ஏழு ஆண்டு கால பி.ஜே.பி. ஆட்சி! -தமிழர் தலைவரின் வினாக்கணைகள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

ஏழு ஆண்டு கால பி.ஜே.பி. ஆட்சி! -தமிழர் தலைவரின் வினாக்கணைகள்?

கவிஞர் கலி. பூங்குன்றன்

"பா...வின் ஏழு ஆண்டுகள் ஆட்சியும் - அதன் தேர்தல் ரகசியமும்" என்ற தலைப்பிலான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் இரண்டாம் சிறப்புச் சொற்பொழிவு நேற்று (5.1.2022) மாலை 6.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது.

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.

நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட படுகொலைக்கு 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை.

கார்ப்பரேட்டுகளின் துணையுடனும், ஆர்.எஸ்.எஸின் செயல்பாட்டுடனும் ஒன்றிய அரசு நடைபெற்று வருகிறது.

2014இல் பிரதமராக மோடி பதவியேற்றபோது என்ன சொன்னார்? 'அடித்தட்டு மக்களின், தொழிலாளர்களின் விவசாய மக்களின் மகிழ்ச்சி - இவையே எம் ஆட்சியின் தாரக மந்திரம் என்றாரே  - கடந்த 7 ஆண்டுகளில் இவற்றில் ஒன்றிலாவது ஆக்கப்பூர்வமாக வளர்ச்சி ஏற்பட்டதா?

விவசாயிகளின் மகிழ்ச்சி என்றாரே பிரதமர்! அவருடைய ஆட்சியில் ஓராண்டுக்கு மேல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடியதும், 700 விவசாயிகள் மரணம் அடைந்த தும் தான் பிரதமர் அறிவித்த தாரக மந்திரத்தின் பலனா?

'மேக் இன் இண்டியா' என்கிறாரே பிரதமர் - அவர் பயன்படுத்தும் கார், உடுக்கும் உடை, பயன்படுத்தும் பேனா, கடிகாரம் எல்லாம் வெளிநாட்டைச் சேர்ந்தவை தானே?" என்ற வினாவை எழுப்பினார் தோழர் கோ. கருணாநிதி.

தமிழர் தலைவர் ஆசிரியர்

தமது இரண்டாம் சொற்பொழிவில் சில அடிப்படை வினாக்களை எழுப்பினார் ஆசிரியர்.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இறையாண்மை, சோசலிசம், மதச் சார்பின்மை, ஜனநாயகக் குடியரசு - இந்த அடிப்படைக் கட்டுமானம் மோடி ஆட்சி யில் காப்பாற்றப்பட்டு இருக்கிறதா?

2) நிர்வாகத்துறை, நீதித்துறை, நாடாளுமன்ற முறை, ஊடகங்கள் என்று கூறப்படும் நான்கு தூண்களும் எக்கதிக்கு ஆளாயின?

பாபர் மசூதி இடிப்பில் ராமன் கோயிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபின் மாநிலங்கள் அவைக்கு நியமிக்கப்பட்டது எந்த அடிப்படையில்?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தியது மோடி ஆட் சியில் தானே?

3) இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி தானே? மாநிலப் பட்டியல், ஒன்றிய அரசின் பட்டியல் ஒத்திசைவுப் பட்டியல், என்று துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், இவற் றின் தனித் தன்மைகள் காப்பாற்றப்படுகின்றனவா?

மாநில உரிமைகளை சிதைப்பது சரியானதுதானா?

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் தெளி வாகக் கூறப்பட்டுள்ள சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார நீதிகள்  இவ்வாட்சியில் என்ன பாடுபடுகின்றன?

ஒரு சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன் இருக் கலாமா? என்று தந்தை பெரியார் கேட்டாரே இதற்குப் பதில் என்ன?

சட்டத்தில் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படும் என்று திருத்தம் செய்யாதது ஏன்? என்ன தயக்கம்? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை எங்கே எங்கே?

கூட்டங்களில் பேச ஆரம்பிக்கும் போது "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்" என்று விளித்தால் மட்டும் போதுமா? அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமா?

சமரசம் உலாவும் இடம் என்கிறார்களே, அந்தச் சுடுகாட்டில்கூட ஜாதி பேதம் இருப்பது எப்படி சரி?

இப்பொழுது நடப்பது சமதர்மத்திற்கும், குல தர்மத்திற்கும் எதிரான போரட்டம்தானே - மறுக்க முடியுமா?

5) நாடாளுமன்ற முறை எந்தக் கதியில் இருக்கிறது? பிரதமர்  நாடாளுமன்றக் கூட்டங்களில் இதுவரை எத்தனை முறை பங்கேற்று இருக்கிறார்?

எத்தனை விவாதங்களில் பிரதமர் பங்கு கொண்டு பேசியிருக்கிறார்?

செய்தியாளர்களைச் சந்தித்ததுண்டா? பேட்டி கொடுத் தது உண்டா?

'மன்கிபாத்' என்று தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பேசினால் போதுமா?

ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாகக் கருத்துகள் கூறும் உரிமை உண்டா? தேசத் துரோக வழக்கு என்பதுதான் அவர்களுக்குப் பரிசா?

6) நிர்வாகத்தில் காவிப் பாசி படர்ந்துள்ளதே - கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஏபிவிபி என்னும் ஆர்.எஸ்.எஸின் ஆதிக்கம் - துணைவேந்தர்கள் நியமனம் - இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?

7) பெரும்பான்மையினர் ஆள வேண்டும் - ஒப்புக் கொள்கிறோம் - அதே நேரத்தில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ வேண்டாமா?

8) பல மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசசாரம் என்பது எப்படிச் சரியாகும்?

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் என்ன கூறுகிறார்? மாநிலங்களே கூடாது - இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதம்தான் என்று 'ஞானகங்கை' என்னும் நூலில் (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளாரே. அந்த அடிப்படையில்தானே சமஸ்கிருதம் இந்தித் திணிப்புகள் நடந்து கொண்டுள்ளன. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன?

1973இல் கோல்வால்கர் என்ன சொன்னார்? 1950 முதல் 1960 வரை பத்தாண்டுகளுக்குத்தான் இடஒதுக்கீடு என்று அம்பேத்கரும் ஒப்புக் கொண்டாரே - அது இன்னும் தொடர்வது எப்படி சரி? என்று கேட்டவர்தான் கோல்வால்கர்.

(சட்டமன்றம், நாடாளுமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டையும், கல்வி, வேலை வாய்ப்பில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் ஒன்றோடு ஒன்று போட்டு குழப்பியுள்ளார் - வேண்டு மென்றே!)

9) சமூகநீதியின் வேர்கள் வெட்டப்பட்டு வருகின்றனவே?

மருத்துவக் கல்லூரி அகில இந்திய ஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு எப்படியெல் லாம் நடந்து கொண்டது? மக்கள் மத்தியிலும் நீதிமன்றத்திலும் போராடித் தானே சட்டப் படியான உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது?

மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும், நடத்தியது திராவிடர் கழகம் தானே (நாடாளு மன்றத்தின் முன்பும், பிரதமர் இந்திரா காந்தி வீட்டு முன்பும் கருஞ்சட்டைத் தோழர்கள் மறியல் செய்து கைதானது உண்டே?)

ஆர்.எஸ்.எஸின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் போது, இடஒதுக்கீடு என்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் - என்று கூறவில்லையா? பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் பறி போகும் என்ற நிலையில், தன் குரலை பிறகு மாற்றிப் பேசவில்லையா!

அதே நேரத்தில் உயர் ஜாதியினரில் பொரு ளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கான இடஒதுக்கீடு அவசர கோலத்தில் அய்ந்தே நாட்களில் நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று செயல்பாட்டுக்கு வ்ந்தது எப்படி? பார்ப் பனர் என்றால் மாத ஊதியம் 66 ஆயிரம் என்றால் அவர்களின் ஏழைகளாம்; நாட்டில் நடப்பது பார்ப்பனர்களுக்கான ஆட்சி தானே?

(பாரத ஸ்டேட் பாங்கு எழுத்துத் தேர்வில் வெளிவந்த முடிவில் (25.7.2020) காணப்படுவது என்ன?

எஸ்.டி.க்கான கட் ஆஃப் மார்க் 53.75%

எஸ்ஸிக்கான கட் ஆஃப் மார்க் 61.75%

.பி.சி.க்கான கட் ஆஃப் மார்க் 61.75%

ஆனால், உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கான கட் ஆஃப் மார்க் 47.75%

திறந்த போட்டியில் கட் ஆஃப் மார்க் 61.75%

சூட்சமம் புரிகிறதா?)

இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியாகவும் கல்வி ரீதி யாகவுமான அளவுகோல்தானே - பொருளாதார அளவுகோல் கிடையாதே - முதல் சட்டத் திருத்தத்தின் போதே அது நிராகரிக்கப்பட வில்லையா? (243க்கு 5 என்று வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதே!)

இந்திரா - சகானி வழக்கில் பொருளா தார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட வில்லையா?

குஜராத் (10%), ராஜஸ்தான் (14%), பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு என்பதை நீதிமன்றங்கள் செல்லாது என்று தீர்ப்புக் கூறவில்லையா!

(இப்பொழுது ஒன்றிய அரசு தனது 'புதிய கல்விக் கொள்கையில் Socio-Economically Disadvantaged Group  என்ற புதிய சொல்லாடலை விஷமமாக, சட்ட விரோதமாகத் திணித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்).

(10) தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்படுவதற்கு முக்கியமாக திராவிடர் கழகம் காரணம் இல்லையா?

11) இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? என்று கேட்பவர்களுக்கு நமது பதில் - ஜாதியை ஒழிக்க சட்டம் செய்யட்டும் - அதற்குப் பிறகு இடஒதக்கீட்டைப் பற்றிப் பேசலாம் - தயார்தானா?

12) 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியால் செய்ய முடியாததை 60 நாட்களில் செய்வோம் என்றாரே பிரதமர் - எதைச் செய்தார் - சாதித்தார்?

(13) ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று பேசவில்லையா பிரதமர்? இந்த ஏழு ஆண்டுகளில் 14 கோடி பேர்களுக்கு வேலை கிடைத்துள்ளதா?

14) கரோனா கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் சாரை சாரையாக மூட்டை முடுச்சுகளைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே தங்கள் சொந்த மாநிலங்க ளுக்குப் புறப்பட்டனரே? அவர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறவில்லையா? அந்த இரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சொன்ன பிறகு தானே மோடி வழிக்கு வந்தார்?

15) நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதானே? அதுவும் இரண்டே இரண்டு பேர்கள். ஒருவர் அதானி, இன்னொருவர் அம்பானி. நாள் ஒன்றுக்கு இலாபம் ஆயிரம் கோடி - ஆனால் ஏழை மக்களின் நிலை என்ன?

(கரோனா காலத்தில் மட்டும் கார்ப்பரேட்டுகளின் வருவாய் 35 விழுக்காடு உயர்வு - ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அதானிக்கு அங்கே தொழிற்சாலை தொடங்குவதற்காக தன்னோடு அழைத்துச் சென்றாரே! அவருக்கு வங்கிக் கடன் கொடுக்க ஸ்டேட் பாங்கு அதிகாரியையும் உடன் கூட்டிச் சென்ற கொடுமை எங்கு நடந்திருக்கிறது?)

16) குஜராத் முதல் அமைச்சராக மோடி இருந்தபோது ஜி.எஸ்.டி.யை எதிர்க்க வில்லையா? ஆதார் கார்டை எதிர்க்கவில்லையா? 'நீட்'டை எதிர்க்க வில்லையா? பிரதமர் ஆன நிலையில் அவற்றைத் திணிப்பது எப்படி?

17) உயர்நீதிமன்றங்களில் 300 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பாதது ஏன்? 'ஷாகா'வில் கலந்து கொண் டவர்களைத் தேடுகிறார்களா?

18) தேர்தல் கால வித்தைகளைக் காட்டி மக்களின் வாக்குகளைப் பறிப்பதுதான் மோடியின், பிஜேபியின் தந்திரமும் வித்தை களுமாகும். தந்திரங்களும் வித்தைகளும், எவ்வளவுக் காலத்துக்கு? சூழ்ச்சிகளும் தானே ஆரிய தத்துவத்தின் அணுகுமுறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

No comments:

Post a Comment