சென்னை, பிப்.27 தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச்செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையரும், மாநில தொடர்பு அதிகாரியுமான ஜெசிந்தா லாசரசை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1070 என்ற மாநில அவசர கட்டுப்பாட்டு மய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், அலயக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரசை 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 என்ற எண்களிலும், . என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
டில்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் உள்ள உக்ரைன் அவசர உதவி மய்யத்தை 9289516716 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கல்
சென்னை, பிப்.27 மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியும் இல்லாமல் தாமே சுயமாக செயல்படும் விதமாக அவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் கடந்த 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (26.2.2022) இலவச உபகரணங்கள் வழங்கும் முகாமை நடத்தியது. இந்த முகாமில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் 550 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கினார். இதில் தமிழ்நாடு ஜெயின் சிறுபான்மை ஆணைய உறுப்பினர்கள் பியாரிலால் பிடாலியா, ரமேஷ் மூத்தா, ரதன்கன்வார் பவர்லால் கோதி பெண்கள் கல்லூரி தாளாளர் அஜித் கோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் டாட்டியா கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை கடந்த 42 ஆண்டுகளாக ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் வழங்கி வருகிறது. இதுவரை, 12 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் இதனால் பயன் அடைந்துள்ளனர். இன்றைய முகாமின் மூலம் மேலும் 550 பேரின் வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வழியாக மதுரைக்குப் புதிய ரயில்கள்
காரைக்குடி, பிப்.27 மயிலாடுதுறையில் சோழன் விரைவு ரயிலை இணைக்கும் வகையில், காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை ஒரு ரயில் இயக்கப்படும். அதேபோல, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் ரயிலை மதுரை வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையில் 70 ரயில்வே கேட்டு களுக்கு பகல்நேரத்தில் பணியாற்றும் கேட் கீப்பர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இரவுநேர கேட் கீப்பர்களாக மேனாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இரவுநேர கேட் கீப்பர்கள் நியமனத்துக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியாபள்ளி, வேளாங்கண்ணி ரயில்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகாவால் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் கைது
ராமேசுவரம், பிப்.27 எல்லை கடந்து மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர் கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. எல்லை கடந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடும் மற்றும் காரைக்காலை சேர்ந்த 78 மீனவர்கள் வரை கடந்த 26 நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.எனினும், அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதுவரை மீனவர்களில் 21 பேர் இலங்கையால் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment