களத்தில் நிற்கும் களப் போராளி என்பதே பெருமை!
உங்களுடைய நம்பிக்கையை நான் நியாயப்படுத்துவேன் - அதற்காக இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் உழைப்பேன்
உலக திராவிடர் மகளிர் மாநாட்டு நிறைவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை
சென்னை, ஜன.28 எத்தனை பட்டங்களைப் பெற்றோம்; எத்தனைப் பல்கலைக்கழகங்களில் முதுமுனைவர் பட்டம் பெற்றோம் என்பது முக்கியமல்ல. களத்தில் நிற்கும் களப் போராளி என்பதே பெருமை! உங்களுடைய நம்பிக்கையை நான் நியாயப்படுத்துவேன் - அதற்காக இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் உழைப்பேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 12.12.2021 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிமுதல் 12.05 மணிவரை அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு காணொலிமூலம் நடத்திய உலக திராவிடர் மகளிர் மாநாட்டு நிறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
இந்த மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள பேரன்புமிக்க டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற தோழர்கள், மகளிர் தோழர்கள், ஏராளமான வாழ்த்துகளை இங்கே சொன்னார்கள்.
பெயரப் பிள்ளைகளிலிருந்து, தாய்மார்கள் உள்பட...
அவர்கள் வாழ்த்துகளை இருமொழிகளிலும் சொன்னபொழுது, நான் மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் - வாழ்த்தைக் கேட்டு அல்ல. ஆனால், வாழ்த்தக் கூடிய அளவிற்கு, அவர்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு, சிறப்பாக உரையாற்றக் கூடிய அளவிற்கு, ஆங்கிலமானாலும், தமிழ் மொழியானாலும், வயது இடைவெளி இல்லாமல், பேரப் பிள்ளைகளிலிருந்து, தாய்மார்கள் உள்பட எல்லோரும் சிறப்பாக இங்கே உரையாற்றினார்கள்!
பெரியாரின் பெருவெற்றி!
அடங்கிப் போன ஒரு சமுதாயத்தை
அடங்க மறு என்று சொல்லி,
முடங்கிப் போகமாட்டோம் நாங்கள் என்பதற்காக மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதுதான் பெரியாரின் பெருவெற்றி! இந்த வெற்றிக் களத்தில் நாம் நிற்கிறோம் என்பது, அதுவே முதலில் நல்ல தூண்டுதல்.
வேண்டுதல் தேவையில்லை - தூண்டுதல்தான் இப்பொழுது தேவை
எனவே, வேண்டுதல் தேவையில்லை - தூண்டுதல் தான் இப்பொழுது தேவை என்று சொல்லக் கூடிய அளவிற்கு நீங்கள் ஒத்துழைத்திருக்கிறீர்கள்.
அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவையில்லை. ஏராளமான உணர்வுகளோடு நீங்கள் கூடியிருக்கிறீர்கள். காலம் வேகமாக ஓடிக்கொண் டிருக்கிறது.
அந்த வகையிலே, அருமைத் தோழர்களே, ஒரு முறை நான் சென்னை வானொலியில் பேசி முடித்தேன், பெண்ணுரிமையைப்பற்றி. அந்த வானொலி இயக்குநர், ஒரு அய்யம் கேட்கவேண்டும் உங்களிடத்தில் என்றார்.
‘கேளுங்கள்’ என்றேன்.
பெரியார், பெண் விடுதலைக்கு ஆண்களை நம்பக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே - பெரியாரும் ஒரு ஆண்தானே! இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார்.
நல்ல கேள்விதான், மிக ஆழமான கேள்வியும்கூட என்று சொல்லிவிட்டு,
இதிலொன்றும் அதிசயம் இல்லை. பெரியார் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல், பாலின வேற்றுமைகளையெல்லாம் தாண்டி, மனித விஞ்ஞானத்தை, மனித அறிவியல் அடிப்படையில், ஒரு மனிதர் என்ற அளவிலே மட்டும் தன்னை உயர்த்திக் கொண்டு பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே, அவர் ஒரு தத்துவ ஞானியாக, விஞ்ஞானியாக இருக்கின்ற காரணத்தினால்தான், அவர் விருப்பு வெறுப்பற்ற நிலை யில், அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொன்னார்கள்.
ஆண் தோழர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்!
நாமெல்லாம் அந்த வகையில், அருமைத் தோழர் களே, கேட்டுக்கொண்டிருக்கின்ற ஆண் தோழர்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்; மகளிரை முன்னிலைப்படுத்துங்கள்.
மதம் அதனுடைய கொடுங்கரங்களை இன்றைக்கு உலகம் முழுவதும் விரித்திருக்கின்றது அந்த மூட நம்பிக்கைகளுக்கு யார் காரணம் - மகளிர்தான் காரணம் என்று ஆண்கள் பழிபோடுவார்கள்.
ஆகவேதான், இதுபோன்ற கருத்துகளை முறியடிப் பதற்கு, மகளிருக்கு வாய்ப்புக் கொடுங்கள்; மகளிரே முன்னால் வாருங்கள். இளைய தலைமுறை நன்றாக வந்திருக்கிறது. இன்னும் அது வலிமை பெறவேண்டும். அதற்கு வாய்ப்பளிக்கவேண்டும்.
எனவேதான், இயக்கத் தோழர்கள், கொள்கை உறவுகள் - நீங்கள் இன்னமும் நம்மை அறியாமல், சிக்கி யுள்ள ஆண் ஆதிக்க சிந்தனைகளிலிருந்து விடுபட வேண்டும்.
நிகழ்ச்சிகளில் நிச்சயமாக மகளிர், எப்படி மதவாதிகள், மதவிழாக்களில் அல்லது கோவில்களில், சர்ச்சுகளில், மற்ற இடங்களுக்குப் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் போவதன்மூலமாகத்தான் அதனை வாழ வைக்கிறார்கள்.
ஆண்களும் சுலபமாக, நாங்கள் என்ன செய்வது, பெண்கள் விரும்புகிறார்கள் என்று மூடநம்பிக்கைக்குப் பழிபோடுகிறார்கள்.
நம்மிடத்தில் திருத்தவேண்டியவர்களையும்,
நாம் திருத்தவேண்டும்
அதற்குப் பெண்களும் இடந்தராமல், ஆண் களும் அவர்கள்மீது பழி சொல்லக்கூடாது.
அவர்களைப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து, பகுத்தறிவு நிகழ்ச்சிகளில் களத்தைக் காணுவது என்று சொல்லும்பொழுது, போராளியாக இருக்கின்றவர், எதிரியை மட்டுமல்ல - நம்மிடத்தில் திருத்தவேண்டியவர்களையும், நாம் திருத்தவேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது, வாய்ப்புக் கொடுங்கள், அவ்வளவுதான்.
மருந்து இதோ இருக்கிறது என்று காட்டுங்கள்; அந்த மருந்தை ஊட்டுங்கள். அதன்மூலமாக அந்த வாய்ப்பைக் கொடுங்கள்.
எப்படி இந்த நிகழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று இருக்கிறீர்கள். இதுதான் எனக்கு மகிழ்ச்சி.
மகளிருக்கு முன்னுரிமை கொடுங்கள்
காலத்தைத் தாண்டி, கடிகாரம் ஓடுமுன் ஓடு என்று நீங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருப்பதுபோல, பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும், முற்போக்குச் சிந்தனையுள்ள எந்த அமைப்பு நிகழ்ச்சி களானாலும் மகளிரைப் பொறுப்பேற்கச் செய்யுங்கள். மகளிருக்கு முன்னுரிமை கொடுங்கள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்லி, பெண்ணை பின் னால் நிறுத்தாதீர்கள்; பக்கத்தில் நிறுத்துங்கள்; முடிந்தால், முன்னால் நிறுத்துங்கள். அப்படிப்பட்ட உறுதியை ஆண்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், பெண்களாகிய நீங்கள் கொஞ்சம்கூட தயங்காதீர்கள். தந்தை பெரியார் சொன்னதைப் போல, விடுதலை என்பது கேட்டுப் பெறுவதல்ல. நீங்கள் பெற்றுக்கொள்வது. அதுமாதிரியான உணர்ச்சிக்கு நீங்கள் வாருங்கள். அதற்காக நாம் சண்டைப் போட்டுக் கொள்ளவேண்டும் என்று பொருளல்ல - அதற்காக நாம் ஒருவருக்கொருவர் பிணக்கோடு இருக்கவேண்டும் என்பதல்ல - ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதல்ல.
அறிவுப்பூர்வமாக அடுத்தவர்களின் கருத்தை நாம் மதிக்க ஆரம்பித்தவுடனே, வன்மத்துக்கு இடந்தராத அளவிற்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டிய அளவிற்கு நாம் சிந்திக்கவேண்டும்.
எனவே, இதையே ஒரு செய்தியாக உங்கள் முன்வைக்கிறேன்.
அதிகாரப் பங்களிப்பு பெண்களுக்கு வேண்டும்!
இதுவரையில் பெண்கள் சமத்துவத்திற்காக மட்டும் போராடிக் கொண்டிருந்ததை பெரியார் தொடங்கினார்.
அதைத் தாண்டி அடுத்தகட்டம் அதிகாரப் பங்களிப்பு பெண்களுக்கு வருகிறபொழுதுதான், மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும்.
ஏனென்றால், ஒரே வரியில் அய்யா சொன்னார்,
பெண்கள் உரிமைகள் என்று சொல்லும்பொழுது, ஆண்களே உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்; உங்கள் தாயை, உங்கள் தங்கையை, உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்.
‘‘உங்கள் தாய் சுதந்திரத் தாயாக இருந்திருந்தால், நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள்; உங்கள் குடும்பம் எப்படி இருந்திருக்கும்‘‘ என்று கேட்டார்.
இதை ஆண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்; இந்த அரங்கத்தில் இருந்து கேட்டுக்கொண் டிருப்பவர்கள்.
அதேநேரத்தில், அவர்கள் மிகத்தெளிவாக, ஒதுங்க வேண்டிய அவசியமோ, பதுங்கவேண்டிய அவசியமோ இல்லை.
எல்லா இடங்களிலும் மகளிருக்கு சரிபகுதி இடம் கொடுங்கள்.
75 ஆண்டுகாலத்தில் இன்னமும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதிகூட - பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறவில்லை. பத்து பிரதமர்களுக்குமேல் வந்து போய்விட்டார்கள்; ஊறுகாய் ஜாடியில் அந்த சட்டம் ஊறிக்கொண்டேயிருக்கிறது.
சொத்துரிமை சட்டத்தில் இருக்கிறது ஏட்டுச் சுரைக்காயாக....
எனவேதான், பகுத்தறிவுப் போராளிக்கு எப்போதும் வேலை இருக்கிறது. நிறைய. சொத்துரிமை சட்டத்தில் இருக்கிறது. ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது - நடை முறையில் இல்லை.
அதுபோலவே, பெண்கள் பகுத்தறிவு சிந்தனை களைப் பெறவேண்டும் என்பதற்காக - திருவிழாக்கள் என்ற பெயராலே, கோவில், குளங்கள் என்ற பெயராலே, தங்களுடைய அறிவை, பொருளை, மானத்தை இழக்கக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை யெல்லாம், பிரச்சாரம் - போராட்டம்; போராட்டம் - பிரச்சாரம் என்று, நம்மை நாம் வருத்திக்கொண்டு, பிறருக்குத் தொல்லை இல்லாமல், பொதுச் சொத்துக்கு நாசமில்லாமல், பொது அமைதிக்குப் பங்கம் இல்லாமல், நமக்கு நாமே போராளியாக இருப்போம்!
அறிவாயுதத்தை என்றைக்கும் முனை மழுங்காமல் காப்பாற்றுவோம். அதற்கு ஆயத்தமாவோம் - அதுவே என்னுடைய நன்றி கலந்த செய்தி!
இறுதி மூச்சு
அடங்குகின்ற வரையில் உழைப்பேன்
உங்களுடைய நம்பிக்கையை நான் நியாயப் படுத்துவேன் - அதற்காக இறுதி மூச்சு அடங்கு கின்ற வரையில் உழைப்பேன்.
எனவேதான், இறுதியில் சிறப்பாக ஏதாவது எழுதப்படுமானால், இந்தப் போராளிப் பட்டம்தான் எனக்கு இறுதியாக ஒரு முகவரி தருவதாக இருக்கும். அதுதான் சிறப்பு.
எத்தனை பட்டங்களைப் பெற்றோம்; எத் தனைப் பல்கலைக் கழகங்களில் முதுமுனைவர் பட்டம் பெற்றோம் என்பது முக்கியமல்ல. களத்தில் நிற்கும் களப் போராளி என்பதே பெருமை!
போராளி என்பது இருக்கிறதே, அதுதான் இலக்கை நமக்கு திசை காட்டிக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய அன்பு மொழிகளை விளக்காகக் கொண்டு, நான் என்னுடைய பயணத்தைத் தொடருவேன்
எனவேதான், இலக்காகக் கொண்டு, உங்களுடைய அன்பு மொழிகளை விளக்காகக் கொண்டு, நான் என்னு டைய பயணத்தைத் தொடருவேன்.
என்னுடைய 89 வயதை, நீங்கள் 29 என்றாக்கி, இன்னமும் களத்தில் நில் - ஓய்வெடுத்துக் கொள்ளாதே என்று உத்தரவுப் போட்டு இருக்கிறீர்களே, சட்டம் செய்திருக்கிறீர்களே, அதற்காக நன்றி! நன்றி!! நன்றி!!
வணக்கம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
ஓங்குக புதிய சமுதாயம்!
வருக பெரியார் உலகம்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment