மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை, ஜன.28 மருத்துவப் படிப்பு களுக்கான கலந்தாய்வு நேற்று (27.1.2022) தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு நடந்தது.

மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு "நீட்" தேர்வு தாமதமாக தொடங்கியதாலும்,  நீதிமன்றத்தில் இருந்த வழக்கு காரணமாகவும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ஆம்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு நேற்று (27.1.2022) முதல் தொடங்கி இருக்கிறது. முதல் நாளான நேற்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்புப் பிரிவில், மாற்றுத் திறனாளிகள், விளை யாட்டுப்பிரிவு மாணவர்கள், மேனாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கலந் தாய்வு நடந்தது.

சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு

இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் அரசு கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 319 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,503 ஆகியவை சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 822 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 மருத்துவம், 9  பல் மருத்துவம் என மொத்தம் 221 இடங்களுக்கு 76 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 52 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டனர். மேலும் 3 பேரின் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறது.

விளையாட்டுப் பிரிவில் 7 மருத்துவம், 1  பல் மருத்துவம் என மொத்தம் 8 இடங் களுக்கு 152 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 பேர் அழைக்கப்பட்டனர். மேனாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் 10 மருத்துவம், 1 பல் மருத்துவம். இடங்கள் என மொத்தம் 11 இடங்களுக்கு 360 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 19 பேர் அழைக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று 88 மாணவர்கள் கலந் தாய்வில் கலந்து கொண்டனர். அவர் களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 54 இடங்களும், விளையாட்டுபிரிவில் இருந்த 8 இடங்களும், மேனாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் இருந்த 11 இடங்களும் நிரப்பப்பட்டன.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு

இதனைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக் கிழமை) நடைபெற உள்ளது. மொத்தம் 1,806 பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று 1 முதல் 719 தரவரிசையில் உள்ளவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த மருத்துவ மாணவர் சேர்க்கை குழு திட்டமிட்டு இருக்கிறது.

மருத்துவ ப் படிப்பில் முதல் முறையாக பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற இருக்கிறது. வருகிற 30ஆம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கும் இந்த கலந்தாய்வுகுறித்த விவரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்படும். மேலும் அந்த கலந்தாய்வு குறித்த காட்சிப்பதிவை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது. அதன் படி முதலில் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும். அதன் பின்னர் கல்லூரி களை அவர்கள் தேர்வு செய்ய முடியும். 11, 12ஆம்தேதிகளில் இதற்கான இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை

சான்றிதழில் எந்த குளறுபடியும், முறைகேடும் நடந்துவிடாமல் தடுப் பதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு மாணவர்கள் செல்லும்போது, அனைத்து சான்றிதழ்கள், ஆவணங்களை தரவாக பரிசோதிக்க அதிகாரிகள் இருப்பார்கள்.  அவர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

எனவே எந்த முறைகேடும் நடக்காது என்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மருத்துவர் வசந்தாமணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment