சென்னை, பிப். 27- மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் இணைய வழி 37ஆவது கருத்த ரங்கில் அறிஞர்பெருமக்கள் பகுத்தறிவுப் பொழிவு 20.2.2022 ஞாயிறு காலை 11 மணிக்கு மாநில பகுத்தறிவாளர் கழக இணைய வழி கருத்தரங்கம் - 37 தொடங்கியது. கருத் தரங்கிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலை வர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை புரிந்தோரை பகுத்தறிவு பயிற்சி தேர்வில் இரண்டாமிடம் பெற்ற தருமபுரி பழைய இண்டூர் கு.அருள்மொழி வரவேற்று உரையாற்றினார்.
பேராசிரியர் முனைவர். வி.இராமலெட்சுமி
நிகழ்வில் பகுத்தறிவு பயிற்சித் தேர்வில் இரண்டமிடம் பெற்ற ஆலங்குளம் பேராசிரி யர் முனைவர். வி.இராமலெட்சுமி தொடக்க உரையாற்றினார்.
அவர் தனது தொடக்க உரையில், இன் றைய தலைப்பு.. வேதங்கள்... புராணங்கள்...? மற்றும் ஒரு கேள்விக்குறி. இந்தக் கேள்விக் குறியே மிக முக்கியமானதாக நான் கருது கின்றேன். நிறைய கேள்விகள் இந்தத் தலைப்பையொட்டி எனக்குள் எழுகின்றன.
வேதங்கள்.. புராணங்கள் என்பது என்ன? இவை யாரால் கட்டமைக்கப்பட்டது?
ஏதாவது உண்மையான கருத்துகள் இருக்கிறதா? கலாச்சாரப் பண்பாட்டிற்கும் பொருந்தாத கட்டுக்கதைகளின் தொகுப்பா? சிந்தனைகள் எதுவும் இருக்கிறதா? ஏதாவது பொருளாதார நன்மைகள் இருக்கிறதா? மாநில, நாட்டின், உலக முன்னேற்றத்தை, பொருளாதார ஏற்றத்தை, சமாதான, சகோ தரத்துவத்தை நிலை நாட்டுமா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கத் தூண்டு வதாக இருக்கின்றது இத்தலைப்பில் உள்ள கேள்விக்குறி.
இளையதலைமுறையிடம் பகுத்தறிவைக் கொண்டு சேர்ப்போம்
பகுத்தறிவு என்பதே எதையும் கேள்வி கேட்பது என்பதுதான். அதன்மூலம் கிடைக் கும் உண்மையான காரணங்களின் அடிப் படையில் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப் பதும் நம் தர்க்க ரீதியிலான சிந்தனைக்கு உட்பட்டதுதான்.
இந்தப் பகுத்தறிவை இளைய தலைமுறை யிடம் கொண்டு சேர்ப்பது நம் தலையாய கடமையாக இருக்கிறது. நாம் இன்னும் சில வலிமையான காரணங்களோடு சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில்தான் இருக்கிறார்கள். நம் பணி சற்று எளிதாகவே நிறைவேறிவிடும்.
சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மிக சீக்கிரமே மறுக்கும், வெறுக்கும், உதறி விடும் மனநிலை கொண்டதாகத்தான் இந்தத் தலைமுறை இருக்கின்றது.
சூரிய நமஸ்கார புரட்டு
உதாரணமாக சூரிய நமஸ்காரம். பிரம்ம முகூர்த்தம் என்று சாத்திரங்களால் கூறப்படு கின்ற அதிகாலை 3.00 அல்லது 4.00 மணிக்கு எழுந்து குளித்து விட்டுச் சில மந்திரங்கள் சொன்னவாறே உடலை வளைத்துச் சூரி யனை நோக்கி வழிபாடு செய்வதையே சூரிய நமஸ்காரம் எனக் கருதுகிறார்கள்.
இதனால் ஒரு நன்மையும் சூரியனிட மிருந்து நமக்குக் கிடைக்கப் போவதில்லை. உடலை வளைத்து வழிபாடு செய்வதனால் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் சில நன்மைகள் ஏற்படலாம். ஆனால் சூரியனிடமிருந்து எந்த விதமான நன்மையும் வழிபாட்டின்போது ஏற்பட வாய்ப்பில்லை.
அறிவியல், மருத்துவ தரவுகள், சூரிய னிடம் இருந்து இயற்கையான முறையில் (vitamin D) வைட்டமின்-டி யைப் பெற வேண்டுமானால் காலை 10.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை உள்ள கால இடைவெளிகளில் வெயில் நம் உடலில் படுமாறு சிறிது நேரம் நிற்பதே சிறந்தது எனத் தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஏன் சூரியனை வழிபட வேண்டும்? சூரியனை வழிபடுவது என்பது அறிவற்ற செயல்தான். இப்படி வலி மையான அறிவியல், மருத்துவக் காரணங்க ளோடு எடுத்துச் சொன்னால் இன்றைய இளம் தலைமுறையினர் அதனை ஏற்றுக் கொண்டு மடமைத்தனம் மற்றும் மூடத்தன மான பழக்கங்களிலிருந்து விடுபட்டு முன் னேற்றப் பாதையில், பெரியாரின் வழியில், விழிப்புடன் பகுத்தறிவுடன் பயணிப்பார்கள்.
ஆகவே நானும் மிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். இந்தக் கருத்தரங்கம் வாயிலாக, தோழர். புஷ்பலதா அவர்களிடமி ருந்து கிடைக்கும் அறிவார்ந்த கருத்தாக்கங் களைப் பெற்றுக் கொண்டு அதனை எம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பேன் என உறுதி கூறித் தொடக்கவுரை ஆற்ற என்னைப் பணித்தமைக்கு பகுத்தறிவுக் கழ கத்தின் இக்கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ் நன்றி கூறி எனது தொடக்க உரையை நிறைவு செய்கிறேன். நன்றி... வணக்கம் என தொடக்க உரையை நிறைவு செய்தார்.
அசாம் மாநிலத்திலிருந்து வி.புஷ்பலதா
தொடர்ந்து வேதங்கள்...புராணங்கள்? என்னும் பொருளில்,பகுத்தறிவு பயிற்சி தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற அசாம் மாநிலத்தில் இருக்கும் வி. புஷ்பலதா எம்.எஸ்சி., பி.எட்., உரையாற்றினார். அவர் தனது உரையில், வேதங்கள்.. புராணங்கள். என்கிற தலைப்பில் நடந்து கொண்டிருக்கும் இந் நிகழ்ச்சிக்கான தேவை ஏன்? ஏற்படுகிறது என்பதை பார்ப்பதற்கு முன்னால், தோழர் களே! இந்த வேதங்களும் புராணங்களும் நம் மக்களை எவ்வாறு இழி நிலைக்கு தள்ளியது என்பதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டி ருக்கிறேன்.
வேதங்கள் என்ற ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் இந்த நான்கும் நம் மக்களை அடிமைகளாக இழி பிறவிகளாக, மூன்றாம் தர மக்களாக ஆக்கி வைக்கும் கொடுஞ்செயலை அரங்கேற்றின. இதன் பிறகு வந்த மனு என்னும் பார்ப்பன சட்டம் தான் நம் மக்களை அடிமைப்படுத்தும் சட்ட வழிகளைச் செய்தது. பெர்ஷிய என்னும் பாரசீகத்திலிருந்து கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வந்த ஆரியக் கூட்டம் நம்முடைய நாகரீக வாழ்க்கையைப் பார்த்து நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்தியவை தான் வேதங்கள்.
வேதங்களை அடிப்படையாகக் கொண்ட புராணங்களும் சத்திரியர்கள் என்று அழைக் கப்பட்ட மன்னர்கள் மூலமாக நம் மக்கள் மீது திணித்து நம் மக்களின் மூளைக்குள் கருநாகமாக புகுந்துகொண்டது. ஆரியர்கள் வானம் , தீ என்கிற வான்வெளி தத்துவத்தை கொண்டிருந்தனர். நம் மக்கள் இயற்கை தத்துவத்தை கொண்டிருந்தனர். ஆரியர்கள் சுரா பானம் என்கிற போதை தரும் பானத்தை அருந்துபவர்களாக இருந்ததால் சுரர்கள் என்றும், அதை அருந்தாத வாழ்வியல் நெறி கொண்ட நம் மக்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்படலாயினர். நம்மை இழிவுபடுத் தக்கூடிய பார்ப்பன இந்து மத சடங்கு முறைகளை நம் மீது திணித்து அதன் மூலம் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை பார்ப்பன கும்பல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
பெரிய புராண கட்டுக்கதைகள்
எனது அருமைத் தோழர்களே !
உதாரணத்திற்கு ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவருக்கு பார்ப்பன இந்து மதச்சடங் குகளை செய்யாவிட்டால் அவர் ஆவியாக, பேயாக அலைவார்.. அவர் சார்ந்த குடும் பத்தை பேயாக வந்து அலைக்கழிப்பார் என்று அறிவியலுக்குப் புறம்பான மூடநம் பிக்கைகளை மக்கள் மீது திணித்து, ஒவ் வொரு குடும்பமும் பார்ப்பன இந்துமத சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஏற்க செய்துள்ளனர்.
இந்தச் சடங்குகளை எல்லாம் சமஸ்கிரு தத்தில் செய்தால்தான் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்று பொய் சொல்லி நம் மக் களை ஏமாற்றி வருகின்றனர் பார்ப்பனர்கள். எல்லாரும் கேள்விப்பட்ட பெரியபுராணத்தில் உள்ளவை எல்லாம் உண்மையான கதை களா? இதில் இருக்கும் 12 திருமுறைகளை, இந்துப் புராணம் என்கிற முறையில் பத் தொன்பதாம் நூற்றாண்டு வரை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
19ஆம் நூற்றாண்டு வரை
இந்து எனும் சொல் இல்லை
ஏனென்றால் இந்து என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நாம் அறியாத ஒன்று. அது ஆவணங்களிலும் இல்லை, கல்வெட்டுகளிலும் இல்லை. அந் நாள்களில் மக்கள் தங்களை சைவர், வைண வர், சமணர், பவுத்தர் என்றுதான் வகைப் படுத்திக் கொண்டார்கள்.
காலனி ஆதிக்கத்தின் போது ஒரு வசதிக் காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தைதான் இந்து. இந்து என்பது ஒரு மதத்தின் பெயர் என்று இன்றைக்கு முழுமையாக அறியப்பட்டு, வெறும் மதத்தின் பெயராக மட்டுமல்லாமல், அதன் பெயரில் இந்து பண்பாடு, இந்து நாடு அதை விட ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இவை யெல்லாம் இந்துத்துவ அரசியல் ஆக்கப்பட்டு நம்மீது திணிக்கப்படுகின்றன.
"இந்து" என்ற சொல்லின் பொருள் குறித்து தெரிந்து கொள்ள முயன்றால் அதற் கான நூல் எதுவுமே அவர்களிடம் இல்லை.
இந்து மதம் எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப் பட்டது? எந்த தகவ லும் அவர்களாலேயே தரமுடியவில்லை. கேட்டால், இதுதான் எங்கள் பெருமை என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். பக்தி கால சைவம் இங்கு பார்ப்பனியத்தை தழைக்க வைக்க உறுதுணையாக இருந்தது. எதிர்ப்புகளை மழுங்கடித்து, எல்லாவற்றையும் பக்தி என்ற பெயரில் உள்நுழைத்து பலியாக்கி இருக்கிறது.
பக்தியின்பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
சைவத்திலும் வைணவத்திலும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்று எதுவுமே இல்லை. நந்தன் கோயிலுக்குள் நுழைய வேண்டு மென்றால் நெருப்பிலே இறங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. சுந்தர மூர்த்தியும், சம்பந்தரும் போக்குவரத்துமாக இருக்கும் சிறீரங்கத்தில் திருப்பாணாழ்வார் ஒருமுறைதான் போக முடியும். திரும்ப வர முடியாது என்பது எவ்வளவு மோசமான அச்சுறுத்தல்.
கைராசி, முகராசி, அகராசி போன்ற மூடப்பழக்கத்தினால் இன்றும் நம்முடைய பெண்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும் சூழல் நிலவுகின்றது.
புராணக்கதைகளில், கண்ணப்ப நாயனார் காட்டில் மான், பன்றிகளை வேட்டையாடி விருந்து வைத்தபோது, அதை ஏற்றுக் கொண்ட சிவனை இன்றைக்கு சைவமாக மாற்றியது யார்? ஆரிய பவன் என்று அடை யாளப்படுத்தப்பட்ட உணவகங்களில் வெங் காய சாம்பார், பூண்டு போடப்பட்ட ரசம்தான் ருசியான உணவாக இருக்கும். இந்த மூட நம்பிக்கைகளையும் பித்தலாட்டங்களையும் கண்டறிய நமக்கு ஈரோட்டு கண்ணாடி அவசியம்.
புராணங்கள், வேதங்களால் உண்டாக்கப் பட்ட மூட நம்பிக்கைகள் எல்லாம் ஆன்மீகப் பொய்களால் பூசப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. அதனால்தான் தெய்வாம்சம் என்ற மூட நம்பிக்கையின்மீது பற்று கொண்டு இன்றும் அலகு குத்துவதும், தீ மிதிப்பதும், ஜோதி டத்தை நம்புவதும் புரையோடிக் கிடக்கின்றது. இவற்றையெல்லாம் தகர்க்க தந்தை பெரியா ரின் சித்தாந்தத்தை ஆயுதமாக முன்னெடுத் துக் கொண்டு,
கடவுள் இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி
என்று நம் தந்தை பெரியாரின் முழக் கத்தை முன்வைத்து களமாடுவோம்
நன்றி! வணக்கம்.
என நிறைவு செய்தார்.
சிறப்புரையாற்றிய புஷ்பலதாவைப் பாராட்டி, பல்லாவரம் சாமிநாதன், வேண்மாள் நன்னன், ம.கவிதா, சோமசுந்தரம் ஆகியோர் சுருங்க பேசினார்கள்.
கருத்தரங்கின் இணைப் புரையையும், அடுத்த கூட்ட அறிவிப்பையும் பொதுச் செயலாளர் வி.மோகன் கூறினார்.
பகுத்தறிவு பயிற்சி தேர்வில் மூன்றாமிடம் பெற்ற தருமபுரி கடகத்தூர் பெ.லாவண்யா நன்றி கூறிட கருத்தரங்கு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment