தந்தை பெரியாரின் சிந்தனை என்பது மானுடப் பார்வை - ‘‘ நான் சொன்னாலும் நம்பாதே - சிந்தித்துப் பார்'' என்றவர் பெரியார்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சென்னை, ஜன. 4 தந்தை பெரியாரின் தத்துவம் எந்தத் தனிப்பட்டவருக்கும் எதிரானதல்ல; தந்தை பெரியாரின் சிந்தனை என்பது மானுடப் பார்வை - நான் சொன்னாலும் நம்பாதே - சிந்தித்துப் பார் என்றவர் பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்கள் நீங்கள்!
இதோ எங்கள் செல்வங்கள் வந்துவிட்டார்கள்; அவர்கள், நாளை நாட்டை வழிநடத்தக் கூடியவர்கள்; இன்று குழந்தைகள் நீங்கள் - இனி இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்கள்.
‘தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்’ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்; அதுபோலப் பார்க்கிறோம்.
5 ஆயிரம் மாணவச் செல்வங்களில், ஏறத்தாழ, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் இருக்கிறீர்களே அதுதான் இன்னமும் சிறப்பு.
முன்பெல்லாம் இந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடையாது, இந்தக் கல்லூரியினுடைய வரலாற்றில். அதற்கென்று இராணி மேரி கல்லூரி என்றெல்லாம் இருக்கும். ஆனால், இப்பொழுது அப்படியல்ல.
பெரியாரை ஏன் நாம் நினைவு கொள்ளவேண்டும் என்று சொன்னால், அது பெரியாருக்காக அல்ல - அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மருந்து சாப்பிடுகிறீர்களே ஏன் என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அருள்கூர்ந்து எண்ணிப்பார்க்கவேண்டும் நீங்கள்.
மருந்தைக் கண்டுபிடித்தவர் மேலே இருந்து பார்த் துக் கொண்டிருப்பார்; அவரைத் திருப்தி செய்வதற்காக என்றா நாம் சொல்வோம்; மாட்டோம்.
அல்லது மருந்து கடைக்காரர் வருந்தக்கூடாது என்ப தற்காக, அவருக்கு வியாபாரம் நடக்கவேண்டும் என்ப தற்காகத்தான் நாம் மருந்து சாப்பிடுகிறோம் என்றா, நாம் பதில் சொல்லுவோம்.
இல்லை, நம்முடைய நோய்க்காக -நம்முடைய வலிக் காக -நம்முடைய உடல்நலத்திற்காக மருந்து சாப்பிடு கிறோம்.
பெரியாரை நாம் பின்பற்றுவது,
பெரியாருக்காக அல்ல - நமக்காக..
அதுபோல ‘‘பெரியாரை நாம் பின்பற்றுவது இருக்கிறதே, பெரியாருக்காக அல்ல - நமக்காக - நம்முடைய தலைமுறைக்காக -நம்முடைய வளர்ச்சிக்காக -நம்முடைய முன்னோருக்காக.''
மருந்து சாப்பிடுகின்ற நேரத்தில்கூட, ஒன்றை நன்றாக நீங்கள் கவனிப்பீர்கள்; நாம் எல்லோருமே கவனிப்போம்.
மருத்துவர், மருந்தை எழுதிக் கொடுக்கிறார். அந்த மருந்தை வாங்கவேண்டும் என்று மருந்து கடைக்கு நாம் செல்கிறோம். உரிய கட்டணத்தைக் கொடுத்தவுடன், மருந்துக் கடைக்காரர் மருந்தை கொடுக்கிறார்; மருந்தை வாங்கிக்கொண்டும் வந்துவிடுகிறோம்.
ஆனால் நண்பர்களே, மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று மருந்தின் பெயரைப் பார்ப்போம். அதற்கடுத்து நாம் என்ன செய்வோம்? இன்னொன்றை மிக முக்கியமாகக் கவனிப்போம். எக்ஸ்பயரி டேட்டைப் பார்ப்போம்.
அவசரமாகவோ, சில பேர் வேண்டுமென்றோ, செலாவணி ஆகாத மருந்தையெல்லாம், இப்பொழுது செலாவணி செய்துகொண்டிருக்கிறார்களே பல பேர் - அதேபோன்று, வேக வேகமாக 10 மருந்துகளைக் கொடுக்கும்பொழுது, காலாவதியான மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால்,
உடனே நாம் என்ன செய்வோம், ‘இல்லீங்க, இது எக்ஸ்பயரி -டேட் முடிந்து போயாயிற்று’ என்று கையில் வாங்கிய மருந்தைக்கூட நாம் திருப்பிக் கொடுக்கிறோம்.
தயவு செய்து எண்ணிப் பாருங்கள், பெரியார் சொன்ன பகுத்தறிவு என்பது,
நம்முடைய நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்தை வாங்கும்பொழுது, காலாவதியாகிவிட்ட மருந்து என்று தேதியைப் பார்த்து நாம் உட்கொள்ளத் தயாராக இல்லையே - மருந்து குறிப்பிட்ட நோய்க்காக, குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிடுவதையே காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பதைக் கவனிக்கிறோமே - காலங்காலமாக நாம் பின்பற்றவேண்டிய கருத்துகள், கொள்கைகள் காலாவதியாகிவிட்டனவா? அல்லது செல்லுமா? அதை ஏற்கக்கூடியதா? என்று யாராவது பார்க்கிறோமா?
இல்லீங்க, நீண்ட காலமாக இருக்கிறது; இதுதான் சனாதனம் என்று சொன்னால் - அது நிரந்தரமானது - மாறாதது என்று சொல்வார்கள்.
மாற்றம் என்பதுதான் மாறாதது
ஆனால், உலகத்தின் முதல் பகுத்தறிவுவாதியாக இருக்கின்ற புத்தர் சொன்னார், அதையே, மிகப்பெரிய அளவிற்கு சமூக விஞ்ஞானியாக இருந்த காரல் மார்க்சும் சொன்னார் -
மாறாதது எது?
மாற்றம் என்பதுதான் மாறாதது என்று.
எனவே, பெரியார் அவர்களுடைய கருத்து என்று சொன்னால், யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை; அஞ்சவேண்டிய அவசியமில்லை; குழம்பவேண்டிய அவசியமில்லை.
தெளிவானது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்!
எந்த மாற்றம் - உன் அறிவை உரைகல் வைத்துப் பார்என்று சொல்வது.
இந்த நாட்டிலே உள்ள மதவாதிகளாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் என்ன சொல்வார்கள்?
நான் சொல்வதை நம்பு என்றுதான் சொல்வார்கள்.
மதங்களை ஏன் தந்தை பெரியார் அவர்கள் எதிர்த் தார் என்று சொல்லும்பொழுது, நம்பு, நம்பியாகவேண்டும்; இல்லாவிட்டால் நரகத்திற்குப் போவாய்; அந்த நரகத்தில் எண்ணெய்க் கொப்பரை இருக்கிறது; நீ நம்பாவிட்டால், அதில் உன்னைப் போட்டு துவைத்து எடுப்பார்கள் என்று அச்சுறுத்தித்தான் நம்ப வைக்கிறார்கள்.
பெரியாரைப் பார்க்காத தலைமுறை நீங்கள்
பெரியாரைப் பார்க்காத தலைமுறை நீங்கள் - ஆனால், பெரியாரை அவருடைய எழுத்துகள்மூலம் பார்க்கலாம்; அவருடைய லட்சியங்கள்மூலம் பார்க்க லாம்.
அவர் பேசாத இடமில்லை; மாணவர்களிடையே உரையாற்றும்பொழுது, கல்லூரிகளிலும், மற்ற இடங் களிலும் பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கு வதற்கு முன் என்ன கூறுவார்?
அறிவு என்பது ஆய்வு செய்வதற்கு,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
ஒரு பொருளை நிர்ணயிக்கவேண்டும் என்றால், எத் தன்மை, எப்பொருள், யார் யார் வாய்க் கேட்பது என்பதுதான் மிக முக்கியமானது.
எதையும் உங்கள் அறிவுகொண்டு சிந்தித்துப் பாருங்கள் என்றார்!
அய்யா அவர்கள் அப்படி சொல்லும்பொழுது, ‘‘எதையும் உங்கள் அறிவுகொண்டு சிந்தித்துப் பாருங்கள்’’ என்றார். நம்பாதே! என்று சொன்னவர்.
பெரியார் ஒருவர்தான் நம்பாதே என்று சொன்னவர். எல்லோரும் நம்புங்கள், நம்புங்கள் என்று சொன்னார்கள்.
இன்னுங்கேட்டால், கடவுள் நம்பிக்கையேகூட, அச்சுறுத்தல் வரும்பொழுது என்ன சொல்வார்கள்? கிராமங்களில் பழமொழியைச் சொல்வார்கள்.
‘‘நம்புகிறவனுக்கு நடராஜா -
நம்பாதவனுக்கு எமராஜா’’ என்றார்கள்.
எமன்கிட்ட எவன் போவான்? எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயப்படுவார்கள் அல்லவா? அப்படி ஒரு கற்பனையை சொன்னாலும்கூட, அச்சுறுத்தல், பயத்தை ஏற்படுத்தினார்கள்.
வன்முறையை விரும்பாத புரட்சியாளர் பெரியார்!
அந்த இடத்தில்தான் நண்பர்களே, பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் - வன்முறையை விரும்பாத புரட்சியாளர் - ஆயுதங்களை எடுத்து ரத்தம் சிந்தாத புரட்சியாளர் - அறிவுப் புரட்சியாளர்.
தந்தை பெரியார் ஒன்றைச் சொன்னார்.
எதையும் எடுத்தவுடன் நம்பாதே என்றார்.
எப்படி நம்புவது? என்று கேட்டார்கள்.
குடியாத்தத்தில் உள்ள அரசினர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்விற்கு நாங்களெல்லாம் பெரியாரோடு சென்றிருந்தோம்.
கூட்டத்தில் பெரியார் உரையாற்றும்பொழுது, ஒவ் வொரு கூட்டத்திலும் பெரியார் முதலில் இதைச் சொல்வார்.
‘‘நான் சொல்கிறேன் என்பதற்காக அதை நீங்கள் நம்பாதீர்கள்; என்னுடைய கருத்தை, என் மனதிற்குத் தோன்றியதை உங்களிடம் சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஒன்றரை மணிநேரம் உரையாற்றிவிட்டு, கடைசியாக என்ன சொல்வார் என்றால்,
‘‘நான் இவ்வளவு நேரம் சொன்னதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்; அதை நீங்கள் நம்பவேண்டாம்; உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி யோசனை செய்யுங்கள்; சிந்தித்துப் பாருங்கள், சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லையென்றால், விட்டுவிடுங்கள்’’ என்று எளிமையாகச் சொல்வார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
இப்படி தாராளச் சிந்தனையாளராக இருந்தவர் - லிபரல் திங்கர்: ப்ரி திங்கர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு தலைவர் - சுய சிந்தனையாளர்- அதனால்தான் மண்டைச் சுரப்பை உலகு தொழுகின்றது.
இங்கே உரையாற்றும்பொழுது அழகாக சொன்னார் நம்முடைய முதல்வர் அவர்கள்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் நான்கே வரியில் சொன்னார், பெரியாரைப் பார்க்காத உங்களுக்கு - பெரியாரைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
தொண்டு செய்து பழுத்த பழம் - தூய
தாடி மார்பில் விழும்- மண்டை சுரப்பை
உலகு தொழும் - மனக்குகையில்
சிறுத்தை எழும் - அவர்தாம்
பெரியார் பார்!
என்று மிகத் தெளிவாக - ஆழமாக எடுத்துச் சொன்னார்கள்.
மனக்குகையில் சிறுத்தை எழும் -
சாதாரண சிறுத்தையல்ல - மனக்குகையில் இருந்து அவருடைய கருத்துகள் சிறுத்தையைப் போன்று பாய்ந்து வரும். அப்படி கருத்துகளை சொல்லிவிட்டு, நம்பாதீர்கள் என்று சொன்னார் பெரியார்.
முதல் வரிசையில் இருந்த மாணவர் எழுந்து நின்றார்,
பெரியார் கேள்விகளைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவார். அவரைப் போன்று கேள்வி களுக்குப் பதில் சொன்ன தலைவர் வேறு யாரும் கிடையாது. அதிகமான கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன தலைவர் பெரியார் அவர்கள்; ஆனால், பெரியார் அவர்கள் கேட்ட கேள்விக்கு எவரும் பதில் சொல்லவில்லை.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த மாணவர் எழுந்து, ‘‘நம்பாதீர்கள் என்று சொன் னீர்களே, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண் டாமா?’’ என்று கேட்டார்.
மாணவர்களுக்குத்தான் எப்பொழுதும் துணிச் சல் அதிகம்; மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் கணக்குப் போட்டு யோசித்துத்தான் கேட்பார்கள்.
நான் சொல்வதையும் நம்பாதே!
உடனே பெரியார் சொன்னார், ‘‘நான் சொல்வதையும் நம்பாதே’’ என்று சொல்லி, கொஞ்சம் இடைவெளிவிட்டு, ‘‘உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு நம்பு; யார் சொல்வதையும் நம்பாதே!’’ என்றார்.
ஆய்ந்து பார்த்து, சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
இந்தப் பணி சாதாரண பணியல்ல - அதுதான் பெரியாருடைய சிறப்பாகும்.
நம்முடைய வளர்ச்சி என்பது அறிவியல் - இதோ நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேனே - ஒலிபெருக்கி அறிவியல் வளர்ச்சியால்தான் உண்டானது.
இப்பொழுது நம்மையெல்லாம் அச்சுறுத்திக் கொண் டிருக்கும் வைரஸ் ஒமைக்ரான் - கொடுந்தொற்றிலேயே பல வகைகளில் வருகிறது.
எப்படி ஜாதி நோயில் பல வகையான ஜாதி நோய் இருக்கிறதோ - ஒரு ஜாதி, இன்னொரு ஜாதியைத் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிற்கு விஷமமாக இருக்கிறதோ - அதுபோன்று, நோய்கள் எப்பொழுதுமே பல வகைகளில் இருக்கும். ஜாதியும் - நோயும் ஒன்றுதான் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
பிறப்பொக்கும் என்று சொல்லுவதற்கு அடிப்படையே பிறவியினால் பேதம் இருக்கக்கூடாது என்பதுதான்.
எந்த மனிதருக்கும் எதிரானதல்ல!
பெரியாருடைய தத்துவங்கள் தனி மனிதர்களுக்காக அல்ல - திராவிடர் கழகம் - திராவிடம் - திராவிடக் கலாச்சாரம் - திராவிடப் பண்பாடு என்பது எந்த மனிதருக்கும் எதிரானதல்ல.
சமூகநீதிக்கே அவர் சொன்ன தத்துவம் -
அனைவருக்கும் அனைத்தும் -
யாருக்கும் வாய்ப்பு மறுக்கக்கூடாது -
ஒருவர், இன்னொருவருடைய வாய்ப்பைப் பறிக்கக் கூடாது. அதுதான் முக்கியம். போராட்டமே அங்கேதான் இருக்கிறதே தவிர, வேறு கிடையாது.
பெரியாருடைய சிந்தனை - மானிடப் பார்வை!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான மனிதத்தைத் சொல்லும்பொழுது, பெரியாருடைய சிந்தனையே - மானிடப் பார்வைதான்.
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கிடையாது -
சிந்தனைக்கு எல்லைக் கோடு கிடையாது -
சுயமரியாதை எந்தத் தலைவருக்கோ அல்லது எந்தக் கட்சிக்கோ சொந்தமானதல்ல.
மனித குலத்திற்கே சொந்தமானது -
மனிதன் என்று சொன்னால், அவன் சுயமரியாதை யோடு இருக்கவேண்டியவன்.
தன்னை அவமரியாதை செய்துகொள்ளக்கூடியவன் அல்ல
எந்த மொழியிலும் சுயமரியாதை உண்டு.
பெரியார் இயக்கத்தினுடைய தனிச் சிறப்பு என்ன வென்று சொன்னால் நண்பர்களே, உலகத்தில் எந்த ஒரு இயக்கமாவது, மனிதர்களை மய்யப்படுத்தி இருக்கிறதா?
ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டவர்
தலைப்பிலேயே - பெரியாருடைய தனிச் சிறப்பு - பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் - ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டவர்.
பெரியாருக்குப் பெரிய துணையாளர்கள் யார்?
கல்லூரிக்குப் போகவில்லை - பாடங்களைப் படிக்கவில்லை பெரியார் என்று சொல்கிறார்களே, பிறகு யார் அவருக்குத் துணையாளர்கள்? எங்களைப் போன்றவர்கள் உதவியாளர்களாகத்தான் இருந்தோம்.
அய்ந்து பேர் - அய்ந்து கருவிகள்
பிறகு பெரியாருக்குத் துணையாளர்கள் யார் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, அய்ந்து பேர் - அய்ந்து கருவிகள் - போர்க்கருவிகளைப் போல.
அந்தக் கருவிகள் பெரியாருக்கு மட்டுமல்ல - உங்களுக்கும் பொருந்தும் - எனக்கும் பொருந்தும் - எல்லோருக்கும் பொருந்தும். அதில் ஜாதியில்லை- மதமில்லை - இனமில்லை - நாடு இல்லை.
பெரியார் சொன்னார், எனக்கு எதிலும் நம்பிக்கையில்லை - நான் எந்தப் பற்றும் உள்ளவன் அல்ல - எனக்குப் பற்று எது தெரியுமா? மானுடப் பற்றுதான்.
அந்த மானுடப் பற்றை சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியாருடைய பரந்துபட்ட அறிவு - மிகப்பெரிய அளவிற்கு மானுடத்தைத் தழுவிய ஒரு மானுடத் தன்மை.
அவர் சொல்லும்பொழுது,
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’
மனிதர்க்கு - இந்த மனிதருக்கு, அந்த மனிதருக்கு என்று அல்ல.
நம்மாட்கள் அழகுப் போட்டி நடத்துகிறார்கள் -
பெரியாருடைய பார்வையில் அழகு என்பதற்கு விளக்கத்தைப் பாருங்கள் -
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’
(தொடரும்)
No comments:
Post a Comment