ஆரோக்கியம் தரும் ஆவிறைச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

ஆரோக்கியம் தரும் ஆவிறைச்சி

முனைவர் ஆ.சுலோச்சனா
முதுகலைத் தமிழாசிரியர், 
ம.செ.நா. மேல்நிலைப் பள்ளி, 
தியாகராயர் நகர், சென்னை - 17.

தமிழ்நாட்டில் மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்தில் தோன்றி, முல்லையில் வளர்ந்து, மருதத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது. எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழவும், உடல் வளர்க்கவும், ஆரோக்கிய வாழ்வுக்கும் உணவு இன்றியமையாதது. சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் அதனை முதன்முதலில் சமைத்து உண்டவர்கள் தமிழர்களே.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது மாடு. அதனால் தான் மாட்டினைச் “செல்வம்“ என்கிறது திருக்குறள்.

பொதுவாக நோயின் தன்மைகள் மூன்று வகைப்படும். 1.மருந்தினால் நீங்கும், 2.தீராத நோய்கள், 3.தீர்ந்தது போலத் தோன்றினாலும் உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் என்கிறது நீலகேசி (பாடல் 116) நோய் ஏற்படக் காரணம் பலவீனம். எனவே, நோய் வந்தபின் தீர்ப்பதைவிட, வராமல் தடுப்பதே சிறந்தது. “உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்னும் திருமூலர் வாக்குப்படி உடலை உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க வேண் டும். அதற்குப் பெரிதும் பயன்படுவது மாட்டிறைச்சி என்ப தாலும், மாட்டிறைச்சி உண்பவர்களைத் தாழ்வாகப் பார்க் கும் இச்சமுதாயத்தின் கண்ணோட்டத்தினை மாற்றும் சிறுமுயற்சியாகவும் எழுந்ததே இக்கட்டுரை.

திவாகர நிகண்டு காட்டும் 

மாட்டின் வேறு பெயர்கள்

மாடு இரண்டு வகை 1. பசு, 2.எருமை. பசு என்னும் பெயர் பெண்ணினத்தையும் எருது என்பது பசுவின் ஆணினத் தையும் குறிக்கும். இரண்டாவது வகை எருமை. இதில் ஆண், பெண் இரண்டும் உண்டு.

ஆ, பசு, ஆன், கோ, குடஞ்சுட்டு, சுரபி, தேனு, கபிலை, சேதா, குரம், கோமளம் ஆகியன பசுவின் பெண்பாற் பெயர்களாகவும், பாறல், புல்லம், பாண்டில், மூரி, ஏறு, பூணி, இறால், பெற்றம், எருது, சே, விடை, இடபம் ஆகியவை பசுவின் ஆண்பாற் பெயர்களாகவும் சுட்டுகிறது திவாகர நிகண்டு.

மேலும், காரான், மயிடம், கவரி என்பன பெண்பால் எருமையின் பெயர்களாகவும், பகடு, கடா, ஆமா, கவயம் என்பன ஆண்பால் எருமையினையும் குறிப்பதாக திவாகர நிகண்டு கூறுகிறது.

சங்க இலக்கியங்களில் மாட்டிறைச்சி

சங்ககால மக்கள் அசைவ உணவினை விரும்பி உண்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்களில் சான்றுகள் உள்ளன. அவர்கள் கோழி, ஆடு, மாடு, முயல், மான் பன்றி, ஆமை, உடும்பு, மீன், இறால், நண்டு, ஈசல் போன்றவற்றை சமைத்து உண்டனர் என்ப தனை இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.

ஊன் உண்டால் பற்கள் நிலத்தை உழும் கலப்பை போலாகும் என்கிறது பொருநராற்றுப்படை (118.119 ஆவது பாடல்கள்) சங்க இலக்கியங்களில் பசு என்னும் சொல் இடம் பெற வில்லை என்றாலும்கூட ஆ, ஆமா, ஆன் போன்ற சொற்களைக் காண முடிகிறது. இவை மாட்டிறைச்சி உண்டதற்குரிய சான்றாகவும் விளங்குகிறது.

“கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மறவர்” (பாடல் 129:12) என்று கொழுத்த பசுக்களைக் கவர்ந்து வந்து தின்ற கூரிய ஆயுதங்களை உடைய வீரர்களைக் குறித்தும், 

“தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்

நாடுஆ வீழ்த்துத் திற்றி தின்ற” (பாடல் 249:12,13) 

என்று மயில் இறகால் ஆன மாலையை அணிந்த வீரர் இளைய பசுவைக் கொன்று தின்றதையும் அகநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.

“காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்

செங்கோட் டாமா னூனொடு காட்ட” (பாடல் 30:9,10)

என்று பதிற்றுப்பத்து பாடல் இளமையான எருமையை விரும்பி உண்டனர் என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு தமி ழர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர். போர்வீரர் முதல் ஏழைக் குடிகள் வரை மாட்டிறைச்சியை விருந்து படைத்து, தாங்களும் உண்டு மகிழ்ந்திருந்தனர் என்று சங்க இலக்கியப் பாடல்களில் சான்றுகள் பரந்து காணப்படு கின்றன.

பலியிடும் பழக்கம்

தமிழ்நாட்டில் பலியிடும் பழக்கம் முன்னோர்களிடம் இருந்து தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்வதற்காகவோ, அல்லது இறைக்கு நன்றி சொல்வதற்காகவோ திருவிழா எடுத்து பலி கொடுத்தனர்.

திருவிழாக்களின் முக்கிய கோட்பாடு மக்கள் ஒன்று கூடி மகிழ்வது, கூடி உண்பது, நட்புகளையும், உறவுகளை யும் கண்டு மகிழ்ச்சியைப் பகிர்வது, ஊர்கூடி ஒற்றுமையை வெளிப்படுத்துவது, பெரும்பாலும் பெண் தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டது. அம்மனுக்குப் பலி கொடுத்தால் தன் துன்பங்கள் நீங்கும் என்று மக்கள் நம்பினர். இந் நம்பிக்கை தன் குடும்ப நலத்திற்காகவோ அல்லது மழை வேண்டுதல் போன்ற பொது நலத்திற்காகவோ இருந்தது. பலி கொடுப்பதற்காகவே கோயில்களில் பலிபீடங்கள் உண்டு. பலியிடுவதற்கு எருமையின் ஆண்பாலினமான கிடாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பசுவோ, எருதோ பயன்படுத்தப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள காளிகோயிலில் 6 எருமைகளை பலி கொடுத்ததையும் (M.dinamalar.com) திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் அருகே சிறீமண்டு காளியம்மன் கோயிலில் 130 எருமைகளை பலி கொடுத்ததையும் (tamil.oneindia.com) திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மட்டப்பறைபட்டியில் ஏழு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் 1000 எருமை கிடாக்களுக்கு மேல் பலியிட்டதையும், திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோயிலில் எருமை கிடாக்கள் பலியிட்டதை யும் (இந்து தமிழ் திசை 28.6.2017) அறியலாம்.

பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் என்பது 2003இல் அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தடை உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருந்தது.

ஆரோக்கியம் நிறைந்த ஆவிறைச்சி

ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சியில் புரதச் சத்து, விட்டமின் ஏ போன்றவை இரு மடங்கு உள்ளன. ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தேசிய சத்துணவு ஆராய்ச்சிக் கழகத்தினர் மாட்டிறைச்சியில் அடங்கியுள்ள சத்துகளைப் பட்டியலிட்டுள்ளனர். பசுமாட்டிறைச்சியில் புரதம், கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, தயமின், ரிப்போஃபிளேவின், நியாசின், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12, ஆக்ஸாலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளதாக ப.சீனிவாசன், சீ.சுசிலா தேவி ஆகியோர் எழுதி ராமையா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் என்னும் நூலில் ப.28இல் நமக்குத் தெரிவிக்கிறது.

பசு மாட்டிறைச்சியில் அடங்கியுள்ள சத்துகள்

புரதம்: உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கொழுப்பு: உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

சோடியம்: உடலின் நீர்ச்சத்தைச் சமநிலையில் வைக்கிறது.

பொட்டாசியம்: தசைகளை இயல்பாக வைக்கிறது. நரம்புகளை வலுப்படுத்துகிறது, இதயத் துடிப்பைச் சீராக வைக்கிறது. இரத்த நாளச் சுவர்களை இயல்பாக வைக்கிறது. ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

இரும்பு: சுவாசத்தை எளிதாக்குகிறது, இரத்த சிவப்பணுக்களை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

சுண்ணாம்பு: பற்கள், எலும்புகளுக்கு நல்லது.

பாஸ்பரஸ்: எலும்புகளை வலுப்படுத்துகிறது, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

வைட்டமின் ஏ: இளமையாக இருக்க உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.

தயமின்: இதற்கு உயிர்ச்சத்து என்று பெயர் பி6,பி12. குழுமத்தைச் சார்ந்தது. செரிமானத்திற்குப் பயன்படுகிறது.

ரிப்போஃபிளேவின்: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

நியாசின்: தோலுக்கும் எலும்புக்கும் நல்லது.

விட்டமின் சி: உயிர்ச்சத்து, ஊட்டச்சத்து அளித்து வளர் சிதைமாற்றத்திற்குப் பயன்படுகிறது.

ஃபோலிக் அமிலம்: இரத்த அளவை அதிகரிக்கிறது. உடல் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

வைட்டமின் பி12: நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இரத்தச் சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

ஆக்ஸாலிக் அமிலம்: செரிமானத்திற்குப் பயன்படுகிறது.

இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் இறைவனின் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் பால் தேவைக்காக “பேராடுகள்” வழங்கப்பட்டதைக் காணலாம். மாடுகளைப் பேராடுகள் என்று குறிப்பிடும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது. அத்தகைய ஆவாகிய பேராட்டின் இறைச்சியை உண்பதற்கான காரணங்கள்,

* விலை குறைவானது

* உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்தது.

* உடலை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டது.

* ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

* மாடு ஒரு தாவர உண்ணியாக இருப்பதால் உடலுக்குத் தீங்கு செய்யாது.

அற்புத சிந்தாமணி என்னும் பதார்த்த குணசிந்தாமணி மாட்டிறைச்சி உண்பதால் சகல நோயும் உண்டாகும் என்று சொன்னால்கூட, அறிவியலின் அறிவுசார் கருத் துருவாக்கம் அடிப்படையில் ஆரோக்கியமான மாட் டின் இறைச்சியை நன்கு வேக வைத்து உண்டால் போது மான ஊட்டச்சத்துகளைப் பெறலாம்.  பல நன்மைகளை உள்ளடக்கிய ஆவிறைச்சியை அளவோடு உண்டு, நலமுடனும், வளமுடனும் வாழ்வோம்.

No comments:

Post a Comment