வறுமையிலும் வழுவாமல் பெரியாரியலைக் கடைப்பிடித்த குடும்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

வறுமையிலும் வழுவாமல் பெரியாரியலைக் கடைப்பிடித்த குடும்பம்


குடந்தை .குருசாமி

தஞ்சை மண்டல செயலாளர்

திராவிடர் கழகம்.

தினமும் தச்சுக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி, தம்மையும் தமது குடும் பத்தையும் காத்ததோடு மட்டுமல்லாது, தான் சார்ந்த இயக்கத்தின் கொள்கைக ளையும் எள்முனை அளவு கூட வழுவாமல் கடைப்பிடித்த பெருமை உடையக் குடும் பம் கோயில் தேவராயன் பேட்டையைச் சேர்ந்த எங்கள் குடும்பம் . ஜாதி ஒழிப்புப் பேராட்டத்தை  நடத்தி சிறைச்சென்று  மறைந்த எங்கள் பெரியப்பா தேவராயன் பேட்டை மு.நடேசன், மு.கலியபெருமாள், மு.சங்கரலிங்கம், மு.பெரியசாமி ஆகி யோரை கொண்ட குடும்பம்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண் டிய போர்வை, தலையணை, குடை,  மிதி வண்டி, கைக்கடிகாரம் போன்ற எந்த அடிப் படை வசதிகளும் கிடையாது. மிகவும் அவசியமான மின்சாரமும் கிடையாது. இரவெல்லாம் முட்டை (சிம்னி)  விளக்கு தான். காலையில் செங்காமட்டை (செங்கல் உடைக்கப்பட்ட தூள்) பல்பொடி தான்.

தினமும் நடந்தே நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் பாபநாசம் மானமிகு தி. நாகராஜன் இல்லம் சென்று இரவில் எப்படியும் பெரியாரின் விடுதலை நாளிதழ் வாங்கிவந்து விடுவார்கள் என் அப்பா! நன்றாக நீலம் போட்டு  துவைத்த வெள்ளை வேட்டி சட்டை கட்டி , அதன்மேல் கருப்புத் துண்டை கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டு மாலையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை எங்கள் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களின் கிராமங்களுக்கு அய்யா இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் திட்டமிடல்படி பகுத் தறிவு பிரச்சாரத்திற்கு சென்றுவிடுவார்கள்.

பகலெல்லாம் பட்டினி என்றாலும் மாலையில் அந்தக் கருப்பின் கம்பீரம் அனைத்தையும் மறைத்து விடும். மழைக் காலங்களில் நெல் சாக்குகளைதான் தலை யில் போட்டுக்கொண்டு வெளியில் செல்ல வேண்டும். குடை கிடையாது. இரவில்   என்னுடைய அம்மாவின் புடவைதான் எனக்குப் போர்வை.  வீட்டில் மழைக்காலங் களில் கூரையிலிருந்து ஆங்காங்கே தாரை யாக விழும் மழை நீரை, சாப்பிடும் தட்டு களில் சேமித்து வீட்டின் வெளியில் சென்று உடனடியாக ஊற்ற வேண்டும்.(அதுவும் அப்போது ஒரு மகிழ்ச்சிதான்) ஒருவேளை மழைநீரை பிடிக்காவிட்டால் வீட்டினுள் மண்தரையில் மழைநீர் குழிபறித்து  குளமாகிவிடும்.  மழை பெய்தால் இரவில் உறக்கம் இல்லை. தவளை, பூச்சிகள், தண்ணீர் பாம்பு இவைகள் இலவசமாகவே வீட்டினுள் குடியேறும். பகலில் மழை பெய்தால் வருமானத்திற்குரிய வேலை கிடையாது. எனவே பசியோடு பல நாள் அரைகுறை உறக்கம். இந்த நிலையிலும் இயக்கப் பணியை தொய்வின்றி நடத் தினார்கள் எங்கள் குடும்பத்தினர்.

பெரியாரின் பஞ்சசீலம் என்னும் தலைப் பில், எஸ்.டி. விவேகி என்ற திராவிடர் கழகத்தின் அறிஞர், பாபநாசம் ஒன்றியம்- பண்டாரவாடை இரயில் நிலையம் அருகில் தொடர்ந்து அய்ந்து நாள் பேசுகிறார். அது இஸ்லாமியர் அதிகமாக வாழ்கின்ற பகுதி. பேச்சாளர் இஸ்லாமியர். அவர் பேசப் போகும் தலைப்பு கடவுள் மறுப்பு. ஆதலால் அந்தக் கூட்டத்திற்கும், பேச்சாளருக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பு.

பாதுகாப்பும் உணவும் ஏற்பாடு செய்வ தற்காக என் அப்பாவின் சகோதரர்கள் உள்பட கழக தோழர்கள் அனைவரும் அய்ந்துநாள் அவருடனேயே தங்கி விட்டார்கள். கிராமத்தில் இரவு தங்கி இருந் தால் மானமிகு விவேகி அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால், இரவு உறக்கம் எங்கள் ஊர் இந்து இடுகாட்டில் தான். பகலில் மானமிகு மகாலிங்கம் ( வெற்றிலைப்பெட்டி) இல்லத்தில் ஓய்வு. மாலை பொதுக்கூட்டம். எந்தவொரு கொடிய வறுமையும், எவருடைய தாக்க மும் திராவிடர் கழகத்  தோழர்களுடைய பெரியார் தத்துவப் பிரச்சாரத்தை முன் னெடுக்கும் பணியைத் தடுக்க முடிய வில்லை.

அப்பாவின் எட்டு முழ வேட்டியில் பாதியாக கிழித்து, எனக்கு சட்டையாகத் தைத்து விடுமுறையின் பின் பள்ளி திறக்கும் போது கொடுக்கப்படும். எனக்கு பகலில் அரசுப் பள்ளிக்கூடத்தின் மதிய உணவு- அரசாங்கத்தின் சாப்பாடு.

மஞ்சள் பையில் நான்கு காதில் ஒரு காது இருக்காது. மூன்று காதையும் முடிச்சுப் போட்டு அதுதான் புத்தகப்பை. சுமை தாங்க முடியாமல், அதைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு, காலில் செருப்பு இல்லாமல், அதைப்பற்றி கவலைப்படாமல், அரைக்கால் சட்டையோடு பள்ளிக்குச் சென்ற காலங்கள் இன்னும் கண் முன்னா லேயே நிற்கிறது. அரைக்கால் சட்டையும் ஆங்காங்கே சிறு கிழிசல்களுடன் தான் இருக்கும். அதுவே எனது பள்ளி சக மாணவர்கள்  என்னைக் கேலிச் செய்ய வாய்ப்பாக அமைந்தது.

எனது அம்மா செய்த சமையலில் எங்களுக்கெல்லாம் சாப்பாடு வழங்கிவிட்டு அவர்களுக்கு மீதமிருந்தால்தான் சாப்பாடு. இல்லையென்றால் மண்குடத்து தண்ணீர் தான் உணவு. நான் பிறந்ததற்குப் பின் இரண்டு முறை இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் தாங்கி ஈன்றெடுத்த என் அம்மா, தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் போதிய உணவு இல்லாமல் ரத்த சோகை ஏற்பட்டு மூன்று மாத இடைவெளியில் ஒவ்வொரு முறையும் இரண்டிரண்டு குழந்தைகளும் இறந்ததாக சொல்வார்கள்.

நான் பிறந்தது பாபநாசம் அரசு மருத்துவ மனையில்தான். (செப்டம்பர் 17- 1962) உலக பகுத்தறிவு மேதை தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று. எந்தத் தலைவரின் தத்து வத்தை ஏற்றுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தார்களோ அந்தத் தலைவரின் பிறந்தநாளிலேயே தனக்குக் குழந்தை பிறந்ததில் அப்பாவுக்கு ஈடில்லா மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியுடன் உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலையின் ஆசிரி யர் குத்தூசி குருசாமி அவர்களின் பகுத் தறிவு சிந்தனைகள் மீது கொண்ட ஆர் வத்தால் எனக்கு குருசாமி (17.09.1962) என பெயர் வைத்துவிட்டார்கள்.

வறுமை அளவுக்கு அதிகமாக வாட் டினாலும், குருதி உறவுகள் எல்லோரும் எங்களை விட்டு விலகினாலும், அதனால் பல இழப்பும் பலவீனமும் ஏற்பட்டாலும், என் அம்மாவும் அப்பாவும் பெரியார் கொள்கையில் பின்வாங்கியதே இல்லை.

எங்கள் ஊரில் கிழக்குப் பக்கம் வண்ணான் குளம் என்றும், மேற்கு பக்கம் பாப்பான்குளம் என்றும் இரண்டு குளங்கள் தனித்தனியாக இருந்தன. இதில் பார்ப்பான் குளத்தில் அந்த ஊரில் வசித்த ஒரே ஒரு பார்ப்பனக் குடும்பம் மட்டும் தான் குளிக்கும். ஆனால், வண்ணான் குளத்தில் இதர சமூகத்தைச் சார்ந்த அனைத்து மக்கள், மற்றும் ஆடு, மாடுகள் அனைவரும் குளிப்பது, குளிப்பாட்டுவது அங்கேதான்.

இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஊர் கணக்குப்பிள்ளை மற்றும் பஞ்சாயத்தை எதிர்த்து, என்னு டைய அப்பா, பெரியப்பா,  நமது கழகத்தின் தோழர்கள் ஆகியோரின் குடும்பங்கள் மற்றும் நமது பெரியாரிய உணர்வாளர்கள் பார்ப்பான் குளத்தை பயன்படுத்தத் துவங்கி, அது பெரும் போராட்டமாகி விட்டது.

பெரும்பாலும் பெரியாரிய உணர்வா ளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட தால் எதிர்ப்புப் பலகீனமாகி மீண்டும் சமா தானம் ஆனது. இதில் நமது தோழர்களை எதிர்த்துப் போராடியவர்கள் எல்லாம் நம் சற்சூத்திரர்கள் தான். அதிலிருந்து பார்ப்பான் குளம்- வண்ணான் குளம் என்று இல்லாமல் இரண்டும் ஒன்றாகி அனைத்து சமூக மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

பெரியார் வென்றார்.

எங்கள் வீட்டில் எந்த மத விழாக்களும் கொண்டாடுவது இல்லை. அறுவடை திருநாள் பொங்கல். திராவிடத் தேசிய தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள். இந்த இரண்டு நாள்களுக்காக நாங்கள் ஆண்டுதோறும் காத்திருப்போம்.

ஏனென்றால்,  அந்த நாளில்தான் நல்ல உடையும், மூன்று வேளை உணவும் கிடைக் கும். அதுமட்டுமல்ல! ( அது நான் பிறந்த நாளும் கூட) கருப்புச் சட்டை போட்டிருக் கும் அனைத்து தோழர்களும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக, பெரியார் புகழ்பாடி, கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜாதிகள் இவற்றை ஒழிப்பதற்காக, முழக்கமிட்டு ஊரெல்லாம் கடவுள் மறுப்பு கொடியான திராவிடர் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கும் மகிழ்ச்சியான நாளாகும். அவர் கள்தான் எங்கள் உறவினர்கள். பெரியார் கொள்கை உறவுகள் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அம்மா செய்து வைத்து இருக்கும் எளிய உணவை மகிழ்ச்சி யுடன் உண்பார்கள்.

இப்போது எனது காலத்தில் எங்கள் குடும்பத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - மானமிகு ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் இரண்டாம் நாளை சேர்த்து விட்டோம்.

திருவையாறு, அய்யம்பேட்டை, இராஜ கிரி, பாபநாசம், கவித்தலம், திருக்கருகாவூர், சாலியமங்கலம், சுந்தரப்பெருமாள் கோயில், சுவாமிமலை, கோவிந்தகுடி, வலங்கைமான், திருவலஞ்சுழி என சுற்றுப் பகுதியில் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் கூட்டம் நடக்கும்.

குத்தூசி குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரி, குடந்தை ஜோசப், கடலூர் வீரமணி (நமது ஆசிரியர் தமிழர் தலைவர்), திரு வாரூர் தங்கராசு, பட்டுக்கோட்டை இளவரி, பெங்களூர் விசாலாட்சி, அணைக்கரை டேப் தங்கராசு, கண்மணி தமிழரசன், மந் திரமா தந்திரமா கே.ஆர்.குமார், ஆகியோர் பேசும் போது

நடைப்பயணமாகவோ அல்லது சைக் கிளிலோ பயணம். ஒரு சைக்கிளில் மூன்று பேர், குறைந்தது மூன்று சைக்கிளில் கையில் திராவிடர் கழகத்தின் கொடியோடு சென்று வந்ததாக அப்பா அடிக்கடி சொல்வார்கள்.

சிறை நண்பர்கள்

என் அப்பா, தலைவர் தந்தை பெரியார் அறிவிக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு செல்வது என்பது தமது நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு மகிழ்ச் சியாக விருந்துக்குச் செல்வதற்கு சமம். அவர்களின்  (நான் அறிந்த வகையில்) நண்பர்களான கோவிந்தகுடி தில்லை சிகாமணி, சுந்தரப்பெருமாள்கோவில் டேப் சன்னாசி, கணபதி- குடந்தை அரு. ரெங்க நாதன், குடந்தை மாரிமுத்து, பழனி, சோழ புரம் கலியன், பாபநாசம் பைரன், அய்யம் பேட்டை கோவிந்தன், பட்டீஸ்வரம் அய்யாசாமி, சுவாமிமலை நமச்சிவாயம், தாராசுரம் ஜெயராமன், ஜி.என்.சாமி, போன்ற பலர் சிறையில் நெருங்கிப் பழகி விரிந்த உற்ற தோழர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப்போர்

1957ஆம் வருடம் நவம்பர் மாதம் 26 ம் நாள், தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்கள் ஜாதியை ஒழிக்க, இந்திய அரசியல் சட்டத்தை எரித்து, பல்லாயிரக்கணக்கா னோர் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை, பிள்ளைகுட்டிகளோடு நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சிறையில் அடைக்கப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்ற நாள்.

இந்த ஜாதி ஒழிப்பு போராட்டம் திராவிடர் கழகத்தின் வரலாற்றில் மிக மிக முக்கியமான செய்தியாகும். உலக வரலாற் றில் இப்படி ஒரு போராட்டம் நடந்ததே இல்லை.  இப்படிப்பட்ட போராட்டத்தில் கைதானவர்களில் பெரும் வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும், பெரும் நிலச் சுவான்தார்களும், 500 பேருக்கும் குறை யாமல் இருந்ததாக வரலாறு.

போர் வீரர்களின் ஈகம்

முதலாவது அவர்கள் யாரும் தங்களுக்கு சிறப்பு சலுகையோ, விசேஷ வகுப்போ வேண்டும் என்று கூறவில்லை. கைதான 4000 க்கு மேற்பட்டதோழர்கள்  எல்லோரும் மூன்றாம் வகுப்பு கடுந் தண் டனை கைதியாகவே சிறையில் அடைக் கப்பட்டனர்.

அதைவிட முக்கியமான செய்தி என்ன வென்றால், எந்த ஒரு தோழரும் தனது உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் கூட நீதிமன்றத்திலோ, அல்லது சிறைச்சாலை யிலோ மன்னிப்புக்கேட்டு தன்னை விடு தலை செய்யவேண்டும் என்று கூறியதே இல்லை. இந்த இரண்டும் உலக வரலாற்றில் நடந்த போராட்டங்களில் மிகப்பெரும் அருஞ்சாதனையான செய்திகளாகும்.

ஆனால்,  இந்த போராட்டத்தில் கலந்து சிறைப்பட்ட ஒருவர்கூட அரசியல் கைதி போல் நடத்தப்படவில்லை. கீழான சமூகக் குற்றங்களைச்  செய்த கைதிகளைப் போலவே அரைக்கால் சட்டை, அரைக்கை சட்டை,  சட்டை வில்லை என்ற முறையில் அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்.

சமூககுற்றம் செய்த மற்ற கைதிகளைப் போலவே தோழர்கள் தோட்ட வேலை, சமையலறையில்  சாமான் கழுவுதல், போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டனர். சிறையின் கீழ்த்தரமான உணவும், சிறைச் சாலையின் கடும்வெப்பமும், போதிய தண்ணீர் வசதி இல்லாமை யாலும், அலட் சியமான மருத்துவ கவனிப்பினாலும், பலர் நோய்வாய்ப்பட்டனர் என்று நடேசன் பெரியப்பா சொன்னதை என் அப்பா சொல்லி மிகவும் வருத்தப்படுவார்கள்.

சிற்றூரிலும் தந்தை பெரியாரின் கனல்

கோவில் தேவராயன் பேட்டை என்ற அந்த சிறிய கிராமத்தில் இருந்து வீ.மகா லிங்கம், சி.வீரைய்யன், .இராசாங்கம், .இராமச்சந்திரன், சு.உத்திராபதி, மு.நடேசன் - என்கிற 6  தோழர்கள் மட்டுமே சட்டத்தை கொளுத்தும்போது சிறைபிடிக் கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்க ளுக்கும் மேற்பட்டவர்கள் ஜாதியொழிப் பிற்கான சட்ட நகலை எரித்தும் பல தோழர்களை காவல்துறையினர்  கைது செய்யாமலிருக்க திட்டமிட்டு கடுமையாக தாக்கி,  போராட்டக்களத்திலிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

தண்டனை காலத்தில் நமது கழக தோழர்களில் பலர் காட்டிய மன உறுதியும், அஞ்சாமையும், தியாகமும், மகத்தானது என்பதை ஒவ்வொரு தோழரின் வரலாறும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

இன்னுயிர் ஈந்த வீரர்கள்

08.03.1958 இல் ஓய்வுபெற்ற ஆசிரியர் பட்டுக்கோட்டை இராமசாமி-

09.03.1958 இல் மணல்மேடு வெள்ளைச் சாமி-

30.07.1958 இல் லால்குடி நன்னி மங்கலம் கணேசன்-

07.09.1958 இல் திருச்சி சின்னச்சாமி-

22.12.1958 இல் வாளாடி பெரியசாமி

ஆகிய அய்ந்து தோழர்கள் தந்தை பெரியார் அவர்களின் போர்ப்படை வீரர் கள் சிறைக்கொட்டடியில் வீரமரணம் அடைந்தார்கள்.

உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலை யில், இடையாற்றுமங்கலம் நாகமுத்து - இடையாற்றுமங்கலம் தெய்வானை அம் மாள்- மாதிரிமங்கலம் ரத்தினம் -கோவில் தேவராயன் பேட்டை நடேசன் - திருவை யாறு மஜீத்- காரக்கோட்டை ராமையன் - புதுமணைக்குப்பம் கந்தசாமி - பொறை யாறு தங்கவேலு- மணல்மேடு அப்பாதுரை -  கண்டராதித்தம் சிங்காரவேலு -திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன் - தாராநல்லூர் மஜீத் கீழே வாளாடி பிச்சை ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட சில நாள்களில் வீரமரணத் தைத் தழுவினார்கள்.

1958இல் மறைந்த எங்களுடைய பெரியப்பா கோவில்தேவராயன் பேட்டை நடேசன் (வயது 24) என்ற அந்த மய்யப் புள்ளியில் துவங்கி தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை எங் கள் குடும்பத்தை சார்ந்த அனைவரும் 63 ஆண்டுகளாக மனமகிழ்வோடு தோளில் சுமந்து செல்கிறோம்.

தந்தை பெரியார், அன்னை மணியம் மையார்,  திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழியில் சிறிதும் பிறழாது எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆட்படாமல் ஜாதி, மதம், மூடநம்பிக்கையை ஒழிக்க, பெண் ணுரிமை, சமூகநீதியைக் காக்கப் பாடுபடுவோம்.

No comments:

Post a Comment