தமிழ்நாடு முழுவதும் 100 சித்த மருத்துவ சிகிச்சை மய்யங்கள் தொடங்கப்படும்!
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
சென்னை, ஜன.4 கரோனா மூன்றாவது அலை தற்பொழுது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை பெரியார் திடலில் முதன் முதலாக சித்த மருத்துவ சிகிச்சை மய்யம் திறக்கப் பட்டது; இதோடு தமிழ்நாடு முழுவதும் 100 சித்த மருத்துவ சிகிச்சை மய்யங்கள் தொடங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்.
இன்று (4.1.2022) காலை சென்னை பெரியார் திடலில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மருத்துவ
மனை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
உலகம் முழுவதிலும் கரோனா தொற்றின் தாக்கப் பேரிடர் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் நாள் தோறும் கரோனா தொற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் உயர்ந்துகொண்டே போகிறது.
நேற்றைக்கு சற்றொப்ப 1,600 அளவில் தொற்று இருந்த நிலையில், சென்னையில் மட்டும் 800-க் கும் மேற்பட்ட கரோனா தொற்று ஏற்பட்டு, பெரிய அளவிலான அந்தப் பாதிப்பு என்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
650 நோயாளிகள் நலம் பெற்று இல்லம் திரும்பினார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இரண்டாவது அலையின்போது, சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவத் துறையின் சார்பில், 79 இடங்களில் கோவிட் சிகிச்சை மய்யங்கள் அமைக்கப் பட்டன.
அதில் 7,449 படுக்கை வசதிகள் கொண்ட அந்த சிகிச்சை மய்யங்களின்மூலம், 28,808 பேர் முழுவது மாகக் குணமடைந்து இல்லம் திரும்பினார்கள்.
அந்த அலையின்போது, பெரியார் திடலில், பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டின்படி, இங்கு சிகிச்சை மய்யம் ஒன்று நிறுவப்பட்டது. அந்த சிகிச்சை மய்யத்தில் 650 நோயாளிகள் நலம் பெற்று இல்லம் திரும்பினார்கள்.
ஆசிரியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது
அந்த வகையில், இப்பொழுது மீண்டும் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், பெரியார் திடலில், முதல் சித்த கோவிட் மய்யம் ஒன்று இப்பொழுது ஆசிரியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
41 படுக்கைகள் கொண்ட இந்த சிறப்பு சிகிச்சை மய்யத்தில், சித்த மருத்துவத்தின்மூலம் சிகிச்சை அளிக் கப்படவிருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த அலையின்போது 650 பேர் நலம்பெற்று இருக்கிறார்கள். இந்த அலையில், இப்பொழுது முதல் சிகிச்சை மய்யமாக இது திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் ஏராள மானவர்கள் குணமடைவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.
நேற்றைக்குக்கூட சுகாதாரத் துறையின் சார்பில், துறையின் செயலாளர் ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சிகிச்சை முறைகள் சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி....
ஒமைக்ரான் தொற்றுப் பரவலுக்கு எப்படிப்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது - பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்றைக்கு வெளி யிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், யாருக்காவது ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் இல்லங்களிலேயே, எல்லோருக்குமே அதிகபட்சமாக அது ஏ-சிம்டமிக் என்கின்ற அளவிலான பாதிப்பைத் தான் தருகிறது. எனவே, அவர்கள் இல்லங்களிலேயே இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வீடுகளிலேயே இருப்பது நல்லது
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு, எந்தவிதமான அறிகுறியும் இல்லாதவர்கள், இல்லங்க ளில் இருப்பது ஒன்றுதான் சரியான ஒன்றாக இருக்கும். அவர்களும் மருத்துவமனைகளை நோக்கி வருகிற பொழுது, ஏற்கெனவே டெல்டா வைராசால் பாதிக்கப் பட்டவர்களும் அங்கே இருக்கும்பட்சத்தில், நோயின் தன்மை கூடுதலாகும் என்பதால், ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்கள் குறிப்பாக இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வீடுகளிலேயே இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஒரு அய்ந்து நாள்களுக்குப் பிறகு, 24 மணிநேரத்தில், இரண்டு முறை ஸ்வாப் பரிசோதனை செய்து, இரண்டு முறையும் நெகட்டிவ் என்று வந்துவிட்டால், அவர்கள் வெளியில் நடமாடுவதற்குக்கூட தடையில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இன்றைக்கு உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் கூடுதலாக இருந்தாலும், வழிகாட்டு முறைகள் என்பது ஒரே முறையாக இன்றைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை, முதல் நிலையில், ஏ - சிம்டமிக் என்று தெரிந்து கொள்வதற்குரிய ஸ்கீரினிங் சென்டர்சை 22 இடங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் கடந்த இரண்டு நாள் களாகத் அதனைத் திறந்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள்.
அந்த ஸ்கீரினிங் சென்டர்ஸ் எங்கெங்கே இருக் கின்றன என்ற பட்டியல் பத்திரிகையாளர்களுக்கு, செய்திமூலமாக அறிவிக்கப்பட இருக்கின்றது.
பொதுமக்கள் அங்கே சென்று, பரிசோதனை செய்துகொண்டு வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
15 மண்டலங்களில், 15 மருத்துவக் குழுக்கள்!
இவர்களைக் கண்காணிப்பதற்கு மண்டலத்திற்கு ஒரு மருத்துவர் குழு அறை ஒன்று திறக்கப்படவிருக்கிறது. 15 மண்டலங்களில், 15 மருத்துவக் குழுக்கள் மண்டல வாரியாக இருந்து, தொற்று ஏற்பட்ட ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு, அவருடைய நோய்த் தன்மை குறித்து, அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற சிகிச்சை முறைகள் குறித்து தொலைப்பேசியில் தெரிந்துகொள்ள விருக்கிறார்கள்.
இதோடு மட்டுமல்லாமல், இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில், மருத்துவத் துறையின் சார்பில், பல்சாக்சிக் மீட்டர் தந்து, அவர்களை அவர்களுடைய வீடுகளிலேயே கண் காணிக்கின்ற விர்ச்சுவல் மானிட்டரிங் என்கின்ற வகை யில், மருத்துவர்களைக் கொண்டு செய்யப்படவிருக்கிறது. அது இன்னும் ஓரிரு நாள்களில், சென்னையில் கூடு தலான பாதிப்பு இருக்கின்ற பகுதிகளில் தொடங்கி வைக் கப்படவிருக்கிறது.
முதலமைச்சரே நேரிடையாகத் தொடங்கி வைத்தது தமிழ்நாட்டில் மட்டும்தான்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றைக்கு 15 வயது முதல் 17 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் இந்தப் பணிகள் தொடங்கினாலும், முதலமைச்சர் அவர்களே நேரிடையாக வந்து இந்தப் பணியைத் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.
அந்த வகையில் தொடங்கிய நாளே, 33 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டிய அவசியத்தில், முதல் நாளே 10 சதவிகிதம் அளவிற்கு அது நேற்றைக்கு நிறைவேறி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதிலும் 40 லட்சம் பேருக்கு நேற்றைக்குப் போடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் மட்டுமே 3 லட்சத்து 35 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன.
எனவே, குழந்தைகள் தொடங்கி குடுகுடு கிழவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டாமல் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக இருந்து கொண்டிருக்கிறது.
அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டுக்கான ஒரு தற்காலிக அமைப்பு
செய்தியாளர்: அம்மா மினி கிளினிக்குகளை மூடச் சொல்லி சொல்லியிருக்கிறீர்கள். அதில் பணி செய்த மருத்துவர்களுக்குப் வேறு பணிகளை ஒதுக்கியிருக்கிறீர்களா?
அமைச்சர்: ஏற்கெனவே இது சம்பந்தமாக நிறைய முறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அந்த கிளினிக்குகள் தொடங்கப்படும்பொழுதே, ஓராண்டுக்கான ஒரு தற்காலிக அமைப்பு என்றுதான் அந்தக் கிளினிக்குகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
தொடங்குகிறபொழுதே, 1820 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எந்த கிளினிக்கிலும் செவிலியர்கள்கூட நியமிக்கப்படவில்லை. அது தொடங்கப்பட்டது ஏதாவது ஒரு தற்காலிக கட்ட டத்தில் அல்லது பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தில்கூட பெயிண்ட் அடித்து, ஒரு பலகையை வைத்து, தற்காலிக மருத்துவமனைகளைத் திறந்து வைத்தார்கள்.
அந்த மருத்துவர்களையெல்லாம் இரண்டாவது கரோனா அலைக்குப் பயன்படுத்திக் கொண்டோம். இப்பொழுதும்கூட, மார்ச் 31 ஆம் தேதிவரை பணி நீடிப்பு செய்து, கரோனா தடுப்புப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
விர்ச்சுவல் மானிட்டரிங் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது
செய்தியாளர்: சென்னை மாநகராட்சியைப் பொறுத்த வரையில் கரோனா தொற்று எந்தெந்த மண்டலங்களில் அதிகமாக இருக்கிறது; அதேபோல, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருக் கிறதே, அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
அமைச்சர்: சென்னையில்தான் கூடுதலாக நேற்றைக்கு 800, நேற்றுமுன்தினம் 600 - இன்றைக்கு அதைவிட கூடுதலாக ஆகின்ற நிலை என்பது இருந்துகொண்டிருக்கின்றது.
குறிப்பாக, 15 மண்டலங்களில் கரோனா தொற்றின் தாக்கம் பெருகிக் கொண்டிருக்கின்றது. 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று கூடுதலாகிக் கொண்டே வருகின்றன.
இதைக் கண்காணிப்பதற்கும், நோய்த் தடுப்பு வளை யங்கள் ஏற்படுத்துவதற்குமான பல்வேறு நடவடிக்கை களை மாநகராட்சியின் சார்பில் செய்யப்பட்டு வரு கின்றன.
அதுமட்டுமல்ல, நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, அடர்த்தியாக எங்கேயெல்லாம் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை வீடுகளிலேயே தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான பல்சாசிக் மீட்டரைத் தந்து, அவர்களுடைய ஆக்சிஜன் அளவை மருத்துவர்கள்மூலம் விர்ச்சுவல் மானிட்டரிங் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. ஓரிரு நாள்களில் அந்தப் பணி சென்னையில் தொடங்கப்படவிருக்கின்றன.
இதன்மூலம் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பகுதியாக மருத்துவமனைகளை நோக்கி வர வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள்.
சென்னையைப் பொருத்தவரையில், மருத்துவர் களின் ஆலோசனை என்பது இன்றைக்குத் தொடங்கப் பட்டு இருக்கிறது. 15 மண்டலங்களிலும், 15 மருத்துவக் குழுக்கள் - மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்ற பணிகள் இன்றைக்குத் தொடங்கப்பட்டு இருக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு துறையின் செயலாளர்மூலம் அறிவுறுத்தப்படும்
செய்தியாளர்: செங்கல்பட்டு, கோயம்பத்தூரில்....?
அமைச்சர்: செங்கல்பட்டிலும் தொடர்ச்சியாக அங்கேயும் செய்யப்படும். இப்பொழுது சென்னையிலும், செங்கல்பட்டிலும்தான் தொற்று கூடுதலாக இருக்கிறது. கோவையில் நேற்றைக்கு 100 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இன்றைக்கு அது ஒரு 5 அல்லது 10 என்ற அளவில்தான் கூடுதலாக இருக்குமே தவிர, கோவையிலும் ஓரளவிற்கு இப்பொழுதுவரை கட்டுப்பாட்டில் இருக்கிறது; என்றாலும்கூட, நீங்கள் சொன்னதைப்போல, சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் கோவை என்பதால், அங்கேயும் இதுபோன்ற நடைமுறைகளை ஏற்படுத்தச் சொல்லி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு துறையின் செயலாளர்மூலம் அறிவுறுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 100 சித்த மருத்துவ சிகிச்சை மய்யங்கள் தோற்றுவிக்கப்படும்
செய்தியாளர்: சித்த மருத்துவமனையை இப்பொழுது தொடங்கி வைத்திருக்கிறீர்கள்; இந்த மருத்துவமனைகள் மூலமாக மீண்டும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா?
அமைச்சர்: கண்டிப்பாக, ஏற்கெனவே கடந்த அலை யின்போது, 79 இடங்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. மூன்றாவது அலையின்போது முதல் சித்த மருத்துவ சிகிச்சை மய்யம் இப்பொழுது இங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
பெரியார் திடலில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மய்யம், நிச்சயமாக 100 என்கின்ற அளவிலாவது தமிழ்நாடு முழுவதும் தோற்றுவிக்கப்படும்.
அம்மா கிளீனிக்குகளில் யாருக்கும் சிகிச்சை கொடுக்கப்படவில்லை
செய்தியாளர்: அம்மா கிளினீக்கில் இதுவரை எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள்? இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
அமைச்சர்: அம்மா கிளினீக்கில் சிகிச்சையே யாரும் பெறவில்லை. அம்மா கிளீனிக்குகளைத் திறந்தார்களே தவிர, யாருக்கும் சிகிச்சை கொடுக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக, அம்மா கிளீனிக்பற்றி அவர்கள் அறிக்கை விடுகின்றபொழுது சம்பந்தப்பட்டவர்களிடமே கேள்வியாகக் கேட்டேன்.
நாங்கள் சொல்கிறோம், மக்களைத் தேடி மருத்துவத் தின்மூலம் 43 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின்மூலம் 4,500 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்று சொல்கிறோம்.
அதுபோல, அம்மா கிளினீக் திறந்து 6 மாதமாக வைத்திருந்தீர்களே, அதன்மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள் என்கின்ற பட்டியலைக் கொடுங்கள் என்று கேட்டோம்; இதுவரை அவர்கள் கொடுக்க வில்லை.
அம்மா கிளினீக்குகளைத் திறந்தார்களே தவிர, பெயர்ப் பலகைகள் இருந்ததே தவிர, அது பயன்பாட்டில் இருந்ததா என்பதுதான் கேள்வி.
அதில் பணி செய்த மருத்துவர்களை, திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கரோனா தடுப்புப் பணிக்காக அவர்களைப் பணியமர்த் தினார்கள். இப்பொழுது அனைத்து மருத்துவர்களும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
1,820 மருத்துவர்களையும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறோம்
செய்தியாளர்: இப்பொழுது அம்மா கிளினீக்குகள் செயல்படுவதற்கான அவசியம் இல்லையா?
அமைச்சர்: அம்மா கிளினீக்குள் என்பது முடிந்து போய்விட்டது. அது ஒரு தற்காலிக அமைப்பு. ஒரு வருடத்திற்கென்று அமைக்கப்பட்டது. தற்காலிக பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுக் கிறார்கள் அல்லவா - அதுபோன்று ஒரு தற்காலிக அமைப்புதான் அம்மா கிளினீக். அதில் பணியாற்றிய மருத்துவர்களை மட்டும், மனிதாபிமான அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக - ஒருவரையும் பணியிடை நீக்கம் செய்யாமல், 1,820 மருத்துவர்களையும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறோம். மார்ச் 31 ஆம் தேதி வரை அவர்களுக்குக் கால அவகாசம் இருக்கிறது.
அதற்குப் பிறகும், இப்பொழுது எப்படி செவிலியர்களுக்கும், சுகாதார ஆய்வாளர்களுக்கும் மெரிட் மதிப்பெண்கள் 20 கொடுக்கப்பட்டு, அவர்களை யெல்லாம் இப்பொழுது பணியில் அமர்த்திக் கொள்வ தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதோ - அதேபோல, இந்த 1820 மருத்துவர்களையும், எதிர் காலத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக்குப் பயன் படுத்திக் கொள்வதற்கான திட்டங்கள் இருக்கின்றன.
தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் செய்கிறோம்!
செய்தியாளர்: கரோனா இரண்டாம் அலையில், தற்காலிக மருத்துவர்களை நியமித்திருந்தீர்கள்; அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், அவர்களுக்கு 26 ரூபாய்தான் ஊதியமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்களே?
அமைச்சர்: மருத்துவர்களுக்கான ஊதியம் என்பது என்.எச்.எம். என்று சொல்லப்படுகின்ற தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அந்தக் குழுமம் என்ன சொல்கிறதோ, அதன்படிதான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும்தான் என்.எச்.எம்.மில் பணியாற்றியவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பாக 30 சதவிகித அளவிற்குக் கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடைய நடவடிக்கைகளில் ஒன்றுதான்.
நேற்று இந்தியா முழுவதும் போடப்பட்டு தடுப் பூசிகளில் 10 சதவிகிதம் தமிழ்நாட்டில் மட்டும் போடப்பட்டு இருக்கிறது!
செய்தியாளர்: பள்ளிகளில் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன; ஆனால், பல பள்ளிகளில் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறது; இது மருந்து பற்றாக்குறையினால் காரணமா?
அமைச்சர்: நேற்றைக்குத்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்று 10 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
40 லட்சம் தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் போடப்பட்டு இருக்கின்றன. அதில் மூன்றரை லட்சம் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டில் மட்டும் போட்டு இருக்கிறோம். இந்தியாவில் போட்ட மொத்தத் தடுப்பூசிகளில், 10 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் போடப்பட்டு இருக்கின்றன. எல்லா பள்ளிகளிலும் தடுப்பூசிகள் போடப்படும்.
27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில்...
செய்தியாளர்: கோவாக்சின்தான் போடப்படுகிறது; இப்பொழுது எவ்வளவு தடுப்பூசிகள் இருக்கின்றன?
அமைச்சர்: 27 லட்சம் தடுப்பூசிகள் இருக்கின்றன. மொத்தம் 33 லட்சத்து 46 பேருக்குத் தடுப்பூசிகள் போடவேண்டும்; 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கின்றன. இதைப் போட்டு முடிப்பதற்குள், போதுமான தடுப்பூசிகளைக் கேட்டு வாங்கிவிடுவோம், கவலைப்படாதீர்கள்.
- இவ்வாறு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment