காணொலி மூலம் அதிக வழக்குகளை முடித்ததில் 2ஆவது இடத்தில் சென்னை உயர்நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

காணொலி மூலம் அதிக வழக்குகளை முடித்ததில் 2ஆவது இடத்தில் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஜன.31 கரோனா ஊரடங்கு காலத்தில் காணொலி மூலம் அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர்நீதிமன்றம் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வழக்குரைஞர்களுக்கான 84 அறைகள், நீதிபதி குடியிருப்புகள் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் காணொலி காட்சி மூலம் 2.8 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் அதிக வழக்குகளை முடித்ததில் அலகாபாத் நீதிமன்றம் முதல் இடத்தில் உள்ளதாகவும், 60 நீதிபதிகளுடன் அதிக அளவில் வழக்குகளை முடித்து சென்னை உயர்நீதிமன்றம் 2ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் முதல் இடத்திற்கு வரக்கூடும் என்று தெரிவித்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் கீழ் 40 சதவீத வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, புகழேந்தி, சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

80 வகையான 10 லட்சம் பறவைகள் கணக்கெடுப்பு

சென்னை, ஜன.31 தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80 வகையான 10 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்து உள்ளது என்று தமிழ்நாடு வனத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் முதன் முதலில் நடப்பாண்டுக்கான ஒத்திசைக்கப்பட்ட அனைத்து பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 28 மற்றும் 29 தேதிகளில் நடந்தது. குறிப்பாக சென்னை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வனத்துறையுடன், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (பி.என்.எச்.எஸ்.), இந்திய வனவிலங்கு நிறுவனம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையம், சுமார் 45 சமூக குழுக்கள், தனியார் அமைப்புகள், சுமார் 10 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் இணைந்து பறவைகளை கணக்கெடுத்தனர்.

தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளர் டாக்டர் சேகர்குமார் நிராஜ் தலைமையில் திருச்சி தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், துணை இயக்குநர் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன், மாவட்ட வன அலுவலர்கள் உள்ளிட்ட 500 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

உணவுப் பங்கீட்டுக் கடைகளில்கியுஆர் ஸ்கேன்செய்து பொருட்கள் வழங்க உத்தரவு!

சென்னை, ஜன.31 உணவு பங்கீட்டுக் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால்கியுஆர்ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் உணவு பங்கீட்டுக் கடைகளில் திறன் அட்டைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவியில் ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த கைரேகை பதிவு செயும்போது சில நேரங்களில் பதிவு இயந்திரத்தில் கோளாறு  ஏற்படுகிறது .இதனால் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் உணவுப் பங்கீட்டுக் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால்கியுஆர்ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .மேலும் குடும்ப அட்டை எண்ணை  விற்பனை முனையத்தில் பதிவு செய்து பொருட்களை வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

 

No comments:

Post a Comment