ஆசிரியர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களுடைய 89ஆவது பிறந்த நாளன்று அவருக்கு என் மரியாதை கலந்த வாழ்த்துக்களைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன். ஆசிரியருடைய பிறந்த நாளை ஒட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
திரு. வீரமணி அவர்கள் கூட்டங்களில் பேசுவதைப் பல முறை நான் கேட்டிருக்கிறேன். ஆசிரியர் என்ற அடைமொழிக்கேற்ப அவர் பேசுவார், பள்ளியில் பாடம் சொல்லும் சிறந்த ஆசிரியரைப் போல் நிறுத்தி, நிதானமாக, கேட்போர் தெளிவு பெறும் வகையில் எடுத்துக் கொண்ட பொருளை விளக்கிப் பேசுவார். அது அவசியம், காரணம் தந்தை பெரியார் சொல்லித் தந்த பாடங்களை இன்று பலர் மறந்துவிட்டார்களே! மறந்து விட்டவர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறைக்கும் அந்தப் பாடங்களை மீண்டும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தந்தை பெரியாரின் பாடங்கள்தாம் தமிழ்நாட்டை வாழவைக்கும் பாடங்கள். சுயமரியாதை, தமிழ்ப்பற்று, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் விடுதலை, ஜாதி மறுப்பு, கலப்புத் திருமணம் ஆகிய கொள்கைகளை நாள்தோறும் வலியுறுத்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள பணி - தம்முடைய எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக அவர் செய்யும் பணி -ஒரு மகத்தான பணி.
ஆசிரியரின் பணி தொடரவும், அவர் பூரண உடல் நலத்துடன் தமிழ்நாடு முழுவதும் வலம் வரவும், அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் வலிமை கூடவும் என்னுடைய அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- ப. சிதம்பரம்
No comments:
Post a Comment