வல்லம், ஜன.8 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மாணவர் குழு சைல்டுலைன் - 1098 மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பாக கடுவெளியில் உள்ள சிறீவெங்கடேஸ்வரா குழந்தைகள் இல்லத்தில் மருத்துவ முகாம் நடத்தப்
பட்டது.
இதில் சைல்டுலைன் மய்ய நிறுவன இயக்குநர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் குழந்தைகளின் நலனே நாட்டின் வளம் என்றும் அவர்களை பேணிக்காப்பது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை என்றார்.
அதனை தொடர்ந்து சிறீ வெங்கடேஸ்வரா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் செயலர் சங்கர் முன்னிலை உரையாற்றினார். அதில் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்களை குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவில் பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் புஷ்பா பேசுகையில், தற்பொழுதுள்ள கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து பேசிய சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞானராஜ்,
குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழந்தைகள் பாதுகாப்பு உதவி மய்யம் 1098அய் பயன்படுத்த வேண்டும் என்றார். இம்முகாமில் 150 குழந்தைகள், 75 முதியவர்கள் மற்றும் 25 பெண்களுக்கு அவர்களின் இரத்த வகை கண்டறியப்பட்டது. அதோடு குழந்தைகளுக்கு பூச்சி மாத்திரைகள் மற்றும் முதியவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமினை சமூகப்பணித்துறையின் முதலாமாண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மாணவர் குழுவின் சுரேந்தர், ஆர்த்தி, பொர்செல்வி, முகமது இஸ்மாயில் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
No comments:
Post a Comment