புதுடில்லி, ஜன.27 நாட்டில் சட்டக்கல்வியின் தரம் மோசம் அடைந்து வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேறு பணியில் தொடர்ந்து கொண்டே சட்டக்கல்வியையும் பயில்வதற்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பார் கவுன்சில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், நாட்டில் சட்டக்கல்வியின் தரம் மோசம் அடைந்து வருகிறது என கவலை தெரிவித்தனர். வழக்குரைஞர் தொழிலுக்கு வருவோரின் தரத்தை அறியும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
சில சமயங்களில் சமூக விரோதிகள் கூட தவறான வழிகளில் சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்று விடுவதாகவும், வகுப்புகளுக்கு செல்லாமலேயே பட்டம் பெற்று விடும் நிலை இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், இதனை தடுக்க கட்டக்கல்லூரிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை ஒருவரால் ஒரே நேரத்தில் 2 படகுகளை செலுத்த முடியாது என்பதைப் போல வேறு பணியில் இருப்பவர்கள் சட்டக்கல்வி பயில்வதற்கான அனுமதியை வழங்குவது சரியாக இருக்காது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதே சமயம் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட செயல்முறைகள் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment