சென்னை, மார்ச் 6 உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் தமிழர் நிதியைபயன்படுத்தி மாணவர்களை மீட்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுக்களுக்கான செலவு என ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தும் டில்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வருவதற்காக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
போர் முனைப் பகுதியில் இருந்து அண்டை நாட்டின் எல்லைப்பகுதிக்கு 35 மாணவர்களை அழைத்து வருவதற்கான பேருந்து கட்டணம் ரூ.14 லட்சத்தை அரசு செலுத்தி உள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டில்லியில் இருந்து தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு முயற்சியால் 181 மாணவர்கள் தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு
சென்னை, மார்ச் 6 தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (5.3.2022) கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 261-அய் விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 596 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தாக்குதலுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment