திராவிட இயக்க தீரர்களை நினைவூட்டும் ஆவணங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

திராவிட இயக்க தீரர்களை நினைவூட்டும் ஆவணங்கள்

 தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இயக்கம் - திராவிட இயக்கம்! முறையான வரலாறு இல்லாத தமிழினத்தில், பெரியாரின் கருஞ்சட்டைப் படையில், திராவிட இயக்கத்தில் தங்களை இணைத்து வரலாறு படைத்தவர்களோ  ஏராளம்! தலைவர்களாக, தளபதிகளாக, கொள்கை வீரர்களாக, படை வீரர்களாக, வீராங்கனைகளாக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்தோர் ஏராளம், ஏராளம்! திராவிட இயக்கத்தின் அந்த வீர மாந்தர்களை, தியாக செம்மல்களை, சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றியும், அவர்களின் சுருக்கமான வரலாற்று குறிப்புகளையும் பதிவு செய்து, ஒரு காலப் பெட்டகமாக படைக்கப்பட்ட நூல் வரிசை தாம் இவை.

 திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி, நூலின் முன்னுரையில் குறிப்பிடும் போது, "எந்த ஓர் இயக்கத்திற்கும் அதன் தொண்டர்கள் தான் இரத்த ஓட்டம்! அவர்களின்றி இயக்கம் ஏறு நடை போட முடியாது! சுயமரியாதை வீரர்கள் - கொள்கைகளுக்காக எதையும் இழக்க தயாராய் நின்றனர்! உடல், உயிர், பொருள், சுகவாழ்வு எதனையும் இழந்து, பெரியாரின் சுயமரியாதை சுடரை ஏந்தி சென்று மகிழ்ந்த, மான மறவர்கள்!" என பெருமையோடு பதிவிட்டுள்ளார்!

சுயமரியாதைச் சுடரொளிகள் (தொகுதி 1) - அ. இறையன் - திராவிடர் கழக வெளியீடு 

நூலை பெரியார் பேருரையாளர், பேராசிரியர் அ. இறையன் அவர்கள் மிகவும் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் எழு தியிருப்பதை நாம் உணர  முடிகிறது.

இந்த முதல் தொகுதியில் - 178 சுயமரி யாதை இயக்க வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் முதல் பதிப்பு 1981ல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இயக்கத்தின் முன்னோ டிகள், தலைவர்கள், தொண்டர்கள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் முத்துக்கள்! கழகத்தின் சொத்துக்கள்!

திராவிட இயக்க முன்னோடி ஆளுமை கள் வரிசையில், இந்த தலைவர்களைப் பற்றி யெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது

திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முன் னோடி தலைவர்கள் எந்த அளவு காரணமாக இருந்தார்களோ, அவற்றிற்கு எந்த வகை யிலும் குறைவில்லாமல் இருந்தது - இயக்க தொண்டர்களின் பங்கு. அவர்களின் அர்ப் பணிப்பும், சேவையும், மன உறுதியும் யாருக் கும் சளைத்ததல்ல. பணம், பதவி, அந்தஸ்து, கவுரவம் போன்றவைகளை நோக்கி செல் லாமல், பெரியார் வழியில், பகுத்தறிவு பாதை யில் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த, சுடரொளிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள்,  தெரிவதற்கும், தெளிவதற்கும்:

1) சுயமரியாதை இயக்கத்திற்கு தூணாக, போர்வாளாக, சூழ்ச்சிகளை முறியடிக்கும் வீரராக திகழ்ந்தவர், மாயவரச் சிங்கம் என பெயர் பெற்ற, மாயவரம் சி. நடராசன் (1902 - 1937)

2) முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முதல் 'சர்வாதிகாரி' யாக பொறுப்பேற்று போராட்டத்தை நடத்தி, கைதாகி, 18 மாதங்கள் சிறையில் வதைப்பட்டு, வெளியே வந்த பின்னே வெற்றி வீரராக வாழ்ந்தவர், நெல்லை சி. டி. நாயகம் (1878 - 1944)

3) சிவகங்கையில், ' முதல் ஆதிதிராவிட மாநாட்டை ' ஏற்பாடு செய்து, ஆதிதிராவிட மக்களை தாழ்வுபடுத்தும் பார்ப்பனருக்கும், உயர் ஜாதியினருக்கும் எச்சரிக்கை விடுத்து, நடத்தி காட்டியவர், வழக்குரைஞர் சிவ கங்கை எஸ். இராமச்சந்திரன் (1884 - 1933)

4) நீடாமங்கலத்திலுள்ள வைணவக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட தோழர்களை துணிச்சலாக அழைத்து சென்ற வீரர், மாய வரம் சித்தார்காடு கே. இராமையா (1903 - 1974)

5) திராவிடக் கருத்துக்களை தனது ' நகர தூதன் ' இதழில் நையாண்டியும் கிண்டலுமாக எழுதி பெயர் பெற்றவர், மணப்பாறை ' பேனா நர்த்தனம் ' ரெ. திருமலைசாமி (1901 - 1971)

6) மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மறுமணம் - கலப்பு மணம் - காதல் மணம் - சடங்கொழித்த மணம் - சிக்கன மணம் என்ற அய்வகைத் தன்மை கொண்ட திருமணத்தை, தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக தனக்கு நடத்தி காட்டிய செயல்வீரர், காரைக்குடி சொ. முருகப்பர் (1893 - 1956). தந்தை பெரியார் தலைமையில் முருகப்பர் - மரகதவல்லி திருமணம் 29.06.1929ல் நடைபெற்றது!

7) இந்தி எதிர்ப்பு போரில் தன் துணை வியாரையும் ஈடுபடுத்தி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவரும், சீரிய எழுத் தாளருமான முதுகுளத்தூரை சேர்ந்தவரும், புகழ் பெற்ற ' பராசக்தி ' நாடகத்தை படைத் தவர் பாவலர் பாலசுந்தரம் (1907 - 1972)

8) இனமானம் காக்க இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, கடுங் காவல் கொடுமையால் தங்கள் உயிரை பலி தந்த, மொழிப்போர் தியாகிகள், மாவீரர்கள் மற்றும் நடராசன் (மறைவு 15.01. 1939) தாள முத்து (மறைவு 11.03.1939) 

9) தமிழகத்துக்கு வந்த நேருவுக்கு, இயக்க தோழர்களுடன் கருப்புக் கொடி காட்டிய போது, பார்ப்பன மற்றும் ஆணவக் கைக் கூலிகளால் கொடூரமாக தாக்கப்பட்டும், இறுதி வரை இயக்கத்துக்கு பாடுபட்ட, திருச்சி ஃபிரான்சிஸ் (1910 - 1963). இவர் மறைந்த பின்பு, இறுதி ஊர்வலத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டார்!

10) இந்திய அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் பங்கு பெற்று, கைதாகி, சிறை சென்று, சிறைக் கொடுமைகளின் விளைவாக, உடல்நலன் சீரழிந்து, மரண மடைந்த கொள்கை வீரர், திருவையாறு மஜீத் (1935 - 1958)  திராவிட கொள்கை பற்றாளர்கள், பெரியா ரின் பெருந் தொண்டர்களின் தியாகத்தால் உருவானது - திராவிட இயக்கம்!

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகமாக பரிணாமம் பெற்ற பின்பும், தன்ன லமற்ற கருஞ்சட்டை வீரர்களின் வாழ்வும் தியாகமும் இணையற்றது!

அந்த சுயமரியாதைச் சுடரொளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நூலும் இணையற்றது!

சுயமரியாதைச் சுடரொளிகள் (தொகுதி 2) -

கவிஞர். கலி. பூங்குன்றன் -

சுயமரியாதைச் சுடரொளிகள் இரண்டா வது தொகுதியான இந்த நூலை கவிஞர். கலி. பூங்குன்றன் அருமையாக படைத்துள்ளார். இந்த நூலில் 66 திராவிட இயக்க வீரர்களிடம் நேர்காணல் செய்து, அவர்கள் தந்த தகவல் களை தொகுத்து, அவர்களின் வாழ்க்கையை யும், இயக்கத்தின் வரலாற்றையும் அறியும் வகையில் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது! அந்த சுடரொளிகளின்  நேர்காணல்களிலி ருந்து சில தகவல்கள். 

பழம் பெரும் சுயமரியாதை வீரர். ராணுவத்தில் இருந்தவர். 1937ல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று, பெரியாருடன் பெல்லாரி சிறையில் இருந்தவர். நீதிக்கட்சி மாநாட்டில் (1938) பெரியார் சிறையில் இருந்த வேளையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   தலை வர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள செய்ய, அன்று நீதிக்கட்சி தலைவராக இருந்த 'பொப் பிலி அரசரே' சிறைக்கு வந்து பெரியாரை வேண்டினார். பெரியாரோ பொப்பிலி அரசரிடம், "தாங்களோ அரசர், நானோ ஒரு ஆண்டி! தாங்களே ஒரு கட்சியை தலைமை தாங்கி நடத்த முடியாதபோது, என்னால் எப்படி முடியும்?"... என மறுத்தாராம்.   பெரியாரை வலியுறுத்தி தலைவர் பதவியை ஏற்க செய்தாராம் பொப்பிலி அரசர்! பெரியாருக்கு நீதிக்கட்சியின் தலைமைப் பதவி, சிறையை தேடி வந்ததை ஆச்சர்யத் தோடு நினைவு கூருகிறார்  குடந்தை அப்பர்!  

கரூரில் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக இருந்தவர். 1945 இறுதியில் கரூரில் நடைபெற இருந்த பெரியார் கூட்டத் தில் கலவரம் செய்ய காங்கிரசார் திட்டமிட் டார்கள். ராஜாஜி வாலிப சங்கத்தை சேர்ந்த 17 பேர், ராஜகோபால் உட்பட, செயலாற்ற தயாரானார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு பணி தரப்பட்டதாம்!  மேடையில் ரகளை செய்து, பெரியாரை கத்தியால் குத்தும் பணி, ராஜகோபாலுக்கு! அதனால் பிச்சுவா கத்தியுடன் மேடைக்கு அருகே எப்படியோ சென்று விட்டாராம். ராஜகோபால் கூறுகிறார்,  "ஏ. பி. ஜனார்த்தனம் பேசிய பின் பெரியார் பேச ஆரம்பித்தார்! நான் அவரை பேச விடாமல் கத்தினேன். பெரியார் என்னை 'போய் உட்காருங்க!' என்றார்.  எங்களில் சிலர் ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த் என கோஷம் போட, நான் மேடையேறி, கத்தியை எடுத்து பெரியாரை குத்த முயன்றேன்! ஏ. பி. ஜனார் த்தனமும் மற்றவர்களும் என்னை தடுத்த தால், கத்தி மேஜை மீது குத்தப்பட்டது!  எல் லோரும் எனது கத்தியை பிடுங்கி என்னை அப்புறப் படுத்தினார்கள். அப்போது பெரியாரோ என்னைப் பார்த்து, 'குத்து! தமிழ கத்தின் தலைவிதி இங்கேயே முடியட்டும்! குத்துப்பா!!' ..என அந்த நேரத்திலும் அவர் கூறியது, என்னை தூக்கிவாரிப் போட்டது.   பின்பு என்மீது எந்த வழக்கும் புகாரும் போட வேண்டாமென பெரியார் சொல்லி விட்டாராம்..பின்பு பல மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திராவிட இயக்கத்திற்கு வந்து சேர்ந்தேன்" என குற்றவுணர்வோடு கூறினார், வெங்கமேடு இராஜகோபால்!.

இவர்கள் மட்டுமா? இன்னும் எத்த னையோ பேரின் அனுபவங்களும், அரிய தகவல்களும் மெய்சிலிர்க்க செய்கிறது!  நார் சிங்கம் பேட்டையை அடுத்திருந்த சேங்காலி புரம் தேனீர் கடையில், தாழ்த்தப்பட்டவர் களை தனிமைப் படுத்தும் சுவர்களை இடித்த - குடவாசல் கா. கணபதி!

'கலைமகள்' இதழ் பதிப்பகத்தில், தன் னோடு சக ஊழியராக பணியாற்றிய பார்ப் பனர், தன்னைப் பார்த்து, "டேய் சூத்திரா, .. பக்கத்தில் வராதே!"..என கூறியதால், ஆத் திரங் கொண்டு அவரது 'சிண்டை' கத்திரிக் கோலால் வெட்டி எறிந்த - அடையாறு 

கோ.அரங்கநாதன்!

தனது ரஷ்யப் பயணத்தின் போது, பெரியாரின் சிறு, சிறு சிலைகளை நண்பர் களுக்கு வழங்கியும், தமிழ்நாட்டில் லெனின், ரஷ்யா, மாஸ்கோ போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு, பெரியார் சூட்டியதையும், வெளிநாட்டிலும் பெரியாரை அறிமுகம் செய்த - திருப்பத்தூர் ஏ.டி.கோபால்!

நன்னிலத்தில், 1931ல் முதலாவது சுயமரி யாதை மாநாட்டை கூட்டியவரும், அந்த மாநாட்டு மேடையிலேயே ராகு காலத்தில், பெரியார் தலைமையில் தனது திரு மணத்தை நடத்திய வரும், இன்று பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாடுகளிலும் திருமணங்கள் நடை பெறுவதற்கு முன்னோடியுமான - நன்னிலம் கோ. சவுரிராஜுலு!  இவர்கள் தியாக விளக்குகள்!

அர்ப்பணிப்பே வாழ்க்கை என்றானவர்கள்! இவர்கள் பிரபலங்களில்லை!

இவர்களுக்கு பிறர் பலங்களுமில்லை!

இவர்கள் - சுயமரியாதைச் சுடரொளிகள்!

சுயமரியாதைச் சுடரொளிகள் (தொகுதி 3) - கவிஞர் கலி. பூங்குன்றன் - திராவிடர் கழக வெளியீடு   

சுயமரியாதைச் சுடரொளிகள் - திராவிட இயக்கத்தின் தியாகிகளை நினைவூட்டும் வரலாற்று பெட்டகம்! இந்த மூன்றாவது தொகுதி, 57 சுடரொளிகளைப் பற்றிய,  கவிஞர் கலி. பூங்குன்றனின் மற்றுமொரு சிறந்த படைப்பு! இந்த மூன்று தொகுதிகளையும் முழுமையாக படித்து, உள்வாங்கும் போது நமக்கு, திராவிட இயக்கத்தின் ஆக்கமும், தாக்கமும் நன்கு உணர முடிகின்றது! இயக்கத்திற்காக வாழ்ந்து மறைந்த, மறைந் தும் மறையாத தியாகிகளின் அளப்பரிய அர்ப்பணிப்பை அறிய முடிகின்றது!  இயக்கத்திற்காக - உரமாகிப் போன பலரையும், மரமாகி நின்ற சிலரையும் அறிய முடிகின்றது! இயக்கத்தின் - அடித்தளத்தை தாங்கி நின்றோரையும், மேல்தளத்தை அலங்கரித்தோரையும் காண முடிகின்றது!

இயக்கத்தின் படை வீரர்களையும், படைத் தளபதி களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது!  அர்ப்பணிப்பின் அரிச்சுவடிகளையும் - அர்ப்பணித்தோரின் அடிச்சுவடிகளை யும்  இங்கே - அடையாளம் காண முடிகின்றது!   இந்த சுட ரொளிகள் அத்தனை பேரையும் நாம் ஒரே தட்டில் வைத்து எடை போட்டால் நமக்கு கிடைக்கும் விடை இதுதான்!

அவர்கள் எல்லோரும் - ஒரே இயக்கம் - ஒரே கொள்கை - ஒரே கொடி - ஒரே தலைமை என்று வாழ்ந்தவர்கள்! இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தியாக வீரர்கள், வேறு எந்த இயக்கங்களிலும் கிடைக்க மாட்டார்கள்!

இந்த நூலிலுள்ள நேர்காணல்களிலிருந்து சில அரிய தகவல்கள்:  இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்று, தனது துணைவியார் மரணச் செய்தியை அறிந்தும் பரோலில் கூட செல்ல மறுத்து, தண்டனை முடியும் வரை-  யார் செத்தாலும் இந்த நிலைதான், என அதிரடியாக முடிவெடுத்த மாவீரர் - திருவாரூர். கி. சிவசங்கரன்!

நாகூர் மெயின் ரோட்டிலுள்ள தங்களுக்கு சொந்தமான 1500 சதுர அடி மனையை, சுயமரியாதை நிறுவனத்திற்கு அன்பளிப்பாக, பெரியாரிடமே வழங்கிய, இந்த நூலின் தொகுப்பாசிரியர், கவிஞர் கலி. பூங்குன்றனாரின் மாமனார், செயல் வீரர் - நாகூர் சின்னத்தம்பி!

பம்பாய் திராவிடர் கழகத்தின் தலைவராக 35 ஆண்டுகள் இருந்தவர், 1950 ம் ஆண்டு பம்பாயில் திராவிடர் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தியவர், 1956ல் தந்தை பெரியாரை அழைத்து, திராவிடர் கழக மாநாடு - புத்தர் கொள்கை மாநாடு - ஜாதி ஒழிப்பு மாநாடு என முப்பெரும் மாநாட்டை நடத்திய கொள்கை வீரர் - பம்பாய் ஆர். ஏ. சுப்பையா! 

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழ் அதிகாரி, இந்திய சுதந்திர தினத்தன்று (15.08.1947) தந்தை பெரியார், நாகரசம்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய போது உடனிருந்தவர், 'பார்ப்பன - பனியா கொள்ளையர்களிடம் அதிகாரம் மாற்றப்பட்டுள்ளது' என பெரியார் அன்று பேசியது இன்றும் பொருத்தமாகத் தானே உள்ளது, என வினா எழுப்பிய கழக முன்னோடி - முருகு. சுப்பிரமணியன். 

 மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரமாக, 'மந்திரமா? தந்திரமா? 'நிகழ்ச்சியை, தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் 1000க்கும் அதிகமாக நடத்தி காட்டிய கலைஞர் - பட்டுக்கோட்டை எஸ். பி. செல்வம்!

 96வயது வரை - ஒரே கழகம் - ஒரே தலைமை - ஒரே கொடியின் கீழ் பணியாற்றுவதை விட, வேறு என்ன பெருமை வேண்டும் , என அசையாத, கொள்கை குன்றாக வாழ்ந்தவர் - இராசகிரி. கோ. தங்கராசு!

அறிவியல் துணை கொண்டு, தந்தை பெரியாரின் கருத்துக்களை ஆய்ந்து ஏற்றுக் கொண்டவன், சாகும் வரை கடவுள், மத, ஜாதி மறுப்பாளராகவே வாழ்வது உறுதி என்று தன்னையே எடுத்துக்காட்டாக உற்சாகப்படுத்தியவர் - இராசபாளையம் க. தவமணி!

சுயமரியாதைச் சுடரொளிகள்!

இவர்கள் - திராவிடர் இயக்கத்தை நிறுவச் செய்த அவதாரங்களல்ல!

திராவிட இயக்கத்தின் ஆதாரங்கள்! அஸ்திவாரங்கள்!!

No comments:

Post a Comment