடிய அந்த சட்டங்கள் இருப்பதின் காரணமாகத்தானே, இந்து கோட் பில் என்று அவர் சீர்திருத்தம் கொண்டு வந்தபொழுது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக சட்ட அமைச்சராக இருக்கின்ற அவருடைய சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து சனாதனம் கட்சி வேறுபாடின்றி, எதிர்த்தது. மனம் புழுங்கித்தானே, பதவி விலகினார்.
பெண்களுக்குச் சொத்துரிமை கூடாது என்பது எங்கிருந்து உருவாகிறது?
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
காஞ்சி சங்கரமடத்திலிருந்து உருவாகியது. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற தலைப்பில் அக்னிஹோத்திரம் தாத்தாச் சாரியார் எழுதியிருக்கின்ற புத்தகத்தில், ‘மகாபெரியவா' என்று அழைக்கப்படக்கூடிய சங்கராச்சாரியாருக்கும், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாருக்கும் ஏற்பட்ட உரையாடல் என்பதில் இருக்கிறது.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தால், பிறரோடு ஓடிப்போய்விடுவா? என்று சொன்னவர் யார்?
இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், சட்ட அமைச் சர் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த இந்து கோட் பில்லை தோல்வியுறச் செய்தார்கள். அந்நாள் குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வரை சென்றார்கள்.
இராஜேந்திர பிரசாத் நேரிடையாக பார்ப்பனர் இல்லை; ஆனால், பார்ப்பனரையொத்த மனப்பான்மை உள்ள உயர்ஜாதிக்காரர் - காயஸ்தா.
காசியில் 300 பார்ப்பனர்களின் காலை கழுவினார் என்பதுதான் அவருக்குள்ள மிகப்பெரிய சிறப்பு. அதை நாடாளுமன்றத்தில் பதிய வைத்தவர் சோசலிஸ்ட்டான ராஜ் நாராயணன் அவர்கள் - அவர் இந்திரா காந்தியை தேர்தலில் தோற்கடித்தவர்.
எனவே நண்பர்களே, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் - சில திருத்தங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அதுபோல, ஜாதி ஒழிப்பிற்காக, ஒரே ஒரு சொல்லைத் தானே திருத்தச் சொன்னார்.
“Untouchability” என்ற சொல் தனியே இருக்கிறதா? ஒருவன் தீண்டப்படக் கூடியவனா? தீண்டப்படக் கூடாத வனா? என்று வருணாசிரம தர்மப்படி, ஜாதியை அடிப் படையாக வைத்துத்தானே முடிவு செய்கிறீர்கள்.
எனவே, வேரை விட்டுவிட்டு, வெறும் கிளையை, இலையை தரிக்கவேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? இதைத்தான் பெரியார் கேட்டார்.
எனவேதான், அதற்குண்டான வழிமுறையையும் சொன்னார். மிக எளிமையான வழிமுறை அது.
எனவேதான், நமக்கு முன்னால் இருக்கக்கூடிய செய்தி என்னவென்றால், இளைஞர்களே, நாளைக்கும் அதை வலியுறுத்தி நாம் போராட்டம் நடத்தவேண்டும்.
தொடருவோம் இந்தப் பணியை -
நம்முடைய வாழ்நாள் - நம்முடைய பெயரர்கள் காலத் திலாவது ஜாதி ஒழிந்தாகவேண்டும். இது ஒரு நீண்ட போராட்டம்.
நம்முடைய பங்களிப்பை இன்னமும் செய்திருக்கிறோமா?
மனிதர்களுக்கு சமத்துவம் கொடுக்க ஆதிக்கவாதிகள் விரும்பமாட்டார்கள். ஆதிக்கவாதிகள் அதிகாரத்தை விடமாட்டார்கள். ஆனால், கொடுக்காமல் அவன் இருந் தாலும், கீழே இருப்பவன் விடமாட்டான் என்று சொல் வதைப்போல, மிக வேகமாகப் போராடித்தான் தீரவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே, நண்பர்களே!
இந்த நாள், அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்ற நாள் மட்டுமல்ல -
அவர்களுடைய தியாகத்தைப் போற்றுகின்ற நாள் மட்டுமல்ல -
அதேநேரத்தில், அவர்களுடைய ஒப்புவமையற்ற தியாகத்தைப் பாராட்டுகின்ற நேரத்தில், நினைவூட்டுகின்ற நேரத்தில், நாம் நம்முடைய பங்களிப்பை இன்னமும் செய்திருக்கிறோமா?
இன்னமும் பெரியாரை பேராயுதமாக - போராயுதமாக நிறுத்தி, நாம் இந்தப் பேதத்தை ஒழிக்கவேண்டாமா?
பேதமிலா பெருவாழ்வு - எல்லோருக்கும் கிட்டுவதற்காக நாம் சமத்துவத்தை நோக்கி நடைபோட வேண்டாமா?
ஜாதி ஒழிப்பு என்ற தலைப்பில் பாடப் புத்தகங்களாக வைக்கவேண்டும்!
எனவே நண்பர்களே, இந்த நாளில், இந்தக் கருத்தரங் கத்தில் நாம் வைக்கவேண்டிய கருத்து - குறைந்தபட்ச கோரிக்கை அரசுக்கு - இந்தச் செய்திகளை பாடப் புத்தகங்களாக - ஜாதி ஒழிப்பு என்ற தலைப்பில் அவை இருக்கவேண்டும்.
ஜாதி ஒழிப்பு சமூக வீரர்களை அங்கீகரிக்கவேண்டும். என்னுடைய தாத்தாவின் பங்களிப்பு இருக்கிறது - வெறும் பணத்திற்கோ, வாய்ப்புகளுக்கோ அல்ல. அதைக் கேட்கும் பொழுது, நம்முடைய உடம்பில் மயிர்க்கூச்செரிகிறது. அப்படிப்பட்ட ஒரு வரலாறு - அதை நேரிலே பார்க்கக்கூடிய அளவிற்கு. நம்முடைய தோழர்கள் சிறைச்சாலையில் வாடியதை யெல்லாம் அன்னை மணியம்மையார் அவர்களோடு சென்று பார்த்த நேரத்தில், அந்த நினைவுகள் எல்லாம் எனக்கு இப்பொழுது நிழலாடிக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த நாளில் அதை நினைவுகூர்வது மட்டும் போதாது நண்பர்களே - அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மட்டுமே நம்மை நிறைவடையச் செய்யாது.
நம்முடைய பங்களிப்பு என்ன?
குறைந்தபட்சம் சுடுகாட்டிற்காவது உத்திரவாதம் இருக்கவேண்டாமா?
இப்பொழுது நல்ல ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. நம்முடைய ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி ஜாதி ஒழிப்பில் நம்பிக்கை உள்ள ஆட்சி. திராவிட மாடல் - இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாடல்.
பொது சுடுகாடு உடனடியாக வேண்டும்
எனவேதான், பொது சுடுகாடு உடனடியாக வேண்டும். சுடுகாட்டிற்குப் போகும் பாதை தெளிவாக இருக்கவேண்டும். அங்கே யாராவது தடுத்தால், அவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.
ஜாதி அங்கு படமெடுத்தாடுகிறது. திரைப்படங்களிலே கூட படமெடுத்தாடக் கூடிய அளவிற்கு, படம் எடுப்ப வர்களையும் வைத்துக்கொண்டு, ஜாதி படமெடுத்தாடக் கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது.
எனவேதான், புரட்சிக்கவிஞர் அவர்கள்,
இருட்டறையில் உள்ளதடா உலகம் - ஜாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே
என்றார்.
எனவேதான், வெளிச்சம் ஆயிரம் வெளிச்சங்களாக இருக்கலாம்; ஆனால், ஜாதி இருக்கின்றவரையில், புரட்சிக் கவிஞர் கண்ணோட்டத்தில் இருட்டறைதான். எனவே, இருட்டறையில் இருந்து நாம் எப்பொழுது வெளியே வரப்போகிறோம்?
நம்முடைய பெரியார் சுடர் என்ற வெளிச்சத்தைக் கொண்டு வந்து, வெளிச்சத்தை உருவாக்குவோம்.
சமூகநீதியை நிலைநாட்டுவோம் - சமத்துவக் கொடியைப் பறக்கவிடுவோம்
ஒரு மெழுகுவத்தியைக் கொண்டு ஆயிரம் மெழுகுவத் திகளைக் கொளுத்துவோம். ஆயிரம் மெழுகுவத்திகள் மூலம் பத்தாயிரம் மெழுகுவத்திகளை, லட்சம் மெழுகு வத்திகளை கொளுத்துவோம்.
இருட்டை விரட்டுவோம் -
ஜாதியை அழிப்போம் - சமூகநீதியை நிலைநாட்டுவோம் - சமத்துவக் கொடியைப் பறக்கவிடுவோம்
சுயமரியாதை மனிதனுக்கு மூச்சுக்காற்று என்பதை நிலைநாட்டுவோம்! அதுவே, இந்நாளில் நமது சூளுரை.
வாழ்க பெரியார்!
வருக ஜாதியற்ற சமுதாயம்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment