கழுத்து வலிக்குக் காரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

கழுத்து வலிக்குக் காரணம்!

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்என்று அழைக்கப்படும் கழுத்து வலியானது, முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்தது.

இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப்பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்திருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது, இப்போது அதிமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்து கொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். எனவே எலும்பு நலச்சிறப்பு மருத்துவரையோ, நரம்பு நலச்சிறப்பு மருத்துவரையோ நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும்.

புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment