ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மும்மொழிக் கொள்கையைப் பின்பற்று வதில் என்ன தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளாரே?

- கொ.சீதாலெட்சுமி, செங்கோட்டை

பதில்: வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள தலைமை நீதிபதி, தமிழ்நாட்டின் மொழிப் போராட்ட வரலாறு, "திராவிட மாடல்"  ஆட்சியின் லட்சிய சாதனைகள் பலவற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லாததால் இக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடும்.

எம்மொழியையே  இன்னும் சரியாகக் கற்காத சூழ் நிலையில் மும்மொழிச் சுமை - அதுவும் பண்பாட்டுப் படையெடுப்பாக அமையக்கூடாது   என்பதால்தான் அரை நூற்றாண்டு திராவிட  ஆட்சியின் கொள்கை முடிவாக நீடிக்கிறது; திணிப்பது கூடாது; தனியே வேண்டுமானால் எத்தனை மொழிகளும் கற்க அரசு தடை போடவில்லையே!

- - - - -

கேள்வி: எப்படியேனும் மதக் கலவரங்களைத் தூண்ட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தை யின் மரணத்தில் மதமாற்றச் சாயம் பூசுகிறதே பா.ஜ.க. - இவர்களுக்குக் கொஞ்சமும் மனசாட்சி இருக்காதா?

- வி.அறிவழகன், திருக்காட்டுப்பள்ளி

பதில்: காவிகளுக்கு, மனசாட்சியாவது - பொடலங் காயாவது! கோயபெல்சின் குருநாதர்கள்  ஆயிற்றே இவர்கள்; மு.க.ஸ்டாலினின் விடியல் ஆட்சியை எதிர்க்க வேறு சரக்கே கிடைக்கவில்லை என்பதால் இப்படி "சித்து" விளையாடிச் சீரழிகின்றனர் போலும். இது போன்றவற்றால் அவர்கள் கட்சி தேயுமே தவிர வளராது!

- - - - -

கேள்வி: டில்லி குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டு வாகனம் இவ்வாண்டு இடம் பெறாததற்கு முழுப் பொறுப்பு தமிழ்நாடு அரசுதான் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது பச்சைப் பொய்தானே! 

            - ம. சுசிலா, மேட்டுக்குப்பம்.

பதில்: மேலே சொன்ன பதிலே இதற்கும்! "பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட ஆசைப்படும் பொய் ராஜாக்கள்" இவர்கள்!

- - - - -

கேள்வி:.   தமிழின் சிறப்பை, தொன்மையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அய்ந்து பல்கலைக் கழகங் களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது தேனினும் இனிய செய்தி அல்லவா?

            - இராசு. மணி, காட்பாடி.

பதில்: ஆம்! அதிலென்ன அட்டி? பாராட்டப்பட வேண்டிய அரசின் சாதனை இது!

- - - - -

கேள்வி:  தமிழ்நாடு ஆளுநர் தமது குடியரசு நாள் வாழ்த்தில் இந்த நாளுக்குத் தொடர்பே இல்லாத இராமனையும், கம்பனையும் புகழ்ந்து இருக்கிறாரே?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்

பதில்: ஹிந்துத்துவத்தின் ஏஜெண்டாக ஆளுநர் மாறுவது அரசமைப்புச் சட்டத்தின் மீது அவர் எடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் விரோதமானது, மோதல் அரசியலைத் துவக்கிடத் துடிக்கின்றார் போலும்!

- - - - -

கேள்வி:   மாநில அரசுப் பணிகளில் உள்ள அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்தியப் பணிகளில் உள்ள அதிகாரிகளை ஒன்றிய அரசாங்கம்  பணிக்கு எடுத்துக் கொள்ளும் கூடுதல் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், இதற்கு ஓர் சுமூகத் தீர்வு கிட்டுமா?

             - இர. கார்த்தி, மேடவாக்கம்.

பதில்: 9 மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்பு, 8 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு என்பதால் திருத்தங்களைக் கைவிடவேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாத பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இப்படி குறுக்கு வழியில் மாநில ஆட்சிகளை, அதிகாரிகளை அச்சப்படுத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடவே இந்த முயற்சி; இது முறியடிக்கப்பட வேண்டியது முதல் கடமையாகும்! இன்றேல் ஜனநாயகம் பிழைக்காது.

- - - - -

கேள்வி:   9500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வும் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது சமூகநீதிக்கு எதிரான செயல் அல்லவா?

           - சு. சத்தியமூர்த்தி, நாமக்கல்.

பதில்: பள்ளிக்கல்வித் துறை, அண்மையில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்க ஆணையிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தகுதி - திறமை பற்றி கூறியதைப் படித்தால், இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளக்கூடும்!

'தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வு' - என்பதை விளக்கினால் நல்லது.  சமூக நீதிக்கு உலை வைப்பதாக அது அமைந்து விடக்கூடாது!

- - - - -

கேள்வி: சென்னை ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்துநிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஓர் உயர் அதிகாரி விவாதம் செய்திருக்கிறாரே! மாநில அரசு போட்ட ஆணை, அதன் எல்லையில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கும். ஊழியர்களுக்கும் பொருந்தாதா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து நிறுவனங் களுக்கும் பொருந்தக்கூடியது. ஆகவே மாநில அரசின் ஆணை தவறு என்று கருதி மாட்டிக் கொள்ளக்கூடாது.

கேள்வி: டில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் கல்வித்துறை சார்பில் வந்த அலங்கார ஊர்தியில், வேதம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி யதுடன், முழுவதும் புராணங்களில் இடம்பெற்றுள்ள பாத் திரங்களையே விளம்பரப்படுத்தியது எதைக் காட்டுகிறது?

-தமிழ்மைந்தன்,  சைதாப்பேட்டை

பதில்: பச்சை ஹிந்துத்துவா ஆட்சியான ஒன்றிய அரசின் ஆட்சி - அரசமைப்புச் சட்ட மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோதமானது என்பது வெட்டவெளிச்சமா கிறது.

- - - - -

கேள்வி: சமூகநீதிக்கான அகில இந்திய அளவிலான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதன் வீச்சு எந்த அளவில் இருக்கும்?

    - ஏ. பார்வதி, காஞ்சிபுரம்.

பதில்: இந்தியாவில் சமூக நீதி இயக்கம் வேர்பிடித்து, பரந்து விரிந்த ஆலமரமாக வளரும்; ஆதிக்கவாதிகள் அடங்க வேண்டிய நிலையைத்தானே ஏற்படுத்தும்.

'மண்டல் வெற்றி; கமண்டலின் தோல்வி' உறுதியாகும்.

No comments:

Post a Comment