ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைத்திடும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைத்திடும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்

முதலமைச்சர் தலைமையில்  தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை,ஜன.10- தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சட்ட மன்ற அனைத்துக்கட்சியினர் ஆலோசனைக்கூட்டம் 8.1.2022 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 மருத்துவத் துறையில் தமிழ்நாடு இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது. ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்தநீட்தேர்வு திருத்தச் சட்டம் மற்றும் அதன் பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில்நீட்தேர்வை முன்னிறுத்தி நமது மாணவர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது.

மாநில சுயாட்சிக்கு எதிரானஒன்றிய அரசின் போக்கு!

மாநில அரசு நிதியிலிருந்து - மாநில அரசு களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அது மட்டுமின்றி, ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ளநீட்தேர்வானது, இதுபோன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி களைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கை யில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக்கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிப் பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்ற தாக்கும் இந்தநீட்தேர்வு மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைப்பதாக மட்டுமின்றி- அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தைச் சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது.

சட்டமன்ற இறையாண்மைக்கு எதிரான - ஆளுநரின் செயல்பாடு!

ஆகவே, மாநில உரிமைகளை நிலை நாட்டிடவும், நம் மாணவர்களின் மருத் துவக் கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் அவர் களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்தச் சட்டமுன்வடிவினை மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பா மல் இருப்பது; சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதலமைச்சர் அவர்களே நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து, ‘நீட்சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் - என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் அவர்கள் அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நேரத்தில் - அவரைச் சந்திக்க இயலவில்லை என்பதால், மனுவினை அவரது அலு வலகத்தில் அளித்து, அன்று மாலையே அம் மனுவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களைச் சந்திக்க நேரம் கோரி- பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால் - அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. சந்திக்க உள்துறை அமைச்சர் மறுப்பது; மக்களாட்சி மாண்புக்கு எதிரானது

"தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பி னர்களைச் சந்திக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் மறுத்தது, மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது" என்று 6.1.2022 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்து- இன்றைக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களிடம் நாம் ஏற்கெ னவே அளித்த கோரிக்கையைப் பரிசீ லிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத் துக் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்கலாம் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை; சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் - ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளைச் சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தைச் சீர்குலைத்திடும்நீட்தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதி யான நடவடிக்கைகளை மூத்த சட்டவல்லுநர்களைக் கலந்தாலோசித்த பின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், ‘நீட்தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment