சென்னை, ஜன.5 தலைமைச் செயலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது சாலைகள், பேருந்து நிறுத்தங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் அதனை அணியச்சொல்லி வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது முகக்கவசம் இல்லாதவர்களுக்கு, தன்னுடைய வாகனத்தில் இருந்து அதனை எடுத்து கொடுத்தார்.
கரோனா தொற்றின் தாக்கம் எப்போது குறையும்? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நேரத்தில், தற்போது மீண்டும் அது உருமாறி உலகையே நடுநடுங்க வைத்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தடுப்பூசி செலுத்துவது, முககவசம் அணிவதை வலியுறுத்திதான் பேசி வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசும்போது கூட, 'நோயின் தாக்கத்தைத் தடுக்க நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேடயம், முகக்கவசம் தான்’ என்று பேசினார். இப்படியாக முகக்கவசம் அணிவது பற்றி தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று (4.1.2022) காலை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அண்ணா சாலை வழியாக செல்லும் போது, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், ரிச்சி தெரு அருகில், காஸ்மாபாலிடென் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்கு பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோவில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.அய்.இ.டி. கல்லூரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சாலை பெரியார் சிலை அருகில் உள்ள பகுதிகள், தலைமை தபால் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்த பொது மக்களிடம் முகக்கவசம் அணியச் சொன்னார்.
சில இடங்களில் அவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருந்தவர்களைப் பார்த்து முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகக்கவசம் இல்லாதவர்களுக்கு தன்னுடைய வாகனத்தில் இருந்த முகக்கவசத்தை எடுத்தும் கொடுத்தார்.
சிலருக்கு அவரே முகத்தில் மாட்டியும் விட்டார். அவ்வாறு மக்களை சந்தித்தபோது அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment