ஒற்றுமைக்கான எதிர்க்கட்சிகளின் செயல் திட்டத்தின் உண்மை நிலை பற்றிய சோதனைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

ஒற்றுமைக்கான எதிர்க்கட்சிகளின் செயல் திட்டத்தின் உண்மை நிலை பற்றிய சோதனைகள்

எம்.கே.நாராயணன் 

இரண்டாவது முறையாக ஒன்றிய அரசின் ஆட்சியைக் கைப்பற்றிய பா... 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய  வெற்றி பெற்றது முதல் இந்திய அரசியலில் மிகப் பெரியதொரு  மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. இந்திய அரசியலின் பல அம்சங்களும் மாபெரும் மாற்றங்களை சந்தித்துள்ளன.    இனியும் பயனற்ற   தங் களது கடந்த கால கோட்பாடுகள் நம்பிக்கைகள் பல வற்றையும் எதிர்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் எளிதில் உதறித் தள்ள இயலாதவர்களாக உள்ளனர்.  இப்படி கூறுவதால், அரசியலின் தன்மையே மாறி விட்டது என்ற பொருள் கொள்ளக் கூடாது. என்றாலும், தேசிய நீரோட்டத்தில் உள்ள கட்சிகள், குறிப்பாக எதிர்கட்சிகள் அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர்.

உண்மையான அரசியல் கள நிலை

எந்த ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணியையும் வழி நடத்திச் செல்வதற்கான ஆற்றல் படைத்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்ற தங்களது நம்பிக்கை ஒன்றை உதறித் தள்ளுவதற்கு காங்கிரஸ் கட்சியால்  இயலாமல் இருப்பதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சி களின் கூட்டணியை பல கட்சிகள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அவ்வாறு எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மீண்டும் வழி நடத்திச் செல்வதற்கான தகுதியை காங்கிரஸ் கட்சி இப்போதும் பெற்றிருக்கவில்லை என்பதை ஒரு சில கட்சிகள் தெளிவாகக் கூறியுள்ளனர். அதனால், அழிவின் விளிம்பில் நிற்கும் காங்கிரஸ் கட்சி அந்த உண்மையைக் காணத் தவறிவிட்டது என்று கூறலாம். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தமாக 20 சதவிகிதத்திற்கும் சற்று மேலான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் ஒரே எதிர்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. என்றாலும், காங்கிரஸ் கட்சி தனது எதிர்கால தேர்தல் உத்திகள் பற்றி மிகைப்பட்ட மதிப்பீட்டை செய்வது, கட்சியின் மிகமிக முக்கியமான  அமைப்புகளை பலவீனப்படுத்தக் கூடியவையாகும். தற்போதுள்ள அரசியல் போக்கை மாற்றியமைப்ப தற்கான ஒரு மாற்று மாதிரியை காங்கிரஸ் கட்சி இனி மேல்தான் உருவாக்க வேண்டும்.

பா... ஆட்சி அதிகாரத்துக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல்  பிளவுபட்டு, பலவீனப்பட்டு, பா.. கட்சிக்கு  பலமமான எதிர்ப்பை அளிப்பதற்கு இயலாத வையாக எதிர்க்கட்சிகள் எல்லாம் இருக்கின்றன என்பது தான் விரும்பத்தகாத உண்மையாகும். முறையான உத்திகள் இன்றி, தங்களது உண்மையான பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய ஒரு உண்மையான சுய மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு விருப்பமற்றவையாக ஒவ்வொரு தனிப்பட்ட எதிர் கட்சியும் உள்ளன. தங்களை விட  அதிக அளவில் மக்கள் ஏற்றுக் கொள்ள இயன்ற இதர எதிர்கட்சிகளை ஆதரிக்கும்  ஒரு விருப்பத்தை ஒவ்வொரு எதிர்க் கட்சியும் வெளிக்காட்டாமல் இருப்பதுதான், இன்று எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை எதிர்க்கும் பல மற்ற வையாக இருப்பதற்கான முக்கியமான காரணமாகும்.

இந்த நிலை பற்றி ஓரளவுக்கான உண்மை நிலை நாடு தழுவிய இந்த விவாதத்தில் இப்போது உணரப் பட்டிருந்தாலும், எதிர்க்கட்சிகளிடையே தீவிரமாக உணரப்படவில்லை. தங்களது பலம், பலவீனம் பற்றிய உண்மையானதொரு மதிப்பீட்டை தனிப்பட்ட கட்சிகள் இன்னமும் செய்யவில்லை. அது மட்டுமன்றி, பல கட்சிகள் அவர்களது மாநிலங்களுக்கு வெளியே அதிக அளவில் மக்களால் அறியப்படவில்லை என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அதன் விளைவாக, எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு அளிப்பதைப் பற்றிய தற்போது மேற் கொள்ளப்பட்டிருக்கும் பேச்சுகளுக்குப் பிறகும், ஒன்றிய அரசின் ஆளுங் கட்சியான பா..கட்சியின் கொள்கைகள் மற்றும் போக்கு பற்றியதொரு பலமான வெறுப்பைத் தவிர, இந்த எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்துக் கட்ட இயன்ற ஒரு பொதுவான கயிறு அவர்களிடத்தில் இல்லை.

அனைத்து எதிர்க் கட்சிகளிடையேயும் தேசம் முழுவதிலும் ஓரளவுக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் எதிர்க்கட்சியாக விளங்குவது காங்கிரஸ் கட்சி தான். சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகள், மாநிலங்களில் இன்று ஓரளவுக்கேனும் செல்வாக்கு பெற்று விளங் குவதும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க இயன்ற ஆற்றல் கொண்டதுமான  கட்சி  தங்கள் கட்சிதான்  என்பதை எடுத்துக் கூறி எதிர்க் கட்சிகளை ஒப்புக் கொள்ளச் செய்ய காங்கிரஸ் கட்சியினால் இயலவில்லை. சிறுசிறு எதிர்க்கட்சிகள் எல்லாம் இதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நிலையில்,  பெரிய கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விஷயத்தில் ஒரு தலைமை இடத்தை அளிப்பதற்கு விருப்ப மற்றவைகளாக உள்ளன.

திரிணாமூல் காங்கிரசின் நிலை பற்றிய கூடுதல் செய்திகள்

இந்த நிலை சிறிது காலமாக நிலவி வந்துள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி இன்னமும் ஒரு நீண்ட காலத்துக்கு பயனுள்ள கட்சியாக செயல்பட இயலாமல் அழிந்து போகும் நிலையில் இருக்கிறது என்று  திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா  வெளிப்படை யாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்தேறிய மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தலைவி பா..கட்சியை எதிர்க்கும் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியை தனக்குத் தானே அளித்துக் கொண்டிருந்த போதிலும், எதிர்கட்சிக் கூட்ட ணியின் தலைவி என்று தன்னை அவர் முறையாக அறிவித்துக் கொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பா..கட்சியை தோற்கடித்த முறைக்காக மம்தா  பெரும் அளவில்  பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரது தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு விரும்புகின்றன என்ப தற்கு சிறிதளவு சான்றே உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற் றுமையை வலியுறுத்துவதைவிட, காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டுவதாகவே மம்தாவின் முயற்சிகள் இருப்ப தாகத் தோன்றுகிறது என்பதுதான் அவரிடம் உள்ள பிரச் சினையாகும். இந்த வகையில் எதிர்க்கட்சிகள் மேலும் கூடுதலாக பிளவுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பாதை

ஒரே ஒரு லட்சியத்தைப் பரப்புரை செய்யும் பா..கட்சிக்கு எதிராக நாடு ஏற்றுக் கொள்ள இயன்ற ஒரு கூட்டணிக் கதை ஒன்றை மக்கள் முன் வைப்பதற்கு மாறாக, மிகுந்த குழப்பம் அடைந்தவைகளாகவே எதிர்க் கட்சிகள் இன்று  தோன்றுகின்றன. மேலும், அவர்களின் அனைத்து கருத்து வேறுபாடுகளும் இன்று பொது மக்களின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதை இலக்காக மம்தா   கொண்டிருக்கும் நிலையில், பாசிச மனப்பாங்கு கொண்ட மம்தா  ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி என்று  கூறி அவரை காங்கிரஸ் திருப்பித் தாக்கியிருக்கிறது. மற்ற கட்சிகளில் இருந்து, குறிப்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து,  சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பது என்ற திரிணாமூல் காங்கிரசின் உத்தி, பெரிய அளவில் அந்த கட்சிக்கு உதவி செய்துவிடவில்லை. அண்மையில்  காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடங்கி வைத்த எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி நம்பிக்கை தரும் ஒரு தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வருகை தந்திருந்தன; ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை விட பிளவுபட்டிருப்பதைதான் இன்று அனைவராலும் பார்க்கப்படுவதாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்படுத்துவதை தங்களது வாழ்வா, சாவா என்ற பிரச்சினையாக எதிர்க் கட்சிகள் கவலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்,  எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படு வதில்  உள்ள சிக்கல் மிகுந்த நிலையை ஒவ்வொரு எதிர்க்கட்சியும் உணரவேண்டியது தவிர்க்க இயலாத தும், மிகமிக முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். எந்த ஒரு கூட்டணிக்கும் ஒட்டு மொத்த தகுதியையும், பலத்தையும் பங்களிக்க வல்ல சில குறிப்பிட்ட உள்ளுறை பலங்களை ஒவ்வொரு எதிர்க்கட்சியும் பெற்றிருக்கின்றன என்பதை அனைத்து கட்சிகளும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

முன்பு இருந்ததை விட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கங்களாக முன்னர் இருந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும், மற்றும் இதர சில மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் பெரும்பாலும், இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்  தங்களது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பெருமளவில் இழந்து வருபவை களாகவே காணப்படுகின்றன. ஆனால், மம்தா பார்ப்பதைப் போல காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு ஒரு சுமையே அல்ல. நவீன காலத்தில் கடைப்பிடிக்கப்படும் குறைந்த அளவு செயல் திட்டம் போன்ற வழிகளில் செய்யப்பட வேண்டியது என்ன என்பதை இக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தீர்மானித்து செயல்படுவது பொருத்தமானதாக இருக்கும்.

தொடக்கமாக,  பா..கட்சியின் குறைகள் என்னவாக இருந்த போதிலும், அதன் கொள்கை பற்றி எந்த அளவுக்கு மக்கள் மனநிறைவற்றவர்களாக உள்ளனர் என்ற போதிலும், அதிகார ஆற்றல் பெருமளவில் பா..கட்சிக்கு ஆதரவாக சாய்ந்து இருப்பதை கூட்டணியில் உள்ள எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். கட்சிக்குள் எதிர்ப்பு ஏதுமற்ற தேசிய அளவிலான தலைவர் ஒருவரைப் பெற்றுள்ள கட்சியாகவும் பா... இருக்கிறது. பெரும்பான்மை மத இந்து மக்களின் நலன்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக முன்னிலைப்படுத்தப்படும் தேசியம் என்னும் பா.. கட்சியின் கலவை அரசியலை, இன்றைய சூழ்நிலைக்கு இந்த கொள்கைள் மிகச் சிறந்த முறையில் பொருத்தமானவையாக இருக்குமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க அளவினரால் தயாராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம். உண்மையைக் கூறுவதானால்,  நரேந்திர மோடியுடன் பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்கள் எவரும் பா..கட்சியில்  இல்லை என்றே கூறலாம்.  பல எதிர்க் கட்சிகளின் பக்கவாட்டுக் கண்ணாடியில் இந்த  விவகாரங்கள் தற்போதுள்ள இந்த நிலை உண்மையில் தெளிவாகக் காண இயலாததாக இருக்கக்கூடும். ஆனால், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது, ஓரளவுக்கான தெளிந்த சிந்தனை எதிர்க் கட்சிகளிடம் தோன்ற வேண்டும். விரும்பும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எட்டப்பட வேண்டுமானால், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக் கையை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்க வேண்டும். சமகால அரசியல் ஒரு பூஜ்ய விளையாட்டு அல்ல என்ற உண்மை நிலையை அறிந்தவர்களாகவும் அவை இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளாக இருக்கும் கட்சிகளில் வேறு எந்தக் கட்சியை விடவும் காங்கிரஸ் கட்சி, தங்கள் கடந்த கால புகழைப் பற்றி பாடாமல் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம் என்பதுடன்,  காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் மேலும் மேலும் அகண்டு கொண்டே செல்லாமல் இருப்பதை காங்கிரஸ் கட்சி உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பல கடந்த கால கோட்பாடுகளையும், இன்று காணாமல் போய்விட்ட உலக கருத்துகளையும், உணர்வுகளையும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிராமல்  தூக்கி எறியவேண்டியதாகவும் கூட இருக்கலாம். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போன்ற எதிர்க் கட்சிகள், ஒன்றிரண்டு மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிகள் காரணமாக  தங்களது பலத்தை அதிக அளவில் மதிப்பிட்டு விடக்கூடாது. அதற்கு மாறாக, பா..கட்சிக்கு எதிராக ஒரு பலமான அணியை உருவாக்குவதற்கு கூட்டணிக் கட்சிகளை ஒன்று திரட்டி பலப்படுத்துவதில் அது கடுமையாக பணியாற்ற வேண்டும்.

வெற்றியை நோக்கி செல்வதற்கான வழி

பா..கட்சியைத் தோற்படிப்பது என்பது அவ்வளவு எளிதானதொரு செயலல்ல.  பா..கட்சிக்கு எதிரான எந்த ஒரு கூட்டணியிலும், கூடுதலாக வாக்குகளைக் கொண்டு வந்து தருவதற்கு இயன்றவையும்,  எதிர்க்கட்சிகளின் கூட்டணி குலைவதற்கு காரணமாக இல்லாத, மிகச் சரியான கூட்டணிக் கட்சிகள் இருப்பது மிகமிக அவசியமானதாகும். தவறான நம்பிக்கை களையும், ஊகங்களையும் அழித்துவிடுவதற்கு அது வழி வகுக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக ஆளும் பா..கட்சியால் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் எந்த விதமான அழுத்தத்தையும் தாங்கி எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்த எதிர்கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்க வேண்டும்.

கேரளாவில் இடதுசாரிகள், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், ராஜஸ்தான் சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி போன்ற ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் செல்வாக்கு பெற்றிருக்கும் தொகுதிகள் எவையெவை என்பதை ஒப்புக் கொள்ளும் நேர்மை எதிர்கட்சியினரிடம் இருந்தால்தான் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு இயலும். ஒற்றுமையைப்  பற்றிய எதிர்கட்சிகளின் நம்பிக்கை செல்வாக்குள்ள தொகுதிகள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்வதையே சார்ந்து இருப்பதாகும். இத்தகையதொரு அமைப்பில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்கவே செய்யும். ஆளும் பா..கட்சிக்கு எதிராக ஒற்றுமை என்ற மேளத்தை அடிப்பது மட்டுமே போதுமானதல்ல என்பதுடன் அதனால் எந்த வித நல்ல விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளவும் வேண்டும். சுருக்கமாகக் கூறினால்,  எதிர் கட்சிகளின் ஒற்றுமை வெற்றி பெற வேண்டுமானால், கூட்டணியின் பரப்புரையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வேண்டும். முற்றிலும் வேறொரு சந்தர்ப்பத்தில் ஃபரீட் ஜக்கிரியா கருத்து தெரிவித்தது போல எதிர்கட்சிகள் எல்லாம் இப்போது நிலவும் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி: 'தி இந்து' 21- 12-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment