கரோனா தொற்றினால் பாதிக் கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலம் பெற வாழ்த்துக்களை பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
24.1.2022, 'முரசொலி'யில், தங்களின் சிறப்பானதொரு அறிக் கையை வாசித்தபின் இம்மடலை எழுத முற்பட்டேன். தந்தை பெரியாரின் சமூக கருத்துக்கள், குறித்தும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 'பூஜ்ஜியம்' இடம் தானா?, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து, தி.மு.க.வின் தலைமையில் அனைத்து முற்போக்கு அணியினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தமை, ஒன்றிய அரசு விஷமத்தனமாக காலதாமதம் செய்து வந்த கொடுமை குறித்தும், விவரத்தை எங்களைப் போன்றோர் அறியச் செய்தமைக்கு நன்றிகள் பல.
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார் அவர்கள், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்காதது நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடுத்தமை குறித்தும், தங்கள் அறிக்கையில் சிறப்பாக குறிப்பிடப்பிட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினருக்கு 27% இடஒதுக்கீட்டை பொறுக்க முடி யாத உயர் ஜாதியினரின் கூட்டாளி ஒன்றிய அரசு, வேர்த்து வியர்த்துக் கொட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு என்ற வழக்கை இணைத்து, எவ்வாறேனும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவி னருக்கு கிடைக்க இருக்கும் பலனை காலதாமதம் செய்ய வேண்டும் எனும் ஒன்றிய அரசின் நயவஞ்சக தன்மையையும் தமிழினத்திற்கு தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காட்டியிருப்பது கண்டு நன்றி யுணர்வுடன் பார்க்கிறேன். நயவஞ்சகத்தை வெல்லும் வகையில், உச்சநீதிமன்ற மாண்பமை நீதி அரசர் சந்திரசூட், மாண்பமை நீதிஅரசர் ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் சிறப்பு அமர்வு, வழக்கு விசாரணையை மீண்டும் அலசி ஆராய்ந்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. 'வாய்மையே வெல்லும்' என்பதை நிரூபணம் செய்துள்ளது. 70 பக்கங்கள் கொண்ட தீர்ப்புக் குறித்தும், Operation Portion குறித்தும், அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில், தீர்ப்பு வழங்கிய மாண்பமை நீதி அரசர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனும் தங்கள் மெய்யுரை அனைவராலும் வரவேற்கத் தகுந்த ஒன்று. வெறும் மதிப்பெண் மட்டுமே அடிப்படைத் தகுதி எனும் உயர் ஜாதியினரின் அர்த்தமற்ற கருத்தினை ஒன்றிய அரசு கையிலெடுத்துக் கொண்டு, நம்மை முன்னேறியவர்களுடன் போட்டியிட முடியாத அவல நிலைக்கு ஆளாக்கி நம்மை ஒதுக்கிவிட்டது ஒன்றிய அரசு.
மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்கு, தகுதி இல்லை, திறமை இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்ற நிலையை இந்த தீர்ப்பு பிரகடனப்படுத்தியுள்ளது. முக்கிய தீர்ப்பின் கட்டளைகளை, தமிழாக்கம் செய்து வழங்கியுள்ளமைக்கு நன்றி சொல்ல கடமைப் பெற்றுள்ளோம். பெரு மகிழ்ச்சியடைந்தேன். மேலும், மாண்பமை நீதி அரசர் கே. இராமசாமி அவர்கள், தகுதி - திறமை மோசடியை, ஓங்கி மண்டையில் அடித்த விதம் குறித்தும் உணர்வு பூர்வமாக எழுதி யுள்ளீர்கள். தமிழ் மக்களின் பார்வைக்கு சூரியக் கதிர்கள் போல் வழங்கியுள்ள அறிக்கைக்கு நன்றிகள் பல கோடி.
தலைவர் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். இவ்வறிக்கையை தக்க வகையில் ஆங்கிலத்தில் சிறு கட்டுரையாக தங்கள் பெயரிலேயே The Rising Sun ஆங்கில இதழில் இடம் பெற செய்ய முடியுமா? ("இதழாசிரியர்", பேராசிரியர் முனைவர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் அவர்கள்).
- இரா.தரணிபதி
சென்னை - 600 026.
No comments:
Post a Comment