கொல்கத்தா, ஜன.3 மேற்கு வங்காளத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் நாளை முதல் மூடப்படுகின்றன. உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் நாளை முதல் மூடப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும். புறநகர் ரயில்கள் நாளை முதல் 50% பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் முன்னிலையில் மாணவர்களுக்குத் தடுப்பூசி
சென்னை, ஜன.3 பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நாள்களில், அவர்களது பெற்றோரையும் வரவழைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (3.1.2022) முதல் தடுப்பூசி செலுத்தப்படுமென பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த ஆண்டு 2007 அல்லது அதற்கு முன் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பயனாளிகள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் - அல்லது ஏற்கெனவே உள்ள கணக்கு மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது தனிப்பட்ட அலைபேசி எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட தகவலில், தடுப்பூசிகள் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக ஆசிரியர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. தடுப்பூசி போட பள்ளிகளில் போதிய இடவசதியை வழங்கிடுமாறு அனைத்துப் பள்ளி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணாக்கர்களின் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, தடுப்பூசி செலுத்தும் நாளில் அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான சமூக வெறுப்புணர்வு உடனே நிறுத்தப்படவேண்டும்
ராகுல் காந்தி
புதுடில்லி,ஜன.3- டில்லியை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், ‘கீத் ஹப்’ என்ற வலைதளத்தில் தனது ஒளிப்படங்களை ஒரு கும்பல் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும், தன்னை போலவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அந்த வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘பெண்களை அவமானப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக சமூக வெறுப்புணர்வை தூண்டுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒரே குரலாக நின்றால் மட்டுமே இது சாத்தியப்படும். ஆண்டும், சூழலும் மாறிவிட்டன. இப்போது நாம் அனைவரும் கட்டாயம் உரக்க பேச வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment