போராளிக்குள் புதைந்திருக்கும் பண்பாளி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

போராளிக்குள் புதைந்திருக்கும் பண்பாளி!

பத்து திருக்குறள்  தெரிந்தவர்கள் உங்களில் உண்டா?  என்று ஆய்வுக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி கேட்ட மாத்திரத்தில் மடமடவென்று உரத்தக் குரலில் கூறிய அந்த தனித்தன்மையான மாணவர்.

1943 ஜூன் மாதம் இருபத்தி ஏழாம் தேதி கடலூர் பழையபட்டினத்தில் மேடைமீது மேசை போட்டு  ஏற்றிவிட அந்த  மாணவரின் ஆவேசப் பேச்சை அன்று தான் முதன்முதலில் அவனியோர் கண்டனர். "அந்த பத்து வயது பகுத்தறிவுச் சிறுவனை கூட்டத்திற்கு பேச அழைத்து வாருங்கள்!" என்று வழிச் செலவுக்கு அரை டிக்கெட் எடுத்து அனுப்பினர் பல்லூர் தோழர்களும்.

பள்ளி நாள்கள் அய்ந்திலும் படிப்பு போக மீதமுள்ள விடுமுறை நாள்கள் சனி, ஞாயிறு இரண்டிலும் ஊர் ஊராய் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்துக்கொண்டு தன்னொத்த பிள்ளைகள் கோலிக்குண்டு, சடுகுடு, கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுகளில்  களித்திருக்க அதே ஊர் அதே தெருவைச் சேர்ந்த தன் இளவயது நண்பர் (இலக்கியவாதி) ஜெயகாந்தனோடு மரத்தின் கிளையில் அமர்ந்து பல்வேறு செய்திகளை விவாதித்துக் கொண்டு பொதுவாழ்வில் கனியத் தொடங்கிவிட்டது அன்றைய நாளிலேயே அந்த அறிவுப்பிஞ்சு. பிரச்சாரம், ஊர்ப்பயணம், கொள்கைவிவாதங்கள் என்றே அடர்த்தியாக கடந்த காலங்களில் சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது எனக்கூட இளமைக்குரிய எந்த ஒன்றையும் அனுபவிக்க இயலாமல், பொழுது போகவில்லை என்பது போக, போக்குவதற்கு பொழுதே இல்லை என்று  நினைவுகூரும் அளவிற்கு வாழ்க்கை நகர்ந்தது.

அறியாப்பருவத்தில் அறிஞர் வாழ்வு

எத்தனையோ முதுபெரும் தலைவர்கள் களவீரர்கள் இருக்கையில் பெரியார் படத்தை திறந்து வைக்கிற பெரும் பொறுப்போ  பதினான்கில் என்று சிறுவயதிலேயே பெரிய மனிதராக பொறுப்பேற்றுக்கொண்ட அந்த மாணவர், கல்லூரிக் காலத்தில் 'முழக்கம்' 'புதுமை' என்ற கையெழுத்து ஏடுகளையும் நடத்தி பெருமை பெற்றது அத்துணை எளிதல்ல என்பதாலேயே அவர் நண்பர் ஜெயகாந்தன் சொல்கிறார், "சாரங்கபாணியைப்  போல் பேச முடியவில்லையே என நான் ஏக்கப்பட்டேன்" என்று. அதனால் தான் "பாடிக் கைவீசி பல பேருடன் உலவி வேடிக்கைப் பேசும் வாடிக்கை தன்னை அவன் பார் காண்கிலேன் அன்றும் இன்றும், தொண்டுள்ளம் அந்த தூயவனைக் கொண்டது குழந்தைப் பருவத்திலே" என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்  பாராட்டுப் பாடியதில் நமக்கு வியப்பு எழுவதற்கில்லை!

பயணப்பட்டதும் பயன்பட்டதும்

அத்தகைய   ஒருவர் தான், தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவு- தன்மானச் சுடரை அவருக்குப் பின்னால் அணையவிடாமல் ஏந்திக்கொண்டு அன்று தொடங்கி இன்றுவரை பல்லாயிரம் மேடைகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உலகளாவிய கருத்தரங்கங்கள், ஆயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள்(சிறைப்பட்ட இடத்திலும் கூட நடத்தியதுண்டு), மாநாடுகள் என்று உலகிலேயே அதிகம் பேசியவர், அதிகம் எழுதியவர், மாதம் சராசரியாக 5000-6000 கிமீ இரவு பகல் பாராமல் தன் பிரச்சார ஊர்தியிலேயே இன்னமும் சுற்றிச்சுழல்பவர், அய்ம்பத்து ஒன்பது ஆண்டுகளாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் ஆசிரியர், எழுபத்து ஒன்பது ஆண்டு கால அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் செம்மல் என்னும் பல்வேறு சாதனைகளை சுமந்து நிற்கும்   நம் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா  அவர்கள். அடைமொழியை அவர் விரும்புவாரில்லை எனினும்  திக்கற்றுப் போகாமல் நம் தமிழ்நிலத்தை அடைகாக்கும் திராவிடத்தின் திசைக்காட்டி எனும் உயர்தனித்தகுதியால் தமிழர் தலைவர் என்பதே பொருத்தமாகி நிற்கின்றது. கருப்பு உடையே எப்போதும்  அணிகிறீர்களே உங்களுக்கு அலுப்பு இல்லையா என்று கேட்டால் எப்போதும் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதால் அலுப்பு வருமா?அது ஜாதி ஒழிப்பு பெண்ணடிமை ஒழிப்பு என்ற இலட்சியத்திற்காக அணிவது எனச் சொல்லும் நம் தலைவர் 8 முதல் இன்று 88 முடிய அவர் எட்டித் தொட்ட வாழ்வில் விளைந்த பயன் என்னவென்று பகிர்தல் இந்நாளில் மிகவும் பொருத்தமாகும்.

 ஒருமுறை தவத்திரு குன்றக்குடி அடிக ளாரிடம்  பெரியார் சொன்னார், " "வீரமணி பிராமணர் ஆகிவிட்டார்" என்று. "என்ன அய்யா " என அவர் திடுக்கிட   "ஆமாம் அவர் தினமும் குளிக்கிறார்" என்று நகைச்சுவையோடு  சொல்லி சிரித்தார் பெரியார். அத்தகைய பழக்கமுள்ள ஒருவர்தான் 15 நாள்களுக்கும் மேலாக குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல் சரியான உணவு இல்லாமல் பலமான காயங்களோடு கண்ணில் காவலரின் கம்பு தாக்கப்பட்டதில் நரம்பு அறுந்து முறையான சிகிச்சை மறுக்கப்பட்டு ஓராண்டு காலம் மிசா கொடுமையை அனுபவித்தார்.இதோடு பல்வேறு போராட்டங்களில் கலந்துக்கொண்டு தன் வாழ்நாளில் 54 முறை  சிறை வாசம் செய்தவர் என்பதும்  அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்க தன்னை ஆளாக்கிக்கொண்டவர் ஆசிரியர் என்பதை கல்லின் மேல் எழுத்தாக்கி வைக்கும்!

மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல் நோயர்

 சமூகநீதிப் போராட்டப் பயணத்தில் அவர் சந்தித்த சவால்கள் பலப்பல. 1982-ஆம் ஆண்டு இராஜபாளையம் அருகில் மம்சாபுரத்தில் மருத்துவமனையை திறந்து வைக்கச் சென்ற அவரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த அவரே அந்த மருத்துவமனையின் முதல் நோயாளியாகிய  நிலையும் ஏற்பட்டதுண்டு. கண்ணாடிச் சிதறல்கள் அவர் மேல் பட்டுத் தெறித்து மூக்குப் பகுதியில் இரத்தம் கொட்டிய நிலையில் அவர் சிகிச்சை பெற்றதுண்டு.இப்படி பல்வேறு ஊர்களிலும் அவர் தாக்குதலுக்கு ஆட்பட்டதுண்டு எனினும் அவர் பயணம் தடைப்பட்டது என்றில்லை முன்பைவிட ஊக்கப்பட்டது எனலாம்.

முப்பத்துஒன்றை அய்ம்பதாக்கிய முயற்சியாளர்!

இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பாணையை கொண்டு வந்ததில் தோல்வியே காணாத எம்.ஜி.ஆர்., தேர்தலில் தோற்று பின் காரணம் அறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அங்கு "கொளுத்துங்கள் நகலை, கோட்டைக்கு அனுப்புங்கள்!' என்று சொன்ன ஆசிரியர் மட்டும் விளக்கம் அளித்தால் போதும் என்று சொன்ன வியப்பும் நடந்தது. 'Socially and Educationally' என்று தான் அரசியல் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது, அதாவது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்று. எக்கனாமிகலி(Economically)  என்ற வார்த்தையை போடவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முன்பே கூட விவாதித்த போது அது கூடாது என்று பண்டித நேரு அவர்கள் மறுத்துக் கூறி, அதற்குப் பிறகுதான் இப்படி  போடப்பட்டது. அதுமட்டுமல்ல வருமானம் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது, திட்டவட்டமான வருவாய் இல்லாதவர்களும் அதை மாற்றிச் சொல்ல முடியும். அதனால் தான் வருமான வரம்பு கூட அரசாங்கத்தால் ஆண்டுக்காண்டு மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது, தவிர ஒரு குடும்பத்துக்கு இந்த ஆண்டு ஒரு வருமானம் இருக்கலாம் அடுத்த ஆண்டு அது குறையலாம் எனவே அதை அடிப்படையாக வைக்கக்கூடாது என்றெல்லாம் நம் தலைவர் அன்று தெளிவாக விளக்கியதும் அந்த ஆணையால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்து பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டை முப்பத்து ஒன்றிலிருந்து அய்ம்பதாக உயர்த்தினார் அந்நாளைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர்.,  என்றால் நம் தலைவரின் முயற்சி சமூகநீதி வரலாற்றில் சிறந்த மைல்கல் ஆகும்.

படிக்க வைத்த படிப்பு

ஒட்டுமொத்த ஒதுக்கீடு 50%  மேல் இருக்கக்கூடாது என்று ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் 69%   பாதுகாக்கும் கடப்பாடு ஏற்பட்டது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 31 சி பிரிவின் படி தனிச்சட்டம் நிறைவேற்றி 9ஆவது அட்டவணை பாதுகாப்போடு சட்டத்திருத்தத்தை செய்வதின் மூலம் பாதுகாக்கலாம் என்ற வழிமுறைகளை எடுத்துச்சொல்லி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை பின்னிருந்து இயக்கி இட ஒதுக்கீட்டிற்கு வந்த பேராபத்தை தடுத்து, இன்று தமிழ்நாட்டில் வட இந்திய மாநிலங்களை விட மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட காரணமாகி மூலைமுடுக்கெல்லாம் நம் மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியதும் வாழும் நாளில் நம் தலைவர் செய்த தலையாயப் பணி எனலாம். கல்லூரி காலத்தில் எல்லோரும் அறிவியல்  வகுப்பு எடுக்கவே விரும்புவார்கள் எனினும் தனக்கு உலகவரலாறு, அரசியல், பொருளாதாரம் இணைந்த குருப் சி தான் விருப்பம் என்று இவர் எடுத்ததும்( பின்னர் பொருளாதார ஹானர்ஸ் படிப்பிலும் பரிசு பெறும் அளவிற்கு முதலிடம்)  சட்டம் படித்து வழக்குரைஞர் ஆனதும் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி கொடுக்க வைத்து பல பேரை படிக்க வைத்த பெரும் நன்மை செய்து விட்டது. ஆனால் நான் செய்தேன் என்று சொல் லாமல் கழகம் செய்தது என்றே எப்போதும் கூறுவார்.

எனவேதான் இட ஒதுக்கீட்டில் ஏதாவது அய்யம் என்றால் பெரியார் திடலுக்கு சென்று ஆசிரியரைக் கேளுங்கள் என்று  மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரும் சொன்னார் முன்பு.

பெரியாரின் இறுதிக்குரல்

பெரியாரின் சொத்துகளை அடையத்தான் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஆம் பெரியாரின் சொத்துகளான பகுத்தறிவு, தன்மானம், இனமானம் ஆகியவற்றை அடையவே நான் இங்கு இருக்கிறேன் என்று பதில் சொல்கிற ஆசிரியர், ஒருமுறைகூட தந்தை பெரியார் தன்னை கடிந்து கொள்ளும்படியான நிலை தனக்கு ஏற்படாதது தான் அவரிடம் பெற்ற சிறப்பு ஊதியம் என்கிறார். பெரியார் எந்த அளவிற்கு இவரின் மீது நம்பிக்கை வைத்தார் என்பதற்கு வேலூர் CMC மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் திடீரென "வீரமணி" என்று பலமாக அழைத்ததே  அவர் இறுதிக் குரலாக இருந்தது என்றால் இப்படி ஒரு தலைவர்- தொண்டர் உறவு உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. 

படிப்பாளி- படைப்பாளி

தனிவாழ்வே அறிந்திராத வாழ்நாள் போராளியாளியாகிய நம் தலைவர் வாழ்வை பிரித்துப் பார்த்தால் ஒரு பக்கம் மிகப்பெரிய படிப்பாளியாக இருக்கிறார், உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்களின் கருத்துகளை படித்து நமக்கு எடுத்துச் சொல்கிறார். மிகச் சிறந்த படைப்பாளியாகி எண்ணற்ற பகுத்தறிவு, வரலாற்று சமூக நீதி நூல்கள் படைத்துள்ளார்.

உண்ணும் உணவிலிருந்து எண்ணும் எண்ணங்கள் வரை, சிரிப்பில் இருந்து சீர்மிகு பண்புகள் வரை, உடற்பயிற்சியும் உடல் நலனும் தொடங்கி உடற்கொடைவரை, மன அழுத்தம் தொடங்கி மணவாழ்வு வரை இன்னும் இன்னும்...

பல்வேறு வாழ்வியல் தத்துவங்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஆக்கி 16 தொகுதிகளாக வாழ்வியல் சிந்தனைகள் எனும் நூலை தொகுத்துள்ளதில் ஒரு போராளிக்குள் இத்தனை அழகிய படைப்பாளியா என்றே விழிகள் விரிகின்றது.

இன்னூல் நோபல் பரிசுக்குரியது என்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட வேண்டியது என்றும் மாற்றுக்கருத்து உள்ளோர் உட்பட ஏனையோரும் பாராட்டினாலும் தன் அறியாமையைப் போக்க தான் தேடிய புகலிடம் என்று தன்னடக்கத்தோடு தலைவர் கூறுகின்றார்.

கொள்ளளவில் கூடிய பண்புகளின் பட்டியல்

அமெரிக்க மனிதநேய மய்யத்தால் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்ட  நம் தலைவரின் மறுபக்கம் மாற்றாரும் விரும்பிப் போற்றும், மற்றையோர் எவரும் கண்டெடுத்து பின்பற்றும் உயரிய பண்பு என்றும் திறந்த புத்தகம் என்றும் உடனிருந்து பார்க்கும் எவராலும் உடனே அறியக்கூடியது.

குழந்தைகளைக் கொண்டாடுங்கள், குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்பவர், சிறு குழந்தைகளைக் கூட வாங்க, போங்க என்று மரியாதையோடு விளிப்பார்.

நன்றி என்று சொல்ல நம் பிள்ளைகளை பயிற்றுவியுங்கள் என்றும் சொல்பவர் தன் பொது வாழ்விற்காக  குடும்பப் பொறுப்பை முழுவதும் தலையில்  போட்டுக்கொண்ட தம் வாழ்விணையர் மோகனா அம்மையார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் மறந்திடார்.

கடிகாரம் ஓடும் முன் ஓட நம் பிள்ளைகளை தயார்படுத்துங்கள் என்று சொல்லுகின்றவர், நொடி நொடியும் நாட்டு நடப்புகளில் நல்லது எது கெட்டது எது என்று பிட்டு பிட்டு அறிக்கைகளில் அலசி சுட்டிக் காட்டுவார் சுடச்சுட. மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் இளமைத் துடிப்போடு ஓய்வு என்பதே இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார். கரோனா காலங்களிலும் பரப்புரையை காணொலிகளாக்கி களம் கண்டவர், தனக்கு கரோனா பாதிக்காத போதும் மருத்துவர்கள் சொன்ன அறிவுரையின் பேரில் ஒரு வாரம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சரியாக பத்தாவது நாள் பெரியார் திடலுக்குள் தடம் பதித்து விட்டார். வேகம் அவர் நடையில் மட்டுமல்ல அவர் செயல்பாடுகளிலும் அவர்தம் உள்ள ஊக்கத்திலும் உண்டு என்பதையே இவை காட்டுகின்றன.

முதுமை வேறு முதிர்ச்சி வேறு என்பவர், வயது என்பது காலக்கணக்கீடு தானென்று ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க தயங்கிடார்.

அந்த ஓட்டத்தின் ஒவ்வொரு மணித்துளிகளுக்கும் வரலாற்றுப் பதிவுகள் இருக்கும்.

பெண்கள் எங்கும் எதிலும் தலை குனிய கூடாது சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பவர், தான் நடத்தும் ஒவ்வொரு மணவிழாவின் இறுதியிலும் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள் என்றும் அதே நேரத்தில் தேர்விலும் தேர்தலிலும் முதலில் வருபவர்களுக்கு வெற்றி ஆனால் வாழ்க்கை என்பது அப்படி அல்ல அங்கு யார் விட்டுக்கொடுத்து தோற்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று அறிவுரை அல்ல அறவுரை பகல்வார். இணையர் என்ற இணையற்ற சொல்லை ஈந்த தலைவரும் அவரே!

நட்பு பாராட்டுவதில் எதிர்ப்பு என்பதில்லை

கொள்கையில் மாற்றம் கொண்டோரும் நலம் பெற்று வர தன்விழைவை தெரிவிப்பதும் அத்தகையோர் மறைவில் உடன் வருத்தம் தெரிவிப்பதுமான பண்புடையர் தாமென்றே மெய்ப்பிப்பார்.

தத்துவங்களுக்குத்தான் எதிர்ப்பே தவிர நட்புக்கு எப்போதும் இல்லை என்பவர் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டும் போது தான் நம் எதிர்ப்பிற்கும் மரியாதை உண்டு என்று சொல்வார்.

"நானே எனக்குத் துணை என்று எண்ணிப்பாருங்கள் பிறகு தன்னம்பிக்கை கூடும்" என்று அவர் சொன்னது மிகச் சரியான ஒன்று என்பதை நான் உணர்ந்தேன் என்று வைதீகக் குடும்பத்தில் பிறந்த எழுத்தாளர் சிவசங்கரி குமுதம் பேட்டியில் இவரைப் பற்றி குறிப்பிடும்படி தன் பேச்சு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று நினைப்பவர். அவையறிந்து  சுவையறிந்து பேசும் பேச்சாளர்,

மற்றவர்களை புண்படுத்த அல்ல பண்படுத்தும் படியான பயன்மிகு சொற்களையே பயன்படுத்துவார்,

தனி மனித தாக்குதல் என்பது எந்த இடத்திலும் இல்லை எனும் அளவிற்கு.

ஆக ஒரு  வாழ்நாள் சமத்துவப் போராளியான நம் ஆசிரியர் வாழ்வை பிரித்துப் பார்க்கும்போது அதற்குள் புதைந்திருந்து வெளிப்படும் பண்பாளியைக் காண்கையில்

அவரால் பெற்ற பலன்களுக்கு இந்த தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் நன்றி கூறவே முந்துறும் என பெருமையே பெறுகிறோம்.

சமூக நீதி நாள்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக்கி தமிழர் தலைவரின் எண்பது ஆண்டு கால உழைப்பிற்கு வெற்றிக்காணிக்கை ஆக்கியுள்ளார் நம் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்பதோடு பெரியார் உலகப் பணிகளும் தொடங்கி நடந்தேறும்  பெரு மகிழ்ச்சி காலங்களில் 89 இல் அடியெடுத்து வைக்கும் தலைவரை வாழ்த்தி போற்றி வழி தொடர விழைவோம்! .நாடு வாழ நம் தமிழர் தலைவர் ஆசிரியர் நீடு வாழ்க!

-.கவிதா,  திருப்பத்தூர்.

பகுத்தறிவு

எழுத்தாளர் மன்ற

மாநில துணைத்தலைவர்.

No comments:

Post a Comment