சென்னை, ஜன.5 தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட, படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் வரை மீன்வர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட, படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மீன்வர்களுக்கு மானியமாக வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். சென்னை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்திலும் நேரில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அடுத்த மாதம் (பிப்ரவரி) 14ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசல் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 2,731 - பேருக்கு கரோனா
சென்னை, ஜன.5 தமிழ்நாட்டில் மேலும் 2,731 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்றைய (4.1.2022) பாதிப்பு 2,700- அய் தாண்டி அதிரவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் மேலும் 2,731 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,489- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,805- ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,412- ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 674- பேர் குணம் அடைந்துள்ளனர்.
இணையதள வசதியின்றி மின்னணு
பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி வெளியீடு
புதுடில்லி, ஜன.5 இணையதள வசதியின்றி மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லாமல் நேரில் சிறிய தொகையை மின்னணு பண பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏ.டி.எம். அட்டை, கடன் அட்டை, வாலட், மொபைல் போன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த பரிமாற்றத்தில் ஈடுபடலாம். ஒருமுறை பரிமாற்றம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ.200 ஆகும்.
வாடிக்கையாளரின் வெளிப்படையான சம்மதத்துடன் இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், இணையதள வசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்றும்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment