உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத அரும் பெரும் தொண்டர்கள் கருஞ்சட்டையினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத அரும் பெரும் தொண்டர்கள் கருஞ்சட்டையினர்

தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரைசென்னை, ஜன.10-  உலகத்தில் எங்கும் காணக் கிடைக் காத அரும் பெரும் தொண்டர்கள், கொள்கைவாதிகள் கருஞ்சட்டையினர் என்றார் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 23.12.2021 சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

தந்தை பெரியார் நினைவு நாளினையொட்டி நடை பெறக்கூடிய இந்தக் கருத்தரங்கிற்குத் தலைமையேற்கக் கூடிய தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் அவர்களே,

ஒன்றியம் என்ற ஒற்றைச் சொல்லால், இந்திய துணைக் கண்டத்தையே கிடுகிடுக்கச் செய்தவர்

இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்புரை, கருத்துரை வழங்கவிருக்கக்கூடிய ஒன்றியம் என்ற ஒற்றைச் சொல்லால், இந்திய துணைக் கண்டத்தையே கிடுகிடுக்கச் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராசன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்குகொண்டு கருத்துரை வழங்க விருக்கக்கூடிய நாகை சட்டமன்ற உறுப்பினர்  தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே,

மூத்த பத்திரிகையாளர் அருமை சகோதரி ராதிகா சுதாகர் அவர்களே,

இந்நிகழ்விற்கு வரவேற்புரையாற்றிய கழகத்தினு டைய மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கு ரைஞர் மதிவதனி அவர்களே,

இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய கழகத்தினுடைய மாநில மாணவர் கழகச் செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் அவர்களே,

மற்றும் இங்கே வருகை புரிந்துள்ள அருமை பெருமக்களே,

இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவினை காணவிருக்கக்கூடிய...

சுயமரியாதைச் சுடரொளிகள் மூன்று பாக நூல்களை வெளியிடவிருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தினுடைய தலைவரும், இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவினை காணவிருக்கக் கூடியவருமான மரியாதைக்குரிய அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களே,

அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றியி னையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின் றேன்.

நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்புதான்

நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்புதான் என்றாலும், தந்தை பெரியாரை மறந்தால்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்க முடியும்?

ஒவ்வொரு நாளும் தந்தை பெரியாருடைய பணி தேவைப்படுகிறது என்பதை நாடு உணரக்கூடிய காலக் கட்டத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரைப்பற்றி பேசாத நாளெல்லாம், பிறவாத நாள் என்கின்ற அளவிற்கு, நாட்டிலே பல்வே:று நிகழ்வுகளும், சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

அந்த முறையிலே, வரலாற்றுக் குறிப்பு நாள் என்கின்ற முறையில், இதை ஒரு நினைவு நாளாக நாம் சொல்கின்றோமே தவிர, மற்றபடி நடைமுறையில் அவர் ஒவ்வொரு நாளும் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய மாபெரும் தலைவராகத்தான் இருந்துகொண்டிருக் கின்றார் என்பது நமக்கு நன்றாத் தெரியும்.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் அறிக்கை

தந்தை பெரியார் அவர்களுடைய கடைசி பிறந்த நாளில், விடுதலை பிறந்த நாள் மலரில் அவர்கள் எழுதிய அறிக்கையில், ''அடுத்த பிறந்த நாளில் நான் இருப்பேனா? என்று எனக்குத் தெரியாது'' என்று அவர்கள் சொன்னது, எப்படியோ அந்த நிலைதான் ஏற்பட்டது என்றாலும்கூட,

அந்த அறிக்கையிலே ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள்,

எனக்கு உள்ள கவலையெல்லாம் நாம் எவ்வளவோ அறிவுப் பெற்றும், சுதந்திரம் பெற்றும், கல்வி பெற்றும் - இன்னும் பிறப்பின் அடிப்படையில், பேதத்தைப் பேசுகின்ற - பிறப்பின் அடிப்படையிலே சூத்திரன் என்ற நிலைமை இருக்கிறதே - அதை எண்ணுகின்றபொழுது தான் நான் மிகுந்த வேதனையடைகின்றேன்.

நமது மடாதிபதிகளும், படித்தவர்களும்கூட கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது என்ற நிலை இருக் கிறதே - இந்த வேதனைத்தான் என்னை உறுத்திக் கொண்டிருக்கின்றதுஎன்று அவருடைய கடைசி பிறந்த நாள் செய்தியில்கூட தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே காணொலியில் வெளியிட்டதைப்போல, அதையும் தந்தை பெரியார் அவர்கள், வெற்றி பெற்ற ஒரு நினைவு நாளாக இன்றைக்கு இருக்கிறது என்பதை  இந்த நேரத்தில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கின் றோம்.

தந்தை பெரியார் மறைந்தாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையில், வெவ்வேறு வகையிலே பல்வேறு மாநிலங்களில், உலக அளவிலே பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

தந்தை பெரியார் வாழ்க!  திராவிடம் வெல்க!!

தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, நாடாளு மன்றத்திற்குச் சென்ற 38 உறுப்பினர்களும்கூட, அவர் கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்பொழுது, “தந்தை பெரியார் வாழ்க - திராவிடம் வெல்கஎன்று சொல்லித் தான் பதவிப் பிரமாணம் எடுத்தார்கள் என்று சொன் னால், இது எவ்வளவு பெரிய மாற்றம்?

தமிழ்நாடு என்பது எதைக் கொடுக்கிறது?

தமிழ்நாடு என்றால் என்ன என்பதை உலகத்திற்குத் தெரிவிக்கின்ற காட்சிகளையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

பீகார் மேனாள் முதலமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சி

நேற்றுகூட பீகாரில் மேனாள் முதலமைச்சராக இருக் கக்கூடிய ஜித்தன்ராம் மஞ்சி என்பவர், மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர் சொல் கிறார், “நான் ராமனை ஏற்பது கிடையாது; அண்ணல் அம்பேத்கர் வழியிலே நான் இந்தக் குரலை சொல்கி றேன்என்றார்.

ஈரோட்டுக் குரல், பீகாரிலே வெடித்துக் கிளம்பியிருக்கிறது

நம் வீட்டிற்கு வருகின்ற பார்ப்பனர்கள், அது திருமணத்திற்காகவும் இருக்கலாம்; கருமாதியாகவும் இருக்கலாம் - வருகிறார்கள், நம்முடைய பணத்தைப் பெறுகிறார்கள்; ஆனால், நம்மோடு உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டால், வர மறுக்கிறார்கள்; இது என்ன நியாயம்?” என்ற அவரின் குரல், ஈரோட்டுக் குரல், பீகாரிலே வெடித்துக் கிளம்பியிருக்கிறது என்ப தற்கு இதுதான் அடையாளமாக இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல முடியும்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரித்தாஸ் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் என்பது முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்கமாக இருந்து கொண்டிருக்கிறதே, இது என்ன நியாயம்? என்று கேட்டிருக்கிறார்.

இது ஜனநாயக நாடல்லவா - எல்லா மக்களுக்குமான இடம் கிடைக்கவேண்டுமா? இல்லையா? ஆனால், சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு இதுவரை, தலைமை நீதிபதிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்கின்ற குரல் கேரளாவில் இருந்து கிளம்புகின்றது என்று சொன்னால், அது தந்தை பெரியா ருடைய குரல் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும், ஒவ்வொரு நாளும் தந்தை பெரியார் பேசப்பட்டுக்கொண்டே இருக் கிறார்.

அய்..எஸ். அதிகாரி முதல்கடைநிலை ஊழியர் வரை

இங்கே காணொலியில் சொல்லப்பட்டதுபோல, தந்தை பெரியாருடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து, அய்..எஸ். அதிகாரி முதல், கடைநிலை ஊழியர் வரை கையை உயர்த்தி தந்தை பெரியாருடைய தத்துவத்தைப் பின்பற்றுவோம் என்று கூற வைத்திருக் கிறார், தமிழ்நாட்டினுடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அவர்கள் புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படி, நாள்தோறும் தந்தை பெரியாருடைய கொள் கைகள் வெற்றி பெற்றிருக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இன்றைக்குப் புதிய இளைஞர்கள் இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்தார்கள். இந்த இயக்கத்தை நோக்கி வர வேண்டியது கட்டாயமாகும். ஏனென்றால், இளைஞர்கள் தான், எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்தில் பேசும் பொழுது சொல்வார், வயதானவர்கள் எல்லாம் வெளியே போங்கள்; இளைஞர்களே வாருங்கள் என்பார். அவரு டைய 95 வயதில். அதாவது தந்தை பெரியாரே, தன்னை இளைஞராகக் கருதக்கூடிய தலைவராக இருந்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், சுயமரியாதைச் சுடரொளிகள் என்ற மூன்று தொகுதிகள் இங்கே இப் பொழுது வெளியிடப்படவிருக்கின்றன.

வாழ்கின்றபொழுதேஎனது மரண சாசனம்என்று வீட்டிலே எழுதி வைத்துவிடுவார்கள்

தந்தை பெரியாருடைய இயக்கத்திலே சேர்ந்து, தந்தை பெரியாருடைய தொண்டர்களாக தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் -தங்களுடைய மரணத் திற்குப் பிறகும்கூட - பெரியார் தொண்டர்களுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால், வாழ்நாள் முழுவதும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். ஆனால், வாழ்கின்றபொழுதே எனது மரண சாசனம் என்று வீட்டிலே எழுதி வைத்துவிடுவார்கள்.

நான் மரணமடைந்தால், என்னுடைய உடல் எந்தவித மத சடங்குகளுக்கும் இடமில்லாமல், நான் எந்தக் கொள்கையில் வாழ்ந்தேனோ, அந்தக் கொள்கைக்கு மாசு மறுவில்லாமல், அடக்கம் செய்யப்படவேண்டும் என்று, உயிரோடு இருக்கும்பொழுதே, மரண சாசனம் எழுதுகின்ற தொண்டர்களை உலகத்திலேயே தந்தை பெரியார் தொண்டர்களைத் தவிர, வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு போராட்டம் என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தால், அதற்காக, எந்த விலையையும் கொடுப்ப தற்குத் தயாராக இருந்தார்கள் அவருடைய தொண் டர்கள்.

ஜாதியைப் பாதுகாக்கின்ற பகுதியை எரித்தார்

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில் அடிப்படையில் பார்க்கின்றபொழுது, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - அதற்காகக் கடவுளை எதிர்த்தார்; மதத்தை எதிர்த்தார்; வேத, சாஸ்திர, புராணங்களை எரித்தார். கடைசியாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஜாதியைப் பாதுகாக்கின்ற பகுதியைக்கூட தந்தை பெரியார் எரித்தார்.

அப்படி ஒரு போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த நேரத்தில், அந்தச் சட்டத்தை எரித்தால், என்ன தண்டனை என்றுகூட சட்டத்தில் இடமில்லை.

ஆனால், அவசர அவசரமாக, இந்தப் போராட்டத் திற்காக சட்டத்தை எரிக்கின்றவர்களைத் தண்டிப்பதற் காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படா மல், 10 ஆயிரம் தொண்டர்கள் சிறைப்பட்டார்கள் என்றால், இந்த வரலாறு உலகத்தில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது.

இன்னொரு செய்தி, திருப்பனந்தாளில் ஒரு செய்தி-

130 தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தை எரித்தார்கள். ஆனால், வெறும் 30 பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தார்கள்.

மீதி தோழர்கள் என்ன செய்தார்கள் என்றால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

எதற்காக அந்த முற்றுகை தெரியுமா?

சட்டத்தை எரித்த எங்களை

ஏன் கைது செய்யவில்லை?

நாங்கள் சட்டத்தை எரித்தோம். தந்தை பெரியாருடைய கட்டளையை ஏற்று செயல்படவேண்டியது தொண்டர்களுடைய கடமை. நாங்கள் சட்டத்தை எரித்தும், எங்களை ஏன் கைது செய்யவில்லை?”

இப்படி சொல்லக்கூடிய தொண்டர்களை உலகத்தில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா?

மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று தெரிந்தும், எங்களை ஏன் கைது செய்யவில்லை? நாங்கள் எந்த முகத்தோடு வீட்டிற்குச் செல்லுவோம் என்று சொன்னபொழுது,

காவல்துறை அதிகாரிகள், நீங்கள் எரித்ததை நாங்கள் பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.

அப்படியா?

இப்பொழுது எரிக்கிறோம் என்றார்கள்.

மணி கடந்துவிட்டது, உங்களைக் கைது செய்யமாட் டோம் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

உள்துறை அமைச்சருக்குக் கடிதம்

உடனே உள்துறை அமைச்சருக்கு 90 தோழர்களும் கடிதம் எழுதுகிறார்கள்.

அதில்,

தந்தை பெரியாரின் கட்டளைப்படி, ஜாதியை ஒழிப்ப தற்காக அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை எரித் தோம். ஆனால், உங்கள் காவல்துறையினர் சட்டத்தைக் காப்பாற்றவில்லை. எங்களைக் கைது செய்யவில்லை. இதுதான் உங்களுடைய ஆட்சியின் யோக்கியதையா?” என்று உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதக்கூடிய தொண்டர்களை உலகத்தில் எங்கேயாவது சந்தித்திருக் கின்றோமோ என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

அத்தகைய தொண்டர்களுடைய வரலாறுகள் எல்லாம் இங்கே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது - சுயமரியாதைச் சுடரொளி நூல்களில்.

அதனைப் பொருத்தமாக, நூற்றாண்டு விழா காண விருக்கக்கூடிய நம்முடைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்கள் வெளியிடுவார்கள் என்பதைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment