கொல்கத்தா, பிப்.25 மேற்கு வங்காளத்தில் வரலாற்றில் முதல்முறையாக சட்டமன்றக் கூட்டம் நள்ளிரவில் நடைபெற உள்ளது.
மேற்குவங்காள சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தை நடத்த ஆளுநர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7ஆம் தேதி நள்ளிரவில் சட்டமன்றக் கூட்டம் ஆரம்பிக்க உள்ளது.
சட்டமன்றக் கூட்டம் தொடர்பாக ஆளுநருக்கு மாநில அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தில், சாதாரண தட்டச்சு பிழையாக பகல்பொழுதை குறிக்கும் ஆங்கில குறியீடான ஏ.எம். என்பதற்குப் பதிலாக, இரவு நேரத்தை குறிக்கும் பி.எம். என்ற குறியீடு, இடம் பெற்றுவிட்டது.
இருந்தாலும் பிழை நேர்ந்ததன்படி அசாதாரணமான நிலையில் நள்ளிரவில் சட்டமன்றத்தை கூட்டலாம் என்று பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்டதால், மம்தா தலைமையிலான சட்டமன்றத்தை நள்ளிரவில் கூட்ட ஆளுநரும் அழைப்பு விடுத்துள்ளார். நள்ளிரவில் கூட்டத்தை கூட்டுவதானால், சட்டசபை உறுப்பினர்கள் நள்ளிரவில் கண்விழித்து கூட்டத்தில் ஆஜராக வேண்டும். ஆளுநரும், கூட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்த வேண்டும்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை கத்தார் வழியாக தாயகம் அழைத்து வர ஒன்றிய அரசு ஏற்பாடு
புதுடில்லி, பிப்.25 உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை கத்தார் வழியாக தாயகம் அழைத்து வர ஒன்றிய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கி யுள்ளது. அங்கு தமிழ்நாட்டு மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனின் வான்வழிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க இயலவில்லை.மாற்றுவழியாக உக்ரைனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்துவந்து பின்னர் கத்தாரில் இருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை உக்ரைன் நாட்டுக்கான இந்திய தூதரகம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment