சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் சாமியார்கள் அமைப்பு நடத்திய கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய காளிச்சரண் என்ற சாமியாரை 5.01.2022 அன்று காவல்துறை கைது செய்தது.
சாமியார் கைது தொடர்பாக புனே காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “புனே நகரம் கதக் காவல் நிலையத்தில் சாமியார் காளிச்சரணின் வன்முறை தூண்டும் விதமானப் பேச்சு குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரை புனே காவல்துறை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் வைத்து கைது செய்து புனே கொண்டுசெல்வதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அரித்துவார், வாரணாசி மற்றும் ராய்ப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் சாமியார்களின் தலைமை அமைப்பான சமஸ்த ஹிந்து அகாடா - தர்ம சன்சத் மற்றும் சிவ்பிரதாப் தின் போன்ற பெயர்களில் மத வெறிப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் ராய்ப்பூரில் 19.12.2021 அன்று நடந்த கூட்டத்தில் பலர் மிகவும் மோசமான முறையில் பேசினார்கள். முக்கியமாக சிறுபான்மையிருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசினர்.
இந்த ஒன்றுபட்ட ஹிந்து சாமியார்கள் அமைப்பின் (சமஸ்த ஹிந்து அகாடா) தலைவராக மிலிந்து எக்பூடே என்ற மராத்திய பார்ப்பனர் உள்ளார், இந்த அமைப்பில் நாதுராம் கோட்சே ஆதரவாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.
28.12.2020 அன்று ராய்ப்பூர் நிகழ்வில் பேசிய காளிச்சரண், மிலிந்து, எக்பூடே உள்ளிட்ட சாமியார்கள் இஸ்லாமியர்களை துண்டுதுண்டாக வெட்டுங்கள், இதர சிறுபான்மையினரை கொலை செய்யுங்கள், உங்கள் கண்களில் எந்த ஒரு கிறிஸ்தவ கடவுள் சிலை தென்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அடிக்கடி கூறத்தேவையில்லை என்று பேசியிருந்தனர்.
இது தொடர்பாக மகாராட்டிரா மாநிலம் புனே கதக் காவல் நிலையத்தில் இந்திய குற்றவியல் சட்டம் - 295 (திட்டமிட்ட, கேடு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசுவது), 298 (நேரடியாக குறிப்பிட்ட மதத்தினரை மிரட்டுதல் புண்படுத்துதல், வெறுப்புப்பேச்சு மற்றும் வதந்தி பரப்புதல்) தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்
மற்றவர்களான நாது கிஷோர் எக்பூடே, மோகன்ராவ் ஷிடே, தீபக் நக்பூரே ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் கேப்டர் திகேந்திர குமார் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இவர் கார்கில் போரில் வீரதீர செயலுக்காக ஒன்றிய அரசிடம் பதக்கம் பெற்றவர் ஆவார்
சாமியார் காளிச்சரண் மற்றும் எக்பூடேமீது வழக்குப் பதிவு செய்யப்படுவது முதல் முறை அல்ல, 1.1.2018 அன்று பீமா கோரேகாவ் போர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்த வந்த ஒடுக்கப்பட்ட அமைப்பினர் மீது வன்முறைத்தாக்குதல் நடத்தி கலவரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரோடு சம்பாஜி பிண்டே என்ற மதவாத அமைப்பின் தலைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வன்முறையத் தூண்டுவது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை பிரிவின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் இவர்களுக்கு பீமா கோரேகாவ் வழக்கில் பிணை வழங்கப்பட்டுவிட்டது.
'இனி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசமாட்டேன்' என்று உறுதிமொழி கூறி பிணையில் வெளிவந்த சாமியார் காளிச்சரண் மீண்டும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் விதமாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்மீது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் காந்தியாரை மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிய குற்றத்திற்காக போபால் காவல்துறையினர் இவரை கைது செய்த நிலையில் தற்போது சிறுபான்மையினரை கொலை செய்வேன் என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய தற்கே புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவிகளைப் பொறுத்தவரை அறியாமையால் பேசினார்கள் என்று சொல்ல முடியாது. வன் முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, வன்முறையில் ஈடுபடுவது இவற்றுக்கெல்லாம் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!
'இந்த நிலையில் இனி மேல், இவ்வாறு பேச மாட்டேன்' என்று எழுதி வாங்கிக் கொண்டு பிணையில் வெளியே விடுவது "மயிலிறகால் வருடுவது போன்றது"தான். அதுவும் தொடர்ந்து இதே வேலையாக இருப்பவர்கள் இவர்கள் என்பது முக்கியமானது. ஆட்சிகள் தவறு செய்தால், நீதி மன்றங்கள் சரிசெய்ய வேண்டும். என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு!
No comments:
Post a Comment