தமிழ்நாட்டில் வென்றிருக்கிறோம்- தமிழ்நாட்டில் வென்றால் மட்டும் போதாது அனைத்திந்தியாவிலும் அந்த வரலாற்றை நாம் திருப்பிக் காட்டவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

தமிழ்நாட்டில் வென்றிருக்கிறோம்- தமிழ்நாட்டில் வென்றால் மட்டும் போதாது அனைத்திந்தியாவிலும் அந்த வரலாற்றை நாம் திருப்பிக் காட்டவேண்டும்!

 தோழர் தா.பாண்டியன் படத்திறப்பில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, டிச.28 மேடையில் படமாக இருக்கும் தோழர் தா.பாண்டியன் அவர்கள்,  இந்தக் களத்தை  நமக்கு அடை யாளம் காட்டியிருக்கிறார் - களத்தில் வென்றிருக்கிறார். அந்தக் களத்தில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் நாம் வென்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் வென்றால் மட்டும் போதாது - அனைத்திந்தியாவிலும் அந்த வரலாற்றை நாம் திருப்பிக் காட்டவேண்டும் என்று சொல்வதற்கு - அவருடைய படம் நமக்குப் பாடமாக இருக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு

நேற்று (27.12.2021) சென்னை பெரியார் திடலில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், பொதுவுடைமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், மறைந்த தோழர் தா.பாண்டியன் படத்தினைத் திறந்து வைத்தார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது நினைவேந்தல் உரை வருமாறு:

என்றென்றைக்கும்  நம் நெஞ்சங்களில் நிறைந்தவர் - இளைஞர்களுடைய உணர்வில் உறைந்தவர்

மிகுந்த வேதனையோடும், அதேநேரத்தில் நம்பிக்கை இழக்காமலும், நாளும் நம்முடைய லட்சியப் பயணம் தொடர்ந்து தொடரவேண்டும் என்பதற்கான ஓர் அற்புத மான நினைவேந்தலை நாம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடிய மறைந்தும் மறையாமல் என்றென்றைக்கும்  நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக, இளைஞர்களுடைய உணர்வில் உறைந்தவராக இருக்கக்கூடிய அருமைத் தோழர் - சிங்கம்போல் கர்ஜித்து, தங்கம்போல் வாழ்ந்து நம்முடைய அங்கமாக என்றைக்கும் திகழ்ந்து கொண் டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தோழர்  தா.பாண்டியன் அவர்களுடைய உருவப்படத் திறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய அருமைத் தோழர் சகோதரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் அவர்களே,

எவரையும் தாழ்த்தி எனக்குப் பழக்கமில்லை என்பதையே தன்னுடைய இலக்கணமாக...

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்து, அதுமட்டுமல்ல, தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், எவரையெல்லாம் பாராட்டவேண்டும் - யாரையெல்லாம் உயர்த்தவேண்டும் - எவரையும் தாழ்த்தி எனக்குப் பழக்கமில்லை என்பதையே தன்னுடைய இலக்கணமாக ஆக்கிக்கொண்டு, இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருக் கக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம்முடைய மாண்பமை மானமிகு முதலமைச்சர் அவர்களே,

முதுபெரும் பொதுவுடைமைத் தோழர், தேசிய உறுப்பினர், எளிமையின் சின்னம் அய்யா நல்லகண்ணு அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செய லாளர் அன்பிற்குரிய தோழர் சகோதரர் டி.ராஜா அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் உரையாற்றி அமர்ந்துள்ள நம்முடைய தோழர்கள் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செய லாளர் வைகோ அவர்களே,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.., அவர்களே,

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தோழர் சகோதரர் வேல்முருகன் எம்.எல்.., அவர்களே,

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் .எம்.சலீம் அவர்களே,

மேடையில் வீற்றிருக்கக்கூடிய, அமைதிப் புரட்சியாக அறநிலையப் பாதுகாப்புத் துறையில் செய்து கொண்டி ருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய அத் துணைக் கட்சித் தலைவர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு பெரியார் விருது!

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு, இதே மேடை யில், சில மாதங்களுக்கு முன்பு, பெரியார் விருது கொடுத்தோம்.

அவர் உடல்நலக் குறைவோடு இருக்கிறார் என்பது தெரியும், என்றாலும், எங்களுடைய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை அழைத்து நான் சொன்னேன்; அவரை எப்படியாவது அழைத்து வந்து - நாற்காலியில் அமர வைத்து தூக்கிக்கொண்டாவது வந்து, இந்த மேடையில் ‘‘பெரியார் விருது'' கொடுக்கவேண்டும் என்று!

ஏனென்றால், விருதுக்காக அல்ல - அவர் விருதைப் பற்றி கவலைப்படாதவர்; தெளிவானவர்.

பின் எதற்காக என்று சொன்னால், இந்த மேடையில் இருந்தால், மக்களை மீண்டும் அவர் பார்த்து, மீண்டும் பழைய வாழ்வியலுக்குத் திரும்பி வருவார்; மீண்டு வருவார் என்பதற்காகத்தான்.

கம்பீரமான கர்ஜனை உரை

அப்பொழுது அவர் அந்த விருதை வாங்கிக்கொண்டு, இங்கே தலைவர்கள், சகோதரர்கள் எல்லாம் சொன்னார்கள் அல்லவா - கடைசியில் எப்படி மதுரையில் முழங்கினார்கள் என்று. அதற்கு இணையாக இதே மேடையில், விருதை வாங்கிக்கொண்டு அவர் ஆற்றிய அவருடைய கம்பீரமான கர்ஜனை உரை அது இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அவர் உரையாற்றும்பொழுது, மிகப்பெரிய அளவில் தனி உற்சாகத்தைப் பெற்றார்.  அந்த உற்சாகம் தொடர்ந்து இருக்கும் என்று நினைத்தோம்; ஆனால், அவர் இன் றைக்குப் படமாகி விட்டார்; இன்றைக்கு அவருடைய படம் திறக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும், படமல்ல தோழர்களே, அவர் நமக்குப் பாடம் - பொதுவாழ்க்கையில் இருக்கிறவர்களுக்குப் பாடம் - அனைத்து இயக்கங்களில் இருப்பவர்களுக்குப் பாடம்.

ஏன், எதிரிகளுக்கும்கூட, கொள்கை எதிரிகளுக்கும்கூட எச்சரிக்கைப் பாடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தோழர் தா.பா. அவர்கள் ஒரு சிறந்த பாடம்.

தா.பா.வின் உள்ளத்திற்கு ஒருபோதும் தாழ்ப்பாளே கிடையாது

எல்லோரும் அவர் பெயரை சுருக்கி,  தா.பா., தா.பா. என்றே அழைப்பார்கள். ஆனால், அவர் உள்ளத்திற்கு ஒருபோதும் தாழ்ப்பாளே கிடையாது.

அவர் மனந்திறந்துதான் எதையும் சொல்வார்; எது அவருக்குச் சரியென்று படுகிறதோ, அதை மிகத் தெளிவாக சொல்வார்.

அவருடைய முழக்கங்கள்

நம்மை வழிநடத்தும்!

மிகப்பெரிய ஒரு  போர் வீரராக இருக்கக்கூடிய ஒரு தளபதியாக வந்து நின்றார்கள்.  இன்றைய காலகட்டத்தில்,  அவரை நாம் படமாகப் பார்க்கி றோமே, இன்னமும் உருவமாக வந்து அவர் கம்பீரமாக நிற்கவில்லை என்பது நமக்கு ஒரு குறைதான். இருந்தாலும், அவருடைய முழக்கங்கள் நம்மை வழிநடத்தும்; அவருடைய உறுதி, நம்மு டைய உறுதியை மேலும் வலுப்பெறச் செய்யும். அதற்குத்தான்  இந்தப் படம் - அதைப் பாடமாக நாம் பெறவேண்டும்.

எவ்வளவு பெரிய அற்புதமான ஒரு சிறப்பான செயலை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்லும்பொழுது, யாருக்காகவும் அவர் தன்னு டைய கருத்தை மாற்றிக் கொள்பவர் அல்ல.

 ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்’’

இங்கே நான் ஒரு புத்தகம் கொடுத்தேன், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.

தோழர் தா.பாண்டியன் அவர்களுடைய புத்தகத்தைப் பற்றி சகோதரர் வைகோ அவர்கள் இங்கே சொன்னார் அல்லவா - ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்’’ என்று! அய்யா அவர்களுடைய நூற்றாண்டு விழா ஈரோட்டில் நடைபெற்றபொழுது அவர் ஆற்றிய உரை - அந்த உரை பல லட்சக்கணக்கில் புத்தகமாகப் பரப்பப்பட்டு இருக்கிறது. 8 பதிப்புகளாக - நான் சொன்னேன், இன்னும் விரிவான கருத்துகளை அதில் சேர்த்துவிடுங்கள் என்று. உடல்நலக் குறைவாக இருந்தபொழுதும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் அதைத் திருத்தி, திருத்திய பதிப்பாகப் பெருக்கி அதைக் கொடுத்தார்கள்; அந்தப் புத்தகத்தைத்தான் நான் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குக் கொடுத்தேன்.

இளைஞர்களே, ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்’’ என் கிற அந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.

அதேபோல, 'நினைத்துப் பார்க்கிறேன்' என்று அவருடைய எண்ணங்களையெல்லாம் தொகுத்து சில கருத்துகளை எழுதியிருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.  தன்னுடைய மனதில் பட்ட ஒவ்வொரு தலை வர்களைப்பற்றியும்,  மற்ற நிகழ்வுகளைப்பற்றியெல்லாம் அதில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நல்ல பதிவு அது; நல்ல ஆவணம் அது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  உலக அளவில் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் அதில் இருக்கின்றன.

அதில் மிக முக்கியமான குறிப்பாக ஒரு செய்தி.

தா.பாண்டியனைப்பற்றி முத்தமிழறிஞர் கலைஞர்

கலைஞர் அவர்களுடைய இல்ல மணவிழா - அந்த நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும்பொழுது கலைஞர் பேசினார்.

இரண்டு வரியை அதிலே பயன்படுத்துகிறார்.

தோழர் தா.பாண்டியன் அவர்கள் பேசியதை, முத்தமிழ் அறிஞர் கலைஞர்  எடுத்துச் சொல்லும்பொழுது,

அவருக்கே உரிய நளினத்தோடு சொன்னார், தோழர் ‘‘தா.பாண்டியன் அவர்கள், என்னைத் தாக்கி எழுதியதையும் ரசித்திருக்கிறேன்; என்னைத் தாங்கி எழுதியதையும் நான் படித்திருக்கிறேன்'' என்று சொன்னார்.

அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று கலைஞர் சொன்னார். அந்த அளவிற்கு எல்லோருடைய உள்ளத் திலும் நிறைந்தவர் தோழர் தா.பா. அவர்கள்.

தவத்திரு அடிகளார் அவர்களைப் பொறுத்து, காவிக்கும், கருப்புக்கும், சிவப்புக்கும் இப்படி ஒரு கூட்டணி என்பது போன்று, நீலத்திலே கூட்டணி, கதரிலே கூட்டணி, சிவப்பிலே கூட்டணி என்று இங்கே நம்முடைய காங்கிரஸ்  கமிட்டித் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, திகழ்வதைப் பார்க்கின்றோம்.

எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல நண்பர்களே,

எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிக முக்கியம்

என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்தத் தத்துவத்தை அவர்கள் காட்டினார்கள். அதுதான் இன்றைய தேவை யும்கூட!

படமாகி விட்டார் என்று நாம் நினைக்கவேண்டியது இல்லை - பாடம் பெறவேண்டும்.

பாசிசப் பாம்பு படமெடுத்தாடுகிறது -

ஜனநாயகத்தைக் கொல்லவேண்டும் என்பதற்காக இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு நிலைமை வந்திருக் கிறது என்றால், அதற்கு விடை காணவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, இந்த மேடை அதற்கொரு அற்புதமான ஒரு விடையை - இந்தப் படத்திறப்பின்மூலமாக இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.

திராவிட பார்முலாவைப் பின்பற்றினால் முடியும்!

காரணம், முடியுமா? என்று நினைக்காதீர்கள் -  தமிழ்நாட்டிலே முடியும் என்று காட்டிய முதலமைச்சர் இங்கே இருக்கிறார். அந்த முதலமைச்சர் தமிழ் நாட்டிற்கு அல்ல - இந்தியாவிற்கே முதலமைச்சராக இருக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

முடியும்!

ஒரு சின்ன திராவிட பார்முலா -

அந்தப் பார்முலாவைப் பின்பற்றினால் முடியும்-

எப்படி முடியும்?

நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது - நம்முடைய எதிரியை முன்னிலையில் நிறுத்தி - யார் வரக்கூடாது என்று பார்க்கவேண்டும் என்கிற கருத்து இருக்குமேயானால், வெற்றியில் முடியும்!

அதைத்தான் பாண்டியன் பேசினார் -

நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு, அவர் பிறந்த பொழுது., குழந்தையாக இருக்கும்பொழுது  அய்யாத் துரையாக பெயர் வைக்க கலைஞர் நினைத்துக் கொண்டிருந்தார்.

அய்யாவின் பெயர் - தந்தை பெரியார் அவர்களுடைய பெயர் அய்யா.

அண்ணாதுரை - முடிகிறபொழுது துரை.

இரண்டையும் இணைத்து அய்யாத்துரை என்று வரக்கூடிய அளவிற்கு இருந்து,. பின்னால், ஜோசப் ஸ்டாலின் குறித்து அந்த நிகழ்வு வந்தவுடன், ஸ்டாலின் என அவருக்குப் பெயரிட்டார்.

எனவே, இந்த மேடையில், அய்யாத்துரையும் இருக்கிறார்; ஸ்டாலினும் இருக்கிறார். அத்தனைப் பேரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நல்ல தளபதியை நாம் பெற்றிருக்கிறோம். மேடையில் படமாக இருப்பவர்,  இந்தக் களத்தை  நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் - களத்தில் வென்றிருக்கிறார்.

தோழர் தா.பாண்டியனுடைய படம் நமக்குப் பாடமாக இருக்கவேண்டும்

அந்தக் களத்தில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் நாம் வென்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் வென்றால் மட்டும் போதாது - அனைத்திந்தியாவிலும் அந்த வரலாற்றை நாம் திருப்பிக் காட்டவேண்டும் என்று சொல்வதற்கு - அவ ருடைய படம் நமக்குப் பாடமாக இருக்கவேண்டும்.

ஏனென்றால், மதவாதப் பாம்பை - அதனுடைய நச்சுப் பல்லைப் பிடுங்கியாகவேண்டும் என்பதிலே அவர் இறுதிவரையில், தன்னுடைய உடல்நிலை தாழ்ந்த நிலையில் இருந்தபோதுகூட, பேச முடியாத நிலையில்கூட, அவர் மக்களைப் பார்த்து பேசினார்; முழங்கினார்! அந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது, நமக்கு நம்பிக்கை ஒளி வரவேண்டும்; அந்த நம்பிக்கைக்கு இந்த மேடை ஓர் எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு மாநிலத்திலும்

‘‘ஸ்டாலின்கள்'' வரவேண்டும்

தமிழ்நாட்டில் இருப்பதுபோன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படி முடியுமா? என்றுகேட்காதீர்கள்; முடித்தாகவேண்டும்;  முடியும். அதற்குரிய ஒரே காரணம், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டாலின்கள் வரவேண்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு திட்டமிடக்கூடியவர்கள், தலைமையிடத்தில் இருக்க வேண்டும்.

பாடத்தைப் பெறுவோம்களத்தை வெல்வோம்!

இந்த மேடையில் இருப்பதுபோன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்தவர்களாக, ஒரு வருக்கொருவர் விட்டுக் கொடுப்பவர்களாக, ஒருவருக் கொருவர் கட்டிப் பிடிப்பவர்களாக, ஒருவருக்கொருவர் தன்முனைப்பு இல்லாதவர்களாக அரசியலில் இருந்தால், - இந்தியாவிற்கு இந்த மேடை  - எதிர்காலத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக மாநில உரிமைகள் பெறக்கூடிய நிலைமை வரும். அந்தப் பாடத்தைக் கற்பித்தவர்தான் இப்பொழுது இங்கே படமாக இருக்கிறார்.

பாடத்தைப் பெறுவோம் - களத்தை வெல்வோம்  -

அதையே இன்றைக்கும் - நாளைக்கும் சொல்வோம்

வரலாற்றில் நிலைக்க வைப்போம்!

வாழ்க பாண்டியன்!

வளர்க அவர் கண்ட விழைவுகள்!

வெற்றி பெறுக!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment