* புடம்போட்ட சுயமரியாதை வீரர்கள் உலவிய பட்டுக்கோட்டை மண்
* 1951 இல் கட்டப்பட்ட சுயமரியாதை கட்டடத்தின் வாடகைதாரரின் ஒத்துழையாமையால், பழுதடைந்த கட்டடத்தை மீட்க முடியாத நிலை!
*25 ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்தது
* பழைய கட்டடம் நேற்று (24.1.2022) இடிக்கப்பட்டதும் - கழகத் தோழர்களின் உற்சாகமும்!
*தொடர்ந்து கண்ணிமையாக இருந்து ஒத்துழைத்த, நாணயக் கண்மணிகளாக நடந்த தோழர்களுக்கு நன்றி!
* ஒத்துழைத்த வழக்குரைஞர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி!
1951 முதல் ஆதி சுயமரியாதை மண்ணான பட்டுக்கோட்டை சுயமரியாதைக் கட்டடம் வாடகைதாரரின் ஒத்துழையாமையால் பழுதுபட்ட கட்டடத்தை இடித்துப் புதிய வகையில் கட்டடத்தை எழுப்ப இயலாமல் போன நிலையில், 25 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இக்கால கட்டத்தில் கண்ணிமையாக இருந்து நாணயத்துடன் ஒத்துழைத்த இயக்கத்தினருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இயக்க வரலாற்றில் முக்கிய அறிக்கை வருமாறு:
பட்டுக்கோட்டை ஆரம்ப காலத்திலேயே சுயமரியாதைக் கோட்டை யாக உருவான நகரம்; கழக வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சுயமரியாதைத் தொட்டில் பாசறை.
தளபதி அஞ்சாநெஞ்சன் கே.வி.அழகிரிசாமி பிறந்த ஊராக இல்லா விடினும் வாழ்ந்து வரலாறு படைத்த மண்.
பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்க அடிமண்!
1928-லேயே மேனாள் 'விடுதலை' ஆசிரியர் சா.குருசாமி பி.ஏ., அவர்கள் தமது தலைமையில், ''பட்டுக்கோட்டை - முதல் சுயமரியாதை வாலிபர் மாநாடு'' நடத்தி, புரட்சிகர தீர்மானங்களை நிறைவேற்றி, 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டிற்கு முன்னோட்ட மாநாடு நடத்திய கொள்கையர்.
நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், ஜஸ்டீஸ் பி.வேணு கோபால் போன்றவர்கள் உயர்நிலைக் கல்வி கற்ற, சுயமரியாதை நாற்றுகளாக பக்குவப்படுத்தப்பட்ட ஊர்.
பட்டுக்கோட்டைத் தோழர்கள், சுயமரியாதை சங்க செயற்குழு உறுப் பினர்கள் கே.எஸ்.சிவராமகிருஷ்ணன், எஸ்.பாப்பையன், என்.ரெத்தின சாமி, சி.என்.விஸ்வநாதன், ஆர்.என்.ரெத்தினம், பி.சுப்பிரமணியன், எம்.ஆர்.காசிநாதன், வி.பாலதண்டாயுதம், பி.ராமசாமி, கே.மாணிக்கம், தெ.வரதராஜன், கே.அருணாசலம் (பட்டியல் கல்வெட்டில் காண்க) மற்றும் களப் போராளிகளாகப் புகழ்பெற்ற பட்டுக்கோட்டை மாப்பளையன், சாமுக்கொத்து, அணைக்காடு ஆசிரியர் தளபதி டேவிஸ் பி.ஏ., எல்.டி., பி.ஓ.எல்., பட்டுக்கோட்டை இரெ.இளவரி, நடிமுத்து, பாலசுப்பிரமணியன், முத்துக்குமாரசாமி, இலைக்கடை தங்கராசு, இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் 89 வயது நிறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சின்னக்கண்ணு இவர்களையெல்லாம் அவ்வப்போது இயக்கி வந்த படப்பைக் காடு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாகை என்.பி.காளியப்பன், 'மாமுண்டி' என்ற பெயரால் அழைக்கப்பட்ட ராமாமிர்தம் முதல் எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளிகளை விதைத்த பூமி அப்பூமி!
இப்போது வாழும் முதுபெரும் பெரியார் சுயமரியாதைத் தொண்டர்கள் எண்ணிக்கை சுருங்கினாலும், அடுத்துச் சுடர் தாங்கி களம் காணும் காளைகள் கழகப் பொறுப்பாளர்களாக, கடமையாற்றும் போராளிகள் ஏராளம் என அச்சுயமரியாதை மண்ணில் இன்னமும் கொள்கை வளம் கொழிக்கும் பூமி என்ற வரலாறு தொடர்ந்து கொண்டுள்ளது.
பட்டுக்கோட்டையில்
பெரியார் படிப்பகம் கட்டட நன்கொடை
பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் தலையாரித் தெருவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. 22.01.2022 அன்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், முனைவர் அதிரடி அன்பழகன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வை.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் காளிதாசன், வழக்குரைஞர் அண்ணாதுரை, மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் கா.தென் னவன், மாவட்ட ப.க தலைவர் இரத்தினசபாபதி, பேரா. குட்டிமணி ஆகியோர் கட்டடம் அருகில் கருப்புச் சட்டையுடன் நின்றனர். மதுக்கூர் ஒன்றியம் கல்யாண ஓடையைச் சேர்ந்த அருணாச்சலம் (தி.மு.க.) என்ப வர் அந்த வழியாக வந்தார். என்ன இந்த இடத்தில் என கேட்டார். படிப்பக பழைய கட்டடம் பழுதாக உள்ளது. இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப் போகிறோம் என்றவுடன், உடனடியாக ரூ.500 எடுத்து எனது நன்கொடை முதல் தவணை என கொடுத்தார் மீண்டும் வழங்குவேன் என மகிழ்ச்சி யுடன் தெரிவித்தார். பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிக்கப்பட்டது. வழிப் போக்கில் சென்றவர் தானாக முன் வந்தது நன்கொடை அளித்தது கழகத் தோழர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. (நன்கொடை கொடுத்த அருணாச்சலம் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களின் தந்தையார் கனகசபை அவர்களின் வகுப்புத் தோழர் என்பது குறிப்பிடத்தகுந்தது).
1951 முதல் சுயமரியாதைக் கட்டடம் ஆங்கே!
1951 இல் சுயமரியாதைச் சங்கத்தின் சார்பில் - கருஞ்சட்டைத் தோழர்கள் நிதி சேர்த்து, பத்திரப்படுத்தி, நகரின் முக்கிய பகுதியில் கட்டடம் எழுப்பி, சுயமரியாதைச் சங்கம், அழகிரிசாமி மன்றம், இரத்தினசாமி இல்லம் என்று மூன்று தளங்களுக்குப் பெயரிட்டுப் படிப்பகம் நடத்தியும், பெரியார் சுயமரியாதை நிறுவனத்தின் சொத்தாக அனைவரும் இணைந்தும் நடத்தி வந்தனர்.
கீழ்ப்பகுதியில் - படிப்பக நிர்வாகச் செலவுகளுக்காக, பராமரிப்புக்கான செலவிற்கும் வாடகை வருமானம் மூலம் சிறப்பாக நடத்தி வந்தனர் - நாணயத்திற்குப் பெயர்போன நம் கழக உள்ளூர் நாயகர்கள்.
அவர்களில் முக்கியமானவர்களின் பரிந்துரையின் காரணமாக, கீழ்க்கடைகளை ஒரு வாடகைதாரருக்கு விடப்பட்டது (1973 ஆம் ஆண்டு இறுதியில்). அவர் வாடகையை ஒழுங்காகச் செலுத்தி வந்தார். கட்டடம், படிப்பகம் பிறகு அவரது மகன் ஒருவர் அதைத் தொடர்ந்தபோது (நாம் கேட்கும்போது புது சீரமைப்புக்கு நம்மிடம் எப்போது வேண்டுமானாலும் ஒப்படைப்போம் என்று உறுதிமொழியை அவரது தந்தையார் தந்தும், பின்னால் வந்தவர், அதன்படி ஒத்துழைக்கவில்லை). உள்வாடகைக்கும் விட்டு ஸ்தாபன கட்டடம் மேல்பகுதிகள் பழுதடைந்த நிலையிலும், காலி செய்ய மறுத்ததின் விளைவாக, நாம் சட்டத்திற்குப் புறம்பான எந்த அடாவடித்தனத்திலும் ஈடுபட விரும்பாமல், சட்ட ரீதியாகவே நடவடிக் கைகளை - நிறுவனத்தின் முடிவுப்படி மேற்கொண்டோம்.
வாடகைதாரரின் அழிசெயலும் - நமது முறையான வழக்கும்!
அதன்படி 1996 ஆம் ஆண்டு வழக்குப் போடப்பட்டு, அது பல வகையில் எதிர்மனுதாரரால் வளர்க்கப்பட்டு, பலவகையான இழப்புகளுக்கு ஆளானதோடு, பட்டுக்கோட்டைக்கு வரும் பலரும், 'என்ன இந்தக் கட்டடம், பராமரிப்பின்றி பாழடைந்த கட்டடமாகவே வைத்துள்ளார்களே, ஏன்?' என்று நம்மீது - கோர்ட்டில் வழக்கு இருப்பது தெரியாமலேயே - நல்லெண்ணத்தோடு விமர்சித்தனர்!
பல சட்ட நிபுணர்கள் - வழக்குரைஞர்கள் குறிப்பாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பி.பரஞ்சோதி, மூத்த வழக்குரைஞர் டாக்டர் ஏ.தியாக ராசன், கழக சட்டத்துறைத் தலைவர் த.வீரசேகரன் அவர்கள் ஆலோசனை - பங்களிப்புக்கேற்ப பல கட்ட வழக்குகள் சுமார் 25 ஆண்டுகளாக நடந்து, எதிர்மனுதாரரின் மேல்முறையீடு மதுரை உயர்நீதிமன்றத்தில் 25.11.2021 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
பொது நிறுவனம் - அதுவும் சிறப்பாக நடைபெறும் அறக்கட்டளை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளால், தீர்ப்புரையிலேயே பாராட்டப்பட்ட அறக்கட்டளையின் ஒரு சொத்தினைப் பாதுகாக்க இத்தனை கஷ்டங்கள், முயற்சிகள், மன உளைச்சல்களுக்கிடையே வழக்கு நடந்து எப்படியோ ஒரு முடிவு ஏற்பட்டது.
நாம் எந்தவிதமான - சட்டத்திற்கு அப்பாற்பட்ட முயற்சி எதிலும் ஈடுபடாமல், சட்டப்படி செய்து, 'பொறுத்தவர் பூமி ஆளும்' நிலை பல தோழர்களின் கூட்டு முயற்சியாலும், நல்லெண்ணத்தாலும், திறமைமிக்க வழக்குரைஞர்கள் பட்டுக்கோட்டை வழக்குரைஞர் ஜவாஹிருல்லா இன்னும் பலரது அரிய ஒத்துழைப்பும், 71 ஆண்டுகளாக இந்தக் கட்டடத்தின் உரிமையையும், பாதுகாப்பையும் இன்று பெற்றுள்ளதற்காக இதன் பின்னணியில் உழைத்த சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ரூ.1,05,000 அறிவிப்பு!
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரின் உத்தரவுக்கிணங்க பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் செய்தியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், பகுத் தறிவாளர், சுயமரியாதைவீரர் கா.அண்ணாதுரை அவர்களிடம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயகுமார், கழக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழ கன் ஆகியோர் தெரிவித்தபொழுது, புதிய கட்டடத்திற்கு சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியம் ரூ. 1,05,000-அய் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வன செயலாளர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அவர்கள் தொலைபேசியில் மகிழ்ச் சியுடன் தெரிவித்தார். சட்டமன்ற உறுப் பினரின் பேராதரவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
பொது அமைப்புகளின் சொத்துகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களும் - கழகத் தோழர்களின் நாணயமான செயல்பாடுகளும்!
பொது அமைப்புகளின் சொத்துகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும், நாணயமான கணக்கு வழக்குகளை வைத்திருப்பதும் கழகப் பொறுப் பாளர்களின் பாராட்டத்தக்க பெருமைமிகு அரும்பண்பு!
(இதற்கு ஊர்தோறும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு; அதனால்தான் உங்கள் தொண்டனாகிய என் பணி எளிதாகிறது - எத்தனையோ இடுக்கண், சோதனைகள், அழிவழக்குகள் வந்தாலும்கூட!)
பட்டுக்கோட்டை: நீண்ட சுயமரியாதை வீரர்களின் பட்டியலைப் பாரீர்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா பட்டுக்கோட்டை நா.இரத்தினசாமி, அவரது சகோதரர் மாமுண்டி என்று அழைக்கப்படும் நா.இராமாமிர்தம், அதன்பிறகு இரத்தினசாமி மருமகன் நகர தலைவர் தியாகராசன் ஆகியோர் கணக்கு வழக்குகளைப் பார்த்து சிறப்பாக நடத்தினர்.
இந்நிலையில், இத்தீர்ப்புக்குப் பிறகு, பட்டுக்கோட்டை தனி கழக மாவட்டமாக ஆகிய நிலையில், (முன்பு மன்னார்குடி மாவட்டத்தோடு இருந்தது) அத்திவெட்டி பெ.வீரையன், பேராவூரணி சிதம்பரம் போன்ற பொறுப்பாளர்கள், நகரத் தலைவர்கள் சிறப்பாக இயங்கும் நிலையில்,
பழைய கட்டடம் நேற்று இடிக்கப்பட்டதும், தோழர்களின் எழுச்சியும், சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை அவர்களின் நன்கொடை அளிப்பும்!
சீரிய பகுத்தறிவாளரும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் அண்ணாதுரை அவர்கள் இந்தக் கட்டடப் பிரச்சினை சுமூகமாக இறுதிக்கட்டத்தில் முடிய பெரிதும் உதவியதை மிகுந்த நன்றியோடு குறிப்பிட விரும்புகிறோம்.
பழைய கட்டடத்தை இடிக்கச் சொல்லி, நகராட்சி நிர்வாகத்தினர் மூன்று, நான்கு நோட்டீசுகளைத் தந்ததால் நேற்று (24.1.2022) பழைய கட்டட இடிப்பு வேலை அமைதியாக நடந்தது.
விரைவில் புதிய எழில்மிகு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன கட்டடம் வலிவுடனும், பொலிவுடனும் பல அடுக்குகள் கட்டடமாக, அதில் படிப்பகம், நூலகம் முதலியன - மக்களின் பேராதரவுடன் தொடங்கும்.
நமது தோழர்கள் திரண்டு நின்று இருந்ததைப் பார்த்து, அந்த வழியாகச் சென்ற ஒரு தி.மு.க. இயக்கச் சகோதரர், தானே முன்வந்து, புதுக்கட்டடம் கட்ட இதோ ரூ.500 எனது முதல் நன்கொடை என்று கூறி, வழங்கி மெய்சிலிர்க்கச் செய்தார்.
நமது சட்டமன்ற உறுப்பினர் மானமிகு தோழர் அண்ணாதுரை ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளித்து, புதுக்கட்டடம், நாம் நினைத்ததைவிட, வேகமாக எழும்பிட பேராதரவு என்ற அடிக்கல்லை நீட்டி, இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.
நமது டிரஸ்ட் நிர்வாகிகளில் ஒருவரான பட்டுக்கோட்டை டி.கே.நடராசன் அவர்களும் உதவிட முன்வந்துள்ளார். உற்சாகத்தோடு பணிகள் இனி தொடரும்.
இமைபோன்று காத்த கழகத் தோழர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு நன்றி! நன்றி!!
பட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கும் நன்றி! கழகக் கொள்கை உறவுகளின் இமை போன்று காக்கும் பண்புக்கும், பரிவுக்கும், ஒத்துழைப்புக்கும் எமது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
செயலாளர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
சென்னை
25 .1.2022
No comments:
Post a Comment